பெண்ணுக்கே தெரியாமல் அவள் கர்ப்பமாகலாம்!



உலகின் முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது Cryptic Pregnancy

ஏடாகூடமாக யோசிக்க வேண்டாம். இது ‘அது’ மாதிரி மேட்டர் அல்ல!திட்டமிடாத அல்லது பெண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் கருத்தரிப்பைதான் கிரிப்டிக் பிரக்னன்சி என்கிறார்கள்.

சமீபகாலமாக இந்த அறியப்படாத கருத்தரிப்பு உலகெங்கும் அதிகரித்து வருகிறது. 
அவசர வாழ்க்கை, முறையற்ற உணவு பழக்கங்கள், தூக்கமின்மை இவற்றால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இருப்பதில்லை.எனவே மாதவிலக்கு தள்ளிப் போகும்போது அதை பெண்கள் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே, தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதையே பல பெண்கள் ஐந்து அல்லது ஆறாம் மாதம்தான் அறிகிறார்கள். 

சில நாட்களுக்கு முன் வயிற்று வலி காரணமாக மருத்துவரை சந்தித்த ஒரு பெண், அடுத்த ஒரு மணிநேரத்தில் சுகப் பிரசவத்தில் ஒரு குழந்தையைப் பெற்றது இணையம் எங்கும் வைரலானது. 

தான் கர்ப்பமாக இருந்ததையே அந்தப் பெண் உணரவில்லை / நம்பவில்லை என்பது பரபரப்பாக பேசப்பட்டது.இப்படி இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வமாக நடக்கவில்லை. மாதந்தோறும் உலகம் முழுக்க இருக்கும் மருத்துவமனைகளில் குறைந்தது ஒரு கேஸாவது இப்படி இருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.

இந்நிலையில் திட்டமிடப்படாத அல்லது அறிந்திராத கர்ப்பம்... அதனால் உண்டாகும் பிரச்னைகள் உடலளவில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அறிய பெண்கள் நல மற்றும் மகப்பேறு மருத்துவரான வினுதா அருணாச்சலத்தை சந்தித்தோம். ‘‘Cryptic pregnancy என்பது கர்ப்பிணிப் பெண், தானே கர்ப்பமாக இருப்பதை அறியாமல், நீண்ட மாதங்கள் கடந்த பிறகு அல்லது பிரசவிக்கும் தருணத்தில் உணர்வதைக் குறிக்கிறது.

சாதாரண கர்ப்பத்தில் வரும் மாதவிடாய் நின்றுவிடுதல், வாந்தி, சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் இதில் பலருக்குத் தெளிவாகத் தெரியாமல் போகும். 
கருத்தரித்த காலங்களில் குமட்டல், வாந்தி, தலைசுற்றல் போன்றவை எல்லா பெண்களுக்கும் வருவதில்லை. ஒரு சிலருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் ஆறு மாதங்கள் வரையில் வயிற்றின் அளவு கூட தெரியாமல் நடக்கும். 

30 வயதைக் கடந்த பிறகு ஒரு சில பெண்கள் இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. வயது காரணமாக ஏற்படும் உடல் பிரச்னைகள் என அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.

கருத்தரிப்பை விடுங்கள்... டியூமர் கட்டிகள், நீர்கட்டிகள் போன்றவற்றைக் கூட கவனிக்காமல் எடை அதிகரிப்பால் வயிற்றில் தொப்பை விழுகிறது என நினைக்கும் பெண்கள் இருப்பதை என்னவென்று சொல்வது..?’’ என்று கேட்கும் டாக்டர் வினுதா அருணாச்சலம், ‘கவனிக்கப்படாத கருத்தரிப்பால்’ என்னென்ன பிரச்னைகள் உருவாகும் என்பதை விவரித்தார்.

‘‘திட்டமிடாமல் வீட்டுக்கு கொண்டு வரும் செல்லப்பிராணிகளே நமக்கு மிகப்பெரும் சுமையாக இருக்கின்றன. அப்படியிருக்க திட்டமிடாமல் உருவாகி வளரும் குழந்தை என்றால் எவ்வளவு பொறுப்புகள் இருக்கும்?

இதைவிட வேதனையான விஷயம்... ஒரு சில பெண்கள் ஐந்து / ஆறு மாத காலத்தில் அபார்ஷன் செய்து கொள்ள வேண்டும் என நினைப்பது. இது தாயின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.அடுத்த பிரச்னையாக வயதைக் கடந்த கருத்தரிப்பு. 40 வயதுக்கு மேல் ஒரு சிறு குழந்தையின் பின்னால் ஓட வேண்டுமே என்கிற மனநிலை அவர்களுக்கு அழுத்தமாக மாறிவிடும். 

மணமான பெண்களுக்கே இது பிரச்னை எனில் திருமணமாகாத இளம் பெண்களின் நிலை இன்னும் சிக்கல்தானே?

இன்னொரு வகையிலும் இதைப் பார்க்கலாம். அப்போதுதான் ஒரு பெண் மூன்று நான்கு வயது வரை குழந்தையை வளர்த்து பள்ளிக்கு அனுப்பத் தொடங்கியிருப்பார். மீண்டும் அதே சூழல், குழந்தை பராமரிப்பு, அவர்கள் பின்னால் ஓட்டம்... என நினைக்கும்போதே அவர்களுக்கு சோர்வாகிவிடும். 

இதில் நல்ல வேலையில் இருக்கும் பெண்களுக்கு கூடுதலாக கரியர் மீதான அச்சமும் மன அழுத்தத்தை அதிகரித்து விடும். இதில் 40 வயதுக்கு மேல் திட்டமிடப்படாத அல்லது கவனிக்காமல் விட்ட கர்ப்பம் எனில் அவர்களால் காலம் தாண்டி கருக்கலைப்பு செய்யவும் முடியாது. 

ஏற்கனவே வீட்டில் 15 வயதைக் கடந்த மகளோ / மகனோ இருக்கும்போது இரு குழந்தைக்கும் இடையே நிலவப் போகும் வயது வேறுபாடு வீட்டில் இருப்பவர்களை அழுத்தமான மனநிலைக்கு ஆளாக்கும்...’’ என்றவர் இதற்கான தீர்வையும் Cryptic Pregnancy பிரச்னைகள் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையும் விளக்கினார்.

‘‘ஆரோக்கியம் மீதான அக்கறைக் குறைவுதான் இதற்கு முதல் காரணம். இதற்குதான் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு உடல் பரிசோதனை அவசியம் என மருத்துவ உலகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள். உடலில் உண்டாகும் சிறு மாற்றத்தைக் கூட கவனியுங்கள். 

ஆனால், அதை யாருமே செய்வதில்லை; கடைப்பிடிப்பதில்லை. உடலில் ஏதாவது பிரச்னை வந்தால் மட்டுமே மருத்துவ பரிசோதனை அல்லது மருத்துவர் ஆலோசனை என ஆரம்பிக்கிறார்கள். 

அதேபோல் சீரற்ற மாதவிடாய், ஹார்மோன் பிரச்னைகள் எனில் அதை துவக்கத்திலேயே சரி செய்தால் இப்படியான கவனிக்கப்படாத கருத்தரிப்பு பிரச்னைகள் வராது. 

ஒரு சில பெண்கள் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்குப் பிறகு கருத்தடை அறுவைசிகிச்சை செய்து கொள்கிறார்கள். தற்போது இந்த நவீன மருத்துவத்தால் கருத்தடை சிகிச்சைகள் மிக எளிமையாகவே செய்யப்படுகின்றன. 

அதேபோல் ஆண்களும் போதுமான பாதுகாப்புடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதும் அவசியம். இதில் தேவையற்ற கர்ப்பம் மட்டுமல்ல, பாலியல் சார்ந்த நோய் தொற்றுகளும் கூட வராமல் தடுக்கலாம். ஒரு சில பெண்களுக்கு குழந்தை பொருத்துதல் (Baby Implantation) - அதாவது கருப்பைக்குள் கருவை பொருத்தும் நிகழ்வு நடக்கும் தருவாயில் மாதவிடாய் போலவே இரத்தப்போக்கு ஏற்படும்.

கருப்பை சவ்வு முழுமையாக கருவை மூடும் வரையிலும் கூட சில பெண்களுக்கு இந்த ரத்தப்போக்கு நிகழும். சிலர் இது மாதவிடாய் என நினைத்து அலட்சியம் செய்வதுண்டு. அதனால்தான் மாதவிடாய் அட்டவணை சரியாகப் பின்பற்றப்பட வேண்டும் என மருத்துவர்கள் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்கள். 

ஒருவேளை இதில் மாற்றம் ஏற்படுகிறது... சீரற்ற மாதவிடாய் எனில் உடனடியாக மருத்துவர்களை சந்திப்பது அவசியம். ஹார்மோன் பிரச்னைகளை சரியான நேரத்தில் குணப்படுத்தினால் இப்படியான திட்டமிடப்படாத கர்ப்ப பிரச்னைகள் வராது. ஒரு சில பெண்களுக்கு கர்ப்பம் தரித்த அடுத்த இரண்டு மாதங்கள் கூட வழக்கமாக வருவது போல் மாதவிடாய் வரலாம். இதனால் வயிற்றில் இருக்கும் சிசு / குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 

கவனிக்கப்படாத கர்ப்பத்தை 5 மாதங்கள் கடந்து நிச்சயம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் கலைக்க முன்வர மாட்டார்கள். அதையும் மீறி கருக்கலைப்பு செய்யும் பட்சத்தில் தாயின் உயிருக்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும் அல்லது அடுத்து குழந்தைப் பேறு நடக்காமலேயே போகலாம். 

இதனால்தான் கருத்தரிப்பு என்பது சரியாகத் திட்டமிட்டு, பெரியவர்கள் கண்காணிப்பில், குறிப்பாக மருத்துவ ஆலோசனைகளின் படி நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இல்லையேல் இது குழந்தை வளர்ப்பை வாழ்நாள் முழுக்க சுமையாக மாற்றிவிடும். 

மருத்துவ ஆலோசனைப்படி வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் பெறுவது நல்லது. 

சீரான தூக்கம், ஆரோக்கியமான உணவு... இவற்றை கடைபிடித்தாலே சீரற்ற மாதவிடாய், ஹார்மோன் பிரச்னைகள், உடல் எடை அதிகரிப்பு, கவனிக்கப்படாத கருத்தரிப்பு... ஆகியவை நிகழாது...’’ என்கிறார் மருத்துவர் வினுதா அருணாச்சலம். 

ஷாலினி நியூட்டன்