கியூபன் யூடியூபர்ஸ்



கியூபா என்றாலே பிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும்தான் முதலில் நம் நினைவுக்கு வருவார்கள். தவிர, கம்யூனிசமும் நம் நினைவில் நிழலாடும்.
இப்படியான நாடுகளில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் எப்படியிருக்கும் என்ற கேள்வி இயல்பாக எழும். இக்கேள்விப் பதில் தருகிறார்கள் கியூபன் யூடியூபர்ஸ்.
ஆம்; கியூபாவிலும் யூடியூப்பின் தாக்கம் பெரிய அளவில் இருக்கிறது. அதற்கு உதாரணமாக அங்கே இயங்கிவரும் முதன்மையான சில யூடியூப் சேனல்களின் விவரங்கள் இதோ...

ஜென்ட் டி ஸோனா (Gente De Zona)

எண்பதுகளுக்குப் பிறகு பனாமாவில் தோன்றிய இசை வகைமை, ரெகேடன். அடுத்த இருபது வருடங்களில் ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் ரெகேடனின் தாக்கம் அதிகமானது. குறிப்பாக 2000ம் வருடத்துக்குப் பிறகு கியூபாவில் ரெகேடனின் ஆதிக்கம் அதிகம். கியூபன் ரெகேடன் என்று சொல்லும் அளவுக்கு அங்கிருக்கும் இசைக் கலைஞர்கள் ரெகேடனில் ஜாம்பவான்களாக உருவெடுத்தனர். இதில் பிரபலமான இரண்டு இசைக்கலைஞர்கள், அலெக்சாண்டர் டெல்காடோ மற்றும் ராண்டி மால்கம். இவர்களது இசைக்குழுவின் பெயர், ‘ஜென்ட் டி ஸோனா’. இதன் பிரத்யேகமான யூடியூப் சேனல்தான் இது.

கியூபன் ரெகேடன் இசை வகைமையைச் சேர்ந்த ஆல்பங்கள், தனிப்பாடல்களால் நிறைந்திருக்கிறது ஜென்ட் டி ஸோனா. கியூபனின் இசையில் புரட்சி செய்ததோடு, உலகளவில் கொண்டு சேர்த்தது இந்தச் சேனல்தான் என்றால் அது மிகையாகாது. மே 30, 2015ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 29.5 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட கியூபன் யூடியூப் சேனலும் இதுவே. சப்ஸ்கிரைப் செய்தால் மட்டுமே இந்தச் சேனலில் வெளியாகும் அனைத்து வீடியோக்களையும் பார்க்க முடியும். இதில் பதிவாகியுள்ள வீடியோக்கள் 281 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.

லிஸ்ட்டில்லோ (Listillo)

‘ஒருபோதும் சிரிப்பதற்கு மறந்துவிடாதீர்கள். சிரிக்காமல் இருக்கும் நாளை நீங்கள் இழக்கிறீர்கள்...’ என்ற அடைமொழியுடன் கலக்கிக் கொண்டிருக்கிறது இந்தச் சேனல். கியூபாவிலிருந்து வெளியாகும் முக்கியமான நகைச்சுவை யூடியூப் சேனல் இதுதான். காரணம், இதை நிர்வகித்து வரும் லிஸ்ட்டில்லோ. முன் பின் அறிமுகமில்லாத நபர்களிடம் இவர் செய்யும் சேட்டைகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மக்களை எரிச்சலடைய வைக்காமல், நகைச்சுவையை மட்டும் வெளிக்கொண்டு வரும் இவரது திறன்தான் இந்தச் சேனலில் ஸ்பெஷல்.

நகைச்சுவை, அறிமுகமில்லாத நபர்களுடனான நேர்காணல்கள், பிராங்க் ஷோக்கள், பாலியல் சார்ந்த கேள்விகள்... என பல தலைப்புகளில் நூற்றுக்கணக்கான நகைச்சுவை வீடியோக்கள் மிளிர்கின்றன. ஆகஸ்ட் 10, 2013ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 4.92 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவாகியிருக்கும் வீடியோக்கள் 50 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியிருக்கின்றன.

பான்ஃபிலோய்மாஸ் (Panfiloymas)

கியூபாவின் பிரபலமான நகைச்சுவையாளர் மற்றும் நடிகர் லூயிஸ் சில்வா. கியூபாவில் வெளியாகும் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் லூயிஸ் நடித்திருக்கிறார். குறிப்பாக ‘Vivir del cuento’ என்ற தொடரில் இவர் நடித்த கதாபாத்திரமான பான்ஃபிலோமிற்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த தொடரும், லூயிஸின் நகைச்சுவை வீடியோக்களும்தான் இந்தச் சேனலை அலங்கரிக்கின்றன.

மொழியைத் தாண்டி லூயிஸின் நகைச்சுவை நம்மை ஈர்க்கிறது. இந்தச் சேனலில் வெளியாகியிருக்கும் பல வீடியோக்கள் 30 நிமிடங்களைத் தாண்டி ஓடுகின்றன. இருந்தாலும் வீடியோக்களைத் திரும்பத் திரும்ப கியூபவாசிகள் பார்க்கின்றனர். முக்கியமாக லூயிஸின் நகைச்சுவைத் தொடர் ஐந்து வருடங்களுக்கு மேலாக  யூடியூப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடரில் உள்ள எல்லா வீடியோக்களையும் பார்த்துவிட்ட ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். ஒரு தொடரை வைத்து கோடிக்கணக்கான பார்வைகளை அள்ளிய யூடியூப் சேனல் இதுவாகத்தான் இருக்கும். செப்டம்பர் 1, 2014ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 2.47 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் வெளியாகியிருக்கும் வீடியோக்கள் 8.4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.

ஜுவான் ஒய் லிஸ்னி டி ஃபான்ட் (Juan Y Lisney de font)

ஜுவான் ஃபான்ட்டும், அவரது மனைவி லிஸ்னி டி ஃபான்ட்டும் மத போதகர்கள். கிறிஸ்துவ மதத்தின் மீது தீவிர ஈடுபாடுள்ள இந்த தம்பதியினரின் சேனல்தான்
இது. கிறிஸ்துவ பாடல்கள், மத போதனைகள், ஜெபக் கூட்டங்கள் என ஒரு தேவாலயத்தைப் போல இயங்குகிறது இந்தச் சேனல். இதை பாதிரியார் போல ஜுவானும், லிஸ்னியும் வழிநடத்துகின்றனர்.

எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதில் ஆரம்பித்து, ஆன்மிகம், ஆன்மா என பலவிதமான விசயங்களைச் சொல்லித் தருகிறார் லிஸ்னி. பல வீடியோக்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றுகொண்டே உரை நிகழ்த்துகிறார் லிஸ்னி. கியூபாவுக்குள் ஒரு தனி தேசமாக இயங்குகிறது இந்தச் சேனல். மதம், ஆன்மா குறித்து ஈடுபாடு உள்ளவர்களுக்கு இந்தச் சேனல் நல்ல சாய்ஸ். செப்டம்பர் 14, 2012ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 2.02 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவாகியிருக்கும் வீடியோக்கள் 2.9 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியுள்ளன.

டிஜே கோண்ட்ஸ் (DJ Conds)

கியூபாவின் பிரபலமான இசைக்கலைஞர் டிஜே கோண்ட்ஸின் சேனல் இது. இவரது பாடல்கள் ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிபை, கானா, ஹங்மா போன்ற தளங்களிலும் கிடைக்கின்றன.
ஆனால், கோண்ட்ஸின் அனைத்து பாடல்களையும் வீடியோவுடன் கேட்க வேண்டும் என்றால் இந்தச் சேனலுக்கு விசிட் அடியுங்கள். சில பாடல்களை பிரீமியர் ஷோ போல யூடியூப்பில் வெளியிடுகிறார் கோண்ட்ஸ். இங்கே வெளியான பிறகுதான் மற்ற தளங்களில் வெளியாகிறது.

பெரும்பாலான பாடல்கள் 3 நிமிடங்களுக்குள் முடிவடைந்துவிடுவதால் இந்தச் சேனலுக்கு வருகை தருபவர்கள் நிறைய வீடியோக்களைப் பார்க்கின்றனர். கியூபாவின் நவீன இசைக்கு நல் அறிமுகமாகவும் திகழ்கிறது ‘டிஜே கோண்ட்ஸ்’. ஆகஸ்ட் 1, 2012ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 1.88 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவாகியுள்ள வீடியோக்கள் 8.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.               

த.சக்திவேல்