2 லட்சம் பித்தப்பை கற்களை சேகரித்திருக்கிறார் இந்த மருத்துவர்!



பொதுவாக தபால்தலைகள், நாணயங்கள், கைக் கடிகாரங்கள், அந்தக் காலத்து கார்கள் உள்ளிட்ட விதவிதமான பொருட்கள்தான் சேகரிப்பாளர்களின் பட்டியலில் இருக்கும். 
ஆனால், ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த மருத்துவரோ ரொம்பவே வித்தியாசமாக பித்தப்பைக் கற்களை சேகரித்து வருகிறார். அதுவும் ஒன்றிரண்டு அல்ல, சுமார் இரண்டு லட்சம் பித்தப்பைக் கற்கள். உலகிலேயே இது மிகப்பெரிய சேகரிப்பு எனச் சொல்லப்படுகிறது. 

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியராக இருப்பவர் மருத்துவர் ஜீவன் கன்காரியா.
அங்கே புகழ்பெற்ற லேப்ராஸ்கோபிக் மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்கிறார். இதில் பேரியாட்ரிக் என்பது உடல் பருமன் தொடர்பான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையைக் குறிக்கும். பெரும்பாலான மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் பித்தப்பைக் கற்களை குப்பையென தூக்கி எறிந்துவிடும். 

ஆனால், மருத்துவர் ஜீவன் கன்காரியாவுக்கோ இது மதிப்புள்ள ஒரு பொருளாக இருக்கிறது. இதன்மூலம் அவர் பித்தப்பையில் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த பித்தப்பைக் கற்கள் எல்லாம், அவர் கடந்த 22 ஆண்டுகளில், சுமார் 21,000 பித்தப்பைகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியபோது கிடைத்தவை. இதனை கவனமாக சுத்தம் செய்து, வகைப்படுத்தி, அழகாகப் பெயரிடப்பட்ட, திரவம் நிரப்பிய குப்பிகளில் பாதுகாக்கிறார். இவற்றை அவர் தன்னுடைய தனிப்பட்ட கிளினிக்கில் பொக்கிஷமாக வைத்துள்ளார். 

‘‘இந்தச் சேகரிப்பு வழக்கமான ஒரு அறுவை சிகிச்சை முறையாகத்தான் தொடங்கியது. இப்போது பித்தப்பை நோய் பற்றிய உலகளாவிய புரிதலுக்கு முக்கியமான பங்களிப்பாக மாறியுள்ளது...’’ என உற்சாகமாகக் குறிப்பிடுகிறார். அவரின் இந்தச் சேகரிப்பில் ஒரு பித்தப்பையிலிருந்து எடுக்கப்பட்ட 11 ஆயிரத்து 816 கற்களும் உள்ளன. இவை கடந்த 2016ம் ஆண்டு ஒரு தொழிலதிபரின் பித்தப்பையிலிருந்து அகற்றப்பட்டவை. அப்போது இந்தச் செய்தி அத்தனை வைரலானது.  

உத்தரபிரதேசத்தின் மதுரா அருகே உள்ள பகல்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் அந்தத் தொழிலதிபர். கடுமையான அடிவயிற்று வலி காரணமாக ஜீவன் கன்காரியாவிடம் வந்துள்ளார்.

அவரை சோதித்ததில் பித்தப்பை நார்மல் அளவைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருப்பது தெரிந்தது. அதாவது அவரின் பித்தப்பை முழுவதும் கற்களாகவே இருந்துள்ளது. பின்னர் இவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார் மருத்துவர் ஜீவன் கன்காரியா. இதிலுள்ள கற்களை துல்லியமாக எண்ணுவதற்கு மட்டும் மூன்று நாட்கள் பிடித்ததாகச் சொல்கிறார் அவர். 

பொதுவாக பித்தப்பையில் மூன்று விதமான கற்கள் சேரும். ஒன்று கொழுப்பினால் சேரக்கூடியது. இரண்டாவது ரத்த சிவப்பணுக்களின் முறிவால் பிலிருபின் அளவு உயர்ந்து உருவாகும் நிறமி கற்கள். மூன்றாவது இவை இரண்டின் கலவையால் உருவாகும் கற்கள். இந்த மூன்று கற்களும் அந்தத் தொழிலபதிரின் பித்தப்பையில் இருந்துள்ளன. 

இதுமட்டுமல்ல. மருத்துவர் ஜீவன் கன்காரியா நான்கு முறை அறுவை சிகிச்சைக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். முதலில, லேப்ராஸ்கோபி மூலம் மிக நீளமான அதாவது 25.8 செ.மீ. பித்தப்பையை அகற்றியதற்காக கின்னஸில் இடம்பெற்றார். பின்னர், 2015ம் ஆண்டு இரண்டு வயது சிறுவனின் பித்தப்பையை லேப்ராஸ்கோபி மூலம் அகற்றியது சாதனையானது.  பின்னர் 2016ம் ஆண்டு 30 செமீ நீளமுள்ள பித்தப்பையை அகற்றி பழைய சாதனையை முறியடித்து கின்னஸில் இடம்பிடித்தார். 

இதனையடுத்து 2019ம் ஆண்டு பிறந்து 217 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் பித்தப்பையை அகற்றி மற்றொரு சாதனை செய்தார். இப்படியாக கிடைத்த பித்தப்பைக் கற்களே இப்போது அவரின் சேகரிப்பை அலங்கரிக்கின்றன. 

அவரின் இந்தச் சேகரிப்பு பல்வேறு விஷயங்களையும் சொல்கின்றன. குறிப்பாக பித்தப்பைக் கற்கள் பற்றிய காலாவதியான அனுமானங்களை எல்லாம் சவால் செய்கின்றன. ஒருகாலத்தில் பித்தப்பைக் கற்கள் என்றால் அது கொழுப்புள்ளவர்கள், நாற்பது வயதைக் கடந்தவர்கள், பெண்கள், வசதியானவர்கள் ஆகியோரையே பாதிக்கும் எனக் கருதப்பட்டது. 

ஆனால், இந்தச் சேகரிப்பில் 2 வயது குழந்தையிடமிருந்து அகற்றப்பட்ட பித்தப்பைக் கற்களும் உள்ளன. 109 வயது நோயாளியிடமிருந்து வெளியேற்றப்பட்ட பித்தப்பைக் கற்களும் இருக்கின்றன.

இந்நிலையில் சிறிய கற்கள் எந்தளவுக்கு ஆபத்தானவை என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார் மருத்துவர் ஜீவன் கன்காரியா. இது கணைய அழற்சிக்கு வித்திடலாம். பெரிய கற்களாக இருந்தால் அவை பித்தப்பை புற்றுநோய்க்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கிறார். 

அத்துடன் கற்களை பகுப்பாய்வு செய்து தடுப்பு உத்திகள் குறித்தும், சிகிச்சைக்கான புதிய கண்டுபிடிப்புகள் பற்றியும் ஆராய்கிறார். அவரின் ஆராய்ச்சியில் கிராம மக்களை ஒப்பிடும்போது நகர் மக்களிடையேதான் பித்தப்பைக் கற்கள் பிரச்னை அதிகமிருப்பதாகச் சொல்கிறார். காரணம், கிராமப்புற மக்களைவிட நகர்ப்புற மக்கள் ஃபாஸ்ட் புட், எண்ணெய் ஐயிட்டங்கள், அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை அதிகமாக எடுக்கின்றனர். நார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளவற்றை குறைவாகவே உட்கொள்கின்றனர் என்கிறார். 

இதுமட்டுமல்ல, மருத்துவர் ஜீவன் கன்காரியா ஒவ்வொரு பித்தப்பையை அகற்றும்போதும் அதனை histopathology test எனும் திசுநோயியல் சோதனைக்கு உட்படுத்துகிறார். இது அறிகுறிகள் இல்லாத நோயாளிகளுக்கு பித்தப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய வழிவகுக்கிறது. அவரின் இந்தச் சேகரிப்பும், ஆய்வும் மருத்துவ உலகை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.

ஹரிகுகன்