சிறுகதை - மெசபடோமியா
உதடு வரை வந்து விட்டது. ‘‘டேய் மெசபடோமியா...”. நல்லவேளை. தொண்டைக் குழியில் வார்த்தை சிக்கிக் கொண்டு விட்டது. எதிர் ஃப்ளாட்காரரும் என்னைக் கவனிக்காமல் உள்ளே போய் விட்டார். ரேவதி என்னையே முறைத்தாள்.
 “என்னை பார்க்க வந்துட்டு அங்கே யாரை சைட் அடிச்சுகிட்டு இருக்கே?”
அவள் அப்படித்தான். பட்டென்று பேசி விடுவாள். என்னவர் அவளைப் பார்த்தாலே அடுத்த அறைக்குள் போய் விடுவார். ‘‘அவளைப் பார்த்தாலே பயமாருக்கு...’’
அதற்கும் ரேவதி கமெண்ட் வைத்திருப்பாள். ‘‘என்ன பயம். அப்போ ஏதோ தப்பு பண்றார்னு அர்த்தம்?’’
‘‘ஏண்டி எனக்கும் அவருக்கும் டிவோர்ஸ் வாங்கிக் கொடுக்காமல் போக மாட்டியா?’’ ரேவதி அதற்கும் அசராமல் கண் சிமிட்டுவாள். ‘‘வேணுமா?’’
இப்போதும் கொஞ்சம் தயக்கத்துடன்தான் கேட்டேன். என்ன சொல்லித் தொலைப்பாளோ. குரல் வேறு பெருசு. மைக்கே வேண்டாம். “அவர் யாருடி?” “யாரு..?” “அந்த எதிர் ஃபிளாட். இப்போ உள்ளே போனாரே...” என்னைத் தள்ளி விட்டு எட்டிப் பார்த்தாள். “ஏ 5 ஆ?” “ம்ம்...”
“உள்ளே வா. ஒண்ணும் சுவாரசியம் இல்ல. சோகம் பிழியும்...” நல்ல வேளை. பஞ்சாயத்து வீட்டுக்குள்தான் நடக்கும். அனு அதற்குள் வீட்டுக்குள் போய் விட்டிருந்தாள். ஹால் சோபாவில் சாய்ந்து டிவியில் கவனம். “என்ன படிக்கிறா?” “செகண்ட்...’’
“மோவாய் உன்னை மாதிரியே. பிடிவாதமும் அப்படியேதானா?” ரேவதி அனுவின் முகத்தைப் பிடிக்க வந்த போது அனு நகர்ந்தாள். “அதே பிடிவாதம். வீட்டைக் கண்டு பிடிக்க கஷ்டப்பட்டியா?” “ஊஹும். லொகேஷன் அனுப்பியிருந்தியே...” “உட்கார். உடனே ஓடணுமா. இல்லீல்ல..?”
“ஏய் உதை விழும். இன்னிக்கு நைட் இங்கேதான்னு சொன்னேனே...” “உனக்குத்தான் அடிக்கடி மனசு மாறுமே...” சொல்லி விட்டு ரேவதி உதட்டைக் கடித்துக் கொண்டது புரிந்தது. கவனிக்காத மாதிரி இருந்தேன். “ஏய் குட்டி. உனக்கு ஜூஸா... டீயா?” “ஐயாம் நாட் குட்டி. அயாம் அனுராதா சங்கர்...” “டேயப்பா. ஸாரி மிஸ் அனுராதா சங்கர்...”
என் புத்தி முழுக்க எதிர் ஃபிளாட்டில் இருந்தது. அவன் மீண்டும் வெளியே வந்தால் யாரென்று பார்த்து விட வேண்டும். அதற்கு என்ன வழி? “லிஃப்ட் இருக்குன்னு சொன்னில்ல... முதல் மாடிதானேன்னு படியேறி வந்தாச்சு...”
“லெஃப்ட்ல போய் திரும்பினா... ஏய் இரு... இப்ப லிஃப்ட் பார்க்க என்ன முடை உனக்கு?” அதற்குள் நான் கதவைத் திறந்து வெளியே போய் விட்டேன். வேண்டுமென்றே எதிர் திசையில் நடந்தேன். அதென்னவோ அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் எல்லாக் கதவுகளும் பெரும்பாலும் அடைத்தே வைத்திருக்கிறார்கள். ஜன்னல் கூடத் திறந்து வைப்பதில்லை.
இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடி வரை நடந்தேன். அகலமான வராண்டா. படிக்கட்டுகளும் அகலம். சுவர் உயரமாய். எட்டிப் பார்த்தால் தெரு தெரிந்தது. ரேவதி வந்து விட்டாள். ‘‘அங்கே டீ ஆறிண்டுருக்கு...” “ஹ்ம்ம்...” “என்ன பிரச்னை உனக்கு?” “ஏ 5...”
“பழிகாரி. ரொம்ப வருஷம் கழிச்சு வரப்போறேன்னு எவ்ளோ ஆசையா இருந்தேன்...” ரேவதியின் சிரிப்பு தொலைந்து விட்டது. அதைப் பார்க்கப் பாவமாய் இருந்தாலும் என் குறுகுறுப்பு அடங்கவில்லை. “வந்து தொலை. டீ குடிச்சுட்டு என்ன வேணா பண்ணு...”
அவள் குரலின் டிசிபலோ அல்லது என் அதிர்ஷ்டமோ... ஏ 5 கதவை யாரோ தட்டினார்கள். கதவு திறந்தது. “பூ...’’கதவு முழுக்கத் திறந்து ‘மெசபடோமியா’வைப் பார்த்தேன். அவனும் என்னைப் பார்த்து விட்டான். கண்களில் என்னைப் புரிந்து கொண்ட ஜொலிப்பு.
“ஹாய்...”அவனுக்கும் வேறு வழி இல்லை. ‘ஹை...’ சொன்னான். கொஞ்சங்கூட இங்கிதமே இல்லாமல் கதவைத் தாழிட முடியாமல் காலை வைத்துக் கொண்டேன். “வாட் எ சர்ப்ரைஸ். இங்கியா இருக்கே..? இருக்கீங்க...” “ம்ம்...”
“உள்ளே வரட்டுமா..?”
பதிலை எதிர்பாராமல் நுழைந்து விட்டேன்.என் வீட்டைக் கூட இத்தனை சுத்தமாய் வைத்திருக்கவில்லை. அது அது அதன் இடத்தில். டேபிள் சுத்தமாய். சோபா உட்கார வசதியாய் வேறு உபத்திரவங்கள் இல்லாமல். சுவர் நிர்மலமாய். எனக்கு ஏகப்பட்ட படங்கள் தொங்குவது பிடிக்காது. அவன் மனைவி மீது பொறாமையே வந்து விட்டது.
எத்தனை அழகாய் நிர்வகிக்கிறாள். வேலைக்கும் போகிறவளாய் இருந்தால் டபிள் குடோஸ்.“இங்கேதான்... ரேவதி... என் ஃபிரென்ட் இருக்கா. ரொம்ப நாளா வரச் சொல்லி அழைப்பு...”“ம்ம்...”“ப்ராமிஸா உன்னைப்... ப்ச்... உங்களைப் பார்ப்பேன்னு நினைக்கல. காட் ஈஸ் க்ரேட்...”என் உற்சாகம் எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது. உள் மனதில் இந்தச் சந்திப்பிற்கு வெகுவாய் ஏங்கி இருக்கிறேன் என்று புரிந்தது. “உட்கார். என்ன சாப்பிடற?”
இப்போதுதான் அவன் இயல்புக்கு வந்திருந்தான். எதுவும் வேண்டாம் என்று தலையாட்டினேன்.“உனக்கு நினைவு இருக்கா... எவ்ளோ பேசி இருக்கோம். நான் எவ்ளோ குழந்தைத்தனமா இருந்துருக்கேன். எல்லாத்தியும் உளறி இருக்கேன்...’’ சிரிப்பும் கூச்சமும் என்னைத் தின்றன.
“அவுட் ஆஃப் டோர்ஸ்னு வெளி ஆள் உன்கிட்டதான் சொல்லி இருக்கேன். ஏன் சுருண்டு போறன்னு கேட்டதுக்கு...”அவன் உட்காரவில்லை. இயல்பாக நின்றிருந்தான். “உன் கல்யாணத்துக்கு நாங்க எல்லோரும் வந்திருந்தோம். நீ மறுபடி எப்போ ஆபிஸ் வருவேன்னு சின்னப் புள்ள மாதிரி டெய்லி உன் சீட்டைப் பார்ப்பேன். நீ வந்ததும் ஆபீஸ்னு கூடப் பார்க்காம ஓடி வந்தேன்...”பூ பாக்கட்டை டேபிள் மீது வைத்தான். வாட்டர் ஜக்கை என் முன் வைத்தான்.
“அப்புறம் என் கல்யாணத்துக்கு நீ மட்டும் வந்தாய். எனக்கு அது குறையாப் படல. உன்னைப் பார்த்த சந்தோஷம். மற்ற நண்பர்களை அறிமுகப்படுத்தினதை விட உன்னைச் சொன்னப்போ என் குரல் வித்தியாசமா இருந்ததை சங்கரும் கவனிச்சுட்டார். அப்புறம் கேட்டார். நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷலான்னு...”அவன் கைகளைக் கட்டிக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். முழுக்க பேசி விடட்டும் என்கிற வாத்சல்யமா.
“உன் நினைப்பு எப்போதாவது வரும்போதெல்லாம் பேசுவேன். அது வரை நடந்தது எல்லாம் கொட்டித் தீர்ப்பேன். மானசீகமா. எனக்கே ஆச்சர்யமா இருக்கும். துல்லியமா ஒவ்வொண்ணும் நினைவு வரும். உனக்கு ‘மெசபடோமியா’ன்னு நிக் நேம் வச்சிருந்தோம்...’’எதிரில் உட்கார்ந்து விட்டான் இப்போது.
“நீயும் நடுநடுவுல முகம் டல்லடிச்சு ஏதோ ஒரு அவஸ்தைல இருப்ப. கேட்டா ஒழுங்கா பதில் வராது. நான் மட்டும் எல்லாம் சொல்றேன் உனக்கு அந்த நம்பிக்கை என் மேல் இல்லைதானென்னு வம்பிழுத்தேன்...”சிரித்தேன் மனம் விட்டு.
என் சுபாவம் எனக்கே கேலிக்குரியதாய். இப்போது யோசித்தால் எத்தனை அபத்தமாய் நடந்திருக்கிறேன் என்று தோன்றியது. அவன் மனைவி வீட்டில் இல்லை என்று அத்தனை பதற்றத்திலும் தோன்றியது. இருந்தால் இத்தனை சத்தத்திற்கு வெளியே வந்திருப்பாளே. “நினைவு இருக்கா... ஒரு நாள் லஞ்ச் சாப்பிடும்போது சாப்பிடப் பிடிக்காமல் அப்படியே வச்சுகிட்டு உட்கார்ந்திருந்தே. என்ன ஆச்சுன்னு கேட்டதும் உன்னையும் மீறி புலம்பிட்ட...” என் நினைவுக் குதிரை அதன் கடிவாளத்தை அறுத்து விட்டு தறி கெட்டு ஓடிய தருணம். என் பேச்சு என் கை மீறிப் போவதை செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“அவங்க... உன் மனைவி... உன்னை கிட்ட நெருங்க விடறதில்லன்னு.
அதையும் குழறிக் குழறி பேசின. உன் தர்ம சங்கடம் புரிஞ்சது. புத்திசாலி மாதிரி உனக்கு அட்வைஸ்லாம் பண்ணேன்...”அவனிடம் மெலிதாய் ஒரு இறுக்கம். யாருமற்ற வனாந்திரத்தில் தனிமை விரும்பி சுற்றும்போது எதிரே அவனை அறிந்த ஒருவர் வந்து வார்த்தைகளைக் கொட்டும்போது வரும் அதிர்ச்சி போல்.இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது எனக்கே குரல் நடுங்கியது. “சொன்னா நம்ப மாட்டே. ‘ஐ ஹாவ் நாட் கிஸ்டு ஹர் டில் நௌ’னு நீ சொன்னப்போ...”அழுதேன் சொல்லி விட்டு. ஆண் பெண் பேதமற்று எனக்கு தன்னம்பிக்கை ஊட்டிய என் ஆசான் அவன். அலுவலகத்தில் யாரையாவது முழுமையாய் நம்பலாம் என்றால் அது அவன் என்கிற கான்ஃபிடன்ஸ் கொடுத்ததோடு நிற்காமல் அதைக் காப்பாற்றவும் செய்தவன். என் கடவுள். அவனுக்கா இப்படி ஒரு இல்வாழ்க்கை. “அம்மா...” அனுவின் குரல் கேட்டது. உள்ளே ஓடி வந்தாள்.
சுதாரித்துக் கொண்டு ‘‘என் பெண்...’’ என்றேன்.அவன் எழுந்து நின்று என்னைப் பார்த்து ‘வா...’ என்பது போல் சைகை செய்தான். அடுத்த அறைக்குள் நுழைந்தோம். ஏசி ஓடிக் கொண்டிருந்தது. பெரிய கட்டில். அதில்... அவன் மனைவி.“அவளைக் குளிப்பாட்டி விடறது... ட்ரெஸ் பண்ணி... சாப்பாடு ஊட்டி... விருப்ப ஓய்வு வாங்கிட்டேன்...” இதையும் இயல்பாய் சொன்னான்.
அனு அருகில் போய் அவன் மனைவியைப் பார்த்தாள். அவளும் அனுவைப் பார்த்து கண் சிமிட்டினாள். என்ன தோன்றியதோ அவளுக்கு. அனு திரும்பி ‘மெசபடோமியா’விடம் வந்து அவனைக் குனியச் சொல்லி கன்னத்தில் முத்தமிட்டாள். “யூ ஆர் ஸோ ஸ்வீட் அங்கிள்...”
- ரிஷபன்
|