மர்ம மனிதன்!
சில காலங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலைச் சம்பவம் கேரளாவையே உலுக்கியது. கொலையாளியின் பெயர் சுகுமாற குருப். கொலையுண்டவர் சாக்கோ. 30 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் பணத்துக்காக நடந்த கொலை இது.
 அதாவது, தான் மரணமடைந்தது போல ஊரை நம்பவைத்து, இன்சூரன்ஸ் பணத்தைச் சுருட்ட வேண்டும் என்பதற்காக கொலை செய்திருக்கிறான் குருப். எவ்வளவு வலைவீசித் தேடியும் குருப்பைக் கண்டுபிடிக்க முடியாததால் பல பேர் அவனை ஒரு ஹீரோ போல பார்த்தனர். ஆனால், சாக்கோவின் மனைவி சாந்தம்மாவுக்குக் கேரள போலீஸ்தான் ஹீரோ.  சாக்கோ கொலையுண்டபோது சாந்தம்மா 6 மாத கர்ப்பிணி. இந்தக் கொலை வழக்கில் திருப்புமுனையாக இருந்தவர் மருத்துவர் உமாதத்தன். கேரள காவல்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த உமாதத்தன், ஒரு தடயவியல் நிபுணரும் கூட. கடந்த வாரம் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான ‘குருப்’ எனும் மலையாளப்படம், சுகுமாற குருப்பின் வாழ்க்கையைப் பேசுவதால் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறான் குருப்.கேரளாவில் உள்ள மாவேலிக்கரையின் அருகில் உள்ளது குன்னம் எனும் கிராமம். 1984ம் வருடம், ஜனவரி 21ம் தேதி நள்ளிரவில் குன்னத்தின் வயல்வெளியை ஒட்டிய பகுதியில்தான் சாக்கோ கொலை செய்யப்பட்டார்.
 கொலை நடந்ததற்கு அடுத்த நாள் வயல்வெளியில் ஒரு அம்பாஸிடர் கார் எரிந்த நிலையில் இருப்பதைப் பார்த்து கிராமவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். இறந்தவரை அடையாளம் காணமுடியவில்லை. ஆனால், அது சுகுமாற குருப்பின் கார் என்று வேடிக்கை பார்க்க வந்த கும்பலுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் மாவேலிக்கரை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஹரிதாஸுக்கு எந்தவித சந்தேகமும் எழவில்லை. அந்த நேரத்தில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது.
ஆம்; கொலை நடந்த இடத்துக்குப் பக்கத்தில் கையுறைகள், பெட்ரோல் கேன், தீப்பெட்டி, மயிர்க் கொத்துகள் கிடந்தன. அத்துடன் அந்த வயல் வெளியில் சிலரின் கால் தடங்களும் பதிவாகியிருந்தன. ஹரிதாஸுக்கு பொறிதட்டினாலும் அவரால் அதற்குமேலே செல்ல முடியவில்லை.
குருப் இறந்துவிட்டதாக அவனது உறவினர்களிடம் காவல்துறையினர் சொன்னபோது, உறவினர்கள் தேமே என்றிருந்தது மேலும் சந்தேகத்தை வலுவாக்கியது. ஆனால், உமாதத்தன் செய்த பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் சந்தேகத்தை உறுதி செய்வதுபோல இருந்தன.பிறகான காலத்தில் உமாதத்தன் எழுதிய ‘Dead men tell tales’ எனும் புத்தகம் இந்த வழக்கு குறித்த தெளிவைப் பரவலாக்கியது.
‘ஒரு மனிதன் தீயில் கருகி இறந்துபோனால் அவன் மூச்சுக்குழாயில் கொஞ்சமாவது கரிப்புகையின் எச்சங்கள் படிந்துகிடக்கும். ஆனால், இறந்து போனவனின் மூச்சுக்குழாயில் அப்படியொரு எச்சமே இல்லாததுதான் இறந்தது குருப் இல்லை என்ற சந்தேகத்தை ஆரம்பத்தில் தூண்டியது.
அதுபோல இறந்தவனின் வயிற்றில் ஆல்கஹாலுடன் விஷமும் இருந்தது. அதனால் கார் எரிந்ததால் அந்த நபர் இறக்கவில்லை என்பதும் உறுதியானது.’கொலை செய்யப்பட்டு பிறகு காரில் வைத்து எரித்ததாக உமாதத்தனின் தடயங்கள் கிடைக்க, அடுத்த அதிரடிக்கு தயாரானார் ஹரிதாஸ்.
ஆலப்புழாவில் உள்ள ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் குருப். இந்திய இராணுவத்தின் மருத்துவச் சேவைப் பிரிவின் பம்பாய்க் கிளையில் அவருக்கு வேலை. அங்கே சரசம்மா எனும் ஓர் ஏழைப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட குருப்பின் நிஜப்பெயர் கோபாலகிருஷ்ண பிள்ளை. சாக்கோ கொலைக்கு ஒத்திகையைப் போல கோபாலகிருஷ்ண பிள்ளை இறந்துவிட்டான் என்று ஒரு போலிச் சான்றிதழை இராணுவத்துக்குக்கொடுத்துவிட்டு , மனைவியுடன் அபுதாபிக்குப் பறந்துவிட்டான் குருப்.அபுதாபியில் அவனுக்கு ஒரு கப்பல் கம்பெனியில் வேலை. மனைவி சரசம்மாவுக்கு நர்ஸ் வேலை. ஜெர்மனியில் இன்சூரன்ஸ் பணத்தை அனுபவிப்பதற்காக, தன் சாவையே போலியாகச்செய்து பணத்தை லபக்கிக்கொண்ட ஒருவனைப் பற்றிக் கேள்விப்படுகிறான் குருப். உடனே சுமார் 30 லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டு கேரளாவுக்குத் திரும்பினான் குருப்.
கேரளாவில் குருப், அவனது சகலை பாஸ்கரன் பிள்ளை, குருப்பின் உள்ளூர் கார் டிரைவர் பொன்னப்பன், அபுதாபியில் குருப்புக்கு உதவியாக இருந்த சாகு ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கொலைக்கான திட்டத்தைத் தீட்டுகின்றனர். தன் சாவைப் போலியாக்குவதற்காக தன்னைப்போலவே இருக்கும் ஒருவனை கேரளாவின் பிணவறைகள், சுடுகாடுகளில் வலைவீசித் தேடினான் குருப்.
ஆரம்பத்தில் அவன் யாரையும் கொலை செய்ய விரும்பவில்லை. ஆனால், அச்சு அசலாக யாரும் அவனைப்போல இல்லை. ஒருநாள்... அதாவது கொலைச் சம்பவம் நடந்த அன்று ஹரி டாக்கீஸ் எனும் தியேட்டருக்கு அருகிலுள்ள ஒரு டீக்கடையில் ஒருவன் டீகுடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் குருப்பின் மனதில் பரவசம் உண்டாகிறது. ஆம்; அவனது தோற்றம் குருப்பை அப்படியே நகலெடுத்து வைத்ததைப் போல் இருந்தது.
குருப்பைப் போல இருந்த அந்த நபர்தான் சாக்கோ. தியேட்டர்களுக்குத் திரைப்பட ரீல்களை வினியோகிக்கும் ஒரு கடை நிலை ஊழியர் சாக்கோ. அன்று ‘பொறி’ எனும் படத்தை ஹரி டாக்கீசுக்குக் கொடுத்துவிட்டு, கர்ப்பமாக இருக்கும் மனைவியைக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார் சாக்கோ.
இந்நிலையில் ஒரு காரில் பாஸ்கரனும், பொன்னப்பனும், சாகும்; இன்னொரு காரில் குருப்பும் ஹரி டாக்கீசைக் கடந்தனர். அவர்களிடம் சாக்கோ லிஃப்ட் கேட்க, ஆடே கசாப்புக் கடைக்கு வந்துவிட்டதாக கொலையாளிகளுக்கு ஆசுவாசம்.
பின் சீட்டில் உட்கார்ந்த சாக்கோவுக்கு விஷம் கலந்த சாராயத்தைக் கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொன்றனர் பாஸ்கரனும், பொன்னப்பனும். பிறகு சாக்கோவின் உடலை பாஸ்கரனின் வீட்டுக்கு எடுத்துவந்து, தலையை தீயில் கருக்கி குருப்பின் உடைகளை மாட்டிவிட்டனர்.
பின்னர் குருப்பின் பழைய அம்பாஸிடர் காரில் பிணத்தை முன்சீட்டில் உட்கார வைத்து குன்னம் வயல் வெளிக்குக் கொண்டு வந்தனர். அங்கே வைத்துதான் காரை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் கொடூர சம்பவம் நிகழ்ந்தது. சாக்கோவின் உடலைக் கரித்துண்டாக்கிய நெருப்பு, பாஸ்கரன் கையையும் பதம் பார்த்தது.
பிறகு மூவரும் தப்பித்து வயல்வெளியைவிட்டு ஓடிவிட்டனர். இதையெல்லாம் ஹரிதாஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலையாளி யார்... எரிந்தவன் யார்... என்பதே ஹரிதாஸின் தலையைச் சுற்றவைத்தது.குருப்பின் மனைவி அபுதாபியில் இருந்ததால் பாஸ்கரன் பிள்ளை மட்டுமே ஹரிதாஸுக்குக் கிடைத்தார்.
பிள்ளை முழுக்கை சட்டையுடன் ஸ்டேஷனில் ஆஜரானார். கேரளாவில் முழுக்கை சட்டை போடும் வழக்கமில்லை. ஹரிதாஸ் சட்டைக் கையை உயர்த்தக் கூறினார். கையில் சில நாட்களே ஆன தீக்காயம்.பாஸ்கரன் பிள்ளை கதைவிட ஆரம்பித்தார். காரணம், இன்சூரன்ஸ் பணத்தில் பங்குவேண்டுமே. ‘‘சார், குருப்புக்கு விரோதிகள் அதிகம். அவர்களில் யாரோ சிலர் குருப்பை கொலை செய்திருக்கலாம்...” என்றார். “காயம் எப்படி..?” என்று மடக்கினார் ஹரிதாஸ். “சார்... நான்தான் குருப்பை கொலை செய்தேன்...” என்று அடுத்த அஸ்திரத்தை போட்டார் பிள்ளை. “அபுதாபியில் வேலைவாங்கித் தருகிறேன் என்று இழுத்தடித்துவிட்டான்...” என்று காரணம் கூறினார். பிள்ளையின் வீட்டுக்கு ஹரிதாஸ் போனார். அங்கே குருப்பின் புதிய கார் வீட்டின் பின்புறத்தில் நின்றது. “குருப்தான் கொலை செய்யப்பட்டது என்றால் புதிய காரை இங்கே வைத்துவிட்டு, பழைய காரில் ஏன் சென்றான்..?” என்று அடுத்த கிடுக்கிப்பிடியை ஹரிதாஸ் போட்டார். குருப் மட்டுமல்லாமல் அவனது டிரைவர் பொன்னப்பன் எங்கே... சாகு எங்கே... என்று ஹரிதாஸின் கண்கள் தேடத் தொடங்கின.
ஒருநாள் குருப்பின் உறவினர் என்று ஒருவர் ஹரிதாஸுக்கு போன் செய்தார். இனிமேலும் யாரும் குருப்தான் இறந்ததாக கதை விடமுடியாது என்று போனை எடுத்தார் ஹரிதாஸ். உறவினரும் ஹரிதாஸ் யூகித்த மாதிரியே கதை கட்டினார். “சார், குருப் இறக்கவில்லை. குருப் ஓட்டிச்சென்ற கார் ஒருவர் மேல் இடித்துவிட்டது.
அதனால் இறந்தவரின் உடலை எரித்துவிட்டதாக பொன்னப்பன் சொன்னார்...” என்று அந்த உறவினர் புதுக்கதையை எடுத்துவிட்டார். ஹரிதாஸால் விபத்தையும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பாஸ்கரன் பிள்ளைக்கு இனியும் மறைப்பதில் எந்தப் பயனுமில்லை என்று தோன்றியது. எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொன்னார். பிறகு பிள்ளை, பொன்னப்பன் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். இச்சூழலில் சாகுவின் பெயரில் பாஸ்போர்ட்டை தயார் செய்து கம்பி நீட்டிவிட்டான் குருப்.இதற்கிடையே ஹரி டாக்கீசின் முதலாளியின் மகனான குமார், ஹரிதாஸைப் போய் பார்த்தார். ”சார் எனது தியேட்டருக்கு ரீல் விநியோகிக்கும் சாக்கோ என்பவரைக் காணவில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள்...” என்று கேட்டுக்கொண்டார்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி இரண்டாவது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சாக்கோவின் புகைப்படத்தையும், இறந்த உடலையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். இது இந்தியாவில் செய்யப்பட்ட முதல் பரிசோதனை. இந்த இடத்திலிருந்துதான் இறந்தது சாக்கோ என்று வழக்கு மீண்டும் ஒரு புதிய திசையில் திரும்பியது.
2010ல் குருப்பின் மகனுக்குக் கேரளாவில் திருமணம் நடந்தது. குருப் வருவான் என காவல் துறையும் எதிர்பார்த்தது. சிலர் ‘குருப் வந்தான்...’ என்றார்கள். ஆனால், எதற்கும் ஆதாரமில்லை. “குருப்பை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன்...” என்று வாய்க்கு வந்ததை சிலர் உதிர்த்தார்கள். போலீஸ் எல்லா இடங்களையும் சல்லடை போட்டுத் தேடியது. இந்தியா மட்டுமல்லாமல் லாஸ் வேகாஸ் வரைக்கும் கேரள போலீஸ் தேடியது. சிலர் குருப் சன்னியாசியாக நேபாளில் வாழ்வதாக சொல்கிறார்கள். இன்னும் சிலர் அவர் இறந்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால், இதில் பாதிக்கப்பட்ட சாக்கோவின் மனைவி சாந்தம்மா, தன் கணவனின் கொலைகாரனை மன்னிக்கக்கூட தயாராக இருக்கிறாள். ஆனால், குருப்பை புகழ்பாடும் திரைப்படங்கள்தான் சாந்தம்மாவுக்குக் கொஞ்சம் மனக்கிலேசத்தைக் கொடுக்கின்றன. துல்கரின் படத்தைப் பார்த்த சாந்தம்மா “குருப்பை ஹீரோவாக காண்பிக்காதது ஆறுதல்...” என்றிருக்கிறார்.
இதற்கு முன் அடூர் கோபாலகிருஷ்ணன்கூட குருப்பைப் பற்றி ‘பின்னேயும்’ என்ற ஒரு படத்தை எடுத்திருந்தார். அடூருக்கு விமர்சனம் எல்லாம் வந்தது. பொன்னப்பன் சிறையிலேயே தூக்கு மாட்டிக்கொண்டார். குருப்பின் மனைவி கேரளாவில் தனி மரமாக வாழ்கிறார். கணவன் இறந்ததும் மனம் தளராமல் சிறுவேலைகளைச் செய்து தனது மகன் ஜித்தினைப் படிக்கவைத்திருக்கிறார் சாந்தம்மா. ஆனால், குருப் இறந்துவிட்டாரா... உயிருடன் இருக்கிறாரா... என்பது இன்னமும் மர்மமாகத் தொடர்கிறது. ஆனால், பண ஆசையால் பல குடும்பங்கள் சிதறிப்போனதைத்தான் குருப்பின் கூட்டுக்கொலை நமக்கு உணர்த்துகிறது.
டி.ரஞ்சித்
|