ஹரியானா மகள்கள்... இந்தியாவின் தங்க மகள்கள்!



கடந்த வாரம் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் 68 நாடுகளைச் சேர்ந்த, 540 குத்துச்சண்டை வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். 
ஆண்களுக்கு 50 கிலோ எடைப்பிரிவு முதல் 90 கிலோவுக்கும் அதிகமான எடைப்பிரிவு வரை, பத்து விதமான எடைப்பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. பெண்களுக்கும் 48 கிலோ எடைப்பிரிவு முதல் 80 கிலோவுக்கும் அதிகமான எடைப்பிரிவு வரை, பத்து விதமான எடைப்பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 

இதில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை அள்ளி வந்திருக்கின்றனர். இந்த நான்கு பேரும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மீனாக்‌ஷி ஹூடா

ஹரியானாவின் ரோஹ்டாக் மாவட்டத்திலுள்ள ரூர்க்கி எனும் கிராமத்தில் பிறந்தவர், மீனாக்‌ஷி. இவரது தந்தை ஸ்ரீகிருஷ்ணன் ஒரு ஆட்டோ ஓட்டுநர்.  ஸ்ரீகிருஷ்ணனுக்கு மீனாக்‌ஷியுடன் சேர்த்து, நான்கு குழந்தைகள். இதில் இளையவர், மீனாக்‌ஷி. அதனால் அவர் விருப்பப்படி வாழ்வதற்கான சலுகைகள் கிடைத்தன. 

ஸ்ரீகிருஷ்ணன் குடும்பத்தில் விளையாட்டுத்துறையில் கால்பதித்த முதல் நபரே மீனாக்‌ஷிதான். விஜய் ஹூடா என்பவர் உள்ளூரில் நடத்தி வந்த குத்துச்சண்டைப் பயிற்சி மையத்தில் மீனாக்‌ஷி சேரும்போது, அவரது வயது 12. தனது மகள் குத்துச்சண்டைப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தது குறித்து தந்தைக்கு உடன்பாடில்லை. காரணம், அங்கே கடைப்பிடிக்கும் உணவுமுறைக்கே தனியாக செலவு செய்ய வேண்டும்; பயிற்சிக் கட்டணம் வேறு. 

குடும்பத்தின் அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்ததால், இச்செலவுகளைச் சமாளிப்பது கடினம் என்று தந்தை நினைத்தார். 

இந்நிலையில் விஜய் ஹூடாவே மீனாக்‌ஷிக்குப் பொருளாதார ரீதியாக உதவ முன்வந்தார். கிருஷ்ணனும் முழுமனதோடு மீனாக்‌ஷியைக் குத்துச்சண்டைப் பயிற்சிக்கு அனுப்பினார்.
2017ம் வருடம் சப்-ஜூனியர்களுக்கான போட்டியில் பங்கேற்று, சாம்பியன்ஷிப்பை வென்றார் மீனாக்‌ஷி. 2019ம் வருடம் தேசிய அளவில் நடந்த இளம் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கிடையிலான போட்டிகளிலும் வென்றார். 

2021ல் சீனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தைத் தட்டினார். அதற்கு அடுத்த வருடம் ஆசிய அளவில் நடந்த போட்டியில் பங்கேற்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதில் 52 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். சமீபத்தில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், 48 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில் பங்கேற்று, உலகின் முன்னணி வீராங்கனைகள், ஒலிம்பிக் சாம்பியன்களை எல்லாம் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார். இதுவரை ரூர்க்கி கிராமத்தில் பிறந்தவர்களில் முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் மீனாக்‌ஷிதான். 

ஜெய்ஸ்மின் லம்போரியா

ஹரியானாவில் உள்ள பிவானி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்தவர், ஜெய்ஸ்மின் லம்போரியா. குத்துச்சண்டை குடும்பத்தில் பிறந்ததால் இயல்பாகவே ஜெய்ஸ்மினுக்கும் அந்த விளையாட்டின் மீது ஈர்ப்பு உண்டாகியது. 

ஆம்; ஜெய்ஸ்மின்னின் தாத்தா சந்தர் பான் லம்போரியா புகழ்பெற்ற மல்யுத்த வீரராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்மின்னின் மாமாக்களான சந்தீப் சிங்கும், பர்வீந்தர் சிங்கும் குத்துச்சண்டைப் போட்டிகளில் தேசிய சாம்பியன்கள். 

இவர்களிடம்தான் பயிற்சி பெற்றார், ஜெய்ஸ்மின். 2021ம் வருடம் துபாயில் நடந்த ஆசியன் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்ற ஜெயஸ்மின், வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

இதற்கு அடுத்த வருடம் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்று, நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். சமீபத்தில் நடந்து முடிந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட ஜெய்ஸ்மின் தங்கப்பதக்கத்தை தன்வசமாக்கினார். 

பூஜா ராணி

ஹரியானாவின் பிவானி மாவட்டத்திலுள்ள நிம்ரிவாலி எனும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர் பூஜா ராணி. இவரது தந்தைக்கு மகள் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபடுவது குறித்து கொஞ்சம் கூட விருப்பமில்லை. 

அதனால் தந்தைக்குத் தெரியாமல், ரகசியமாக ஹவா சிங் குத்துச்சண்டைப் பயிற்சி மையத்தில் சேர்ந்தார் பூஜா. ஒரு நாள் பயிற்சியின்போது பூஜாவுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. காயம் சரியாகும் வரை நண்பர்களின் வீட்டில் தங்கியிருந்தார். 

மகளின் குத்துச்சண்டை ஆர்வம் தந்தைக்குத் தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் பூஜாவைத் தடுத்து வைத்திருந்தார் அவரது தந்தை. 

பூஜாவின் பயிற்சியாளர் சஞ்சய் குமார் ஷியாரோன் வீட்டுக்கு வந்து பூஜாவின் தந்தையிடம் பேசிய பிறகும்கூட, அவர் மகளின் விருப்பத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

ஆனாலும் தனது விருப்பத்தில் உறுதியாக இருந்தார் பூஜா. தந்தையுடனான ஆறு மாதப் போராட்டங்களுக்குப் பிறகு, தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் பூஜா பங்கேற்க தந்தை ஒப்புக்கொண்டார். 

2009ம் வருடம் ஹரியானாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனையான ப்ரீத்தி பெனிவாலைத் தோற்கடித்து மாநில அளவிலான சாம்பியன் பட்டத்தைத் தன்வசமாக்கினார் பூஜா. 

இதற்குப் பிறகு தெற்காசியன் கேம்ஸ், ஆசியன் சாம்பியன்ஷிப், ஆசியன் கேம்ஸ் என சர்வதேச அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றார். 

சமீபத்தில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், 80 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட பூஜா, வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். 

நுபுர் ஷியோரன்

ஹரியானாவில் உள்ள உமெர்வாஸ் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நுபுர் ஷியோரன். இவரது இரத்தத்திலேயே குத்துச்சண்டை இருக்கிறது. ஆம்; இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான ஹவா சிங்கின் பேத்தி இவர். இந்தியாவின் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீராங்கனையாக வலம் வரும் நுபுர், ஐந்து முறை தேசிய சாம்பியன் பட்டத்தைத் தட்டியிருக்கிறார். 

கடந்த 2024ம் வருடம் நடந்த பிரிக்ஸ் கேம்ஸில் பங்கேற்ற நுபுர், வெண்கலப் பதக்கத்தை வென்றார். கடந்த ஜூலை மாதம் கஜகஸ்தானில் உள்ள ஆஸ்தானா நகரில் குத்துச்சண்டைக்கான உலகக் கோப்பை போட்டி நடந்தது. 

இதில் பங்கேற்ற நுபுர், தங்கப்பதக்கத்தை தன்வசமாக்கினார். இதுபோக கடந்த வாரம் லிவர்பூலில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், 80 கிலோவுக்கும் அதிகமான எடைப்பிரிவில் போட்டியிட்ட நுபுர், வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.l 

த.சக்திவேல்