உலகம் ரைட்ல சுத்தினா... இந்தியா லெஃப்டுல சுத்துது!



ஆதாரத்துடன் விளக்குகிறது கேன்சர் குறித்த புள்ளிவிபரங்கள்

உலகளவில் ஆண்கள்தான் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் குறைவு. ஆனால், இந்தியாவில் இது உல்டா. அதேநேரம் புற்றுநோயால் இந்தியாவில் அதிகம் இறப்பது பெண்களல்ல; ஆண்கள்தான். ‘வேர்ல்ட் கான்சர் ரிசர்ச் ஃபண்ட்’ எனும் அமைப்பு அண்மையில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. அதில் 2022ம் ஆண்டில் உலகளவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் சுமார் 212 ஆண்களுக்கும், 186 பெண்களுக்கும் புற்றுநோய் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதாக புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது.

எண்ணிக்கை அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால் அந்த ஆண்டில் ஒரு கோடி ஆண்களுக்கும், 90 லட்சம் பெண்களுக்கும் இந்த நோய் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் வரும் புற்றுநோய்களில் பல வித்தியாசங்கள் உண்டு.பெண்களுக்கு மார்பு, கர்ப்பப்பை மற்றும் சினைப்பை புற்றுதான் பொதுவாக அதிகம் ஏற்படும். இதுதான் இந்தியாவின் நிலையும். 

ஆனால், இந்திய ஆண்களுக்கும் உலகிலுள்ள மற்றப் பகுதி ஆண்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. வாய்ப்புற்று, நுரையீரல் புற்று மற்றும் ப்ராஸ்டேட் கேன்சரால்தான் இந்திய ஆண்கள் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆண் / பெண் புற்றுநோயின் வித்தியாசமும் இந்த இருபாலாரின் வாழ்க்கைமுறைகளால் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள் மருத்துவர்கள். 

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பிள்ளை பெற்றுக்கொள்ளல், தாய்ப்பால் வழங்காதது, உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை என பெண்களுக்கு கேன்சர் வருவதற்கான காரணங்களை அடுக்கும் மருத்துவர்கள், இந்தியாவில் ஆண்கள் புகையிலை, சிகரெட், மது ஆகியவற்றை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்வதை அவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான காரணிகளாகச் சொல்கிறார்கள்.அதிலும் புகையிலையின் பங்கு இந்திய ஆண்களின் புற்றுநோயில் சுமார் 40 சதவீதம் இருப்பதாக ஆதாரம் காண்பிக்கிறார்கள். 

சரி. இந்தியாவில் ஏன் ஆண்கள் அதிகமாக இறக்கிறார்கள்?

பொதுவாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் புற்றுநோயின் வளர்ச்சி நாள்பட்டதாக இருக்கும். பலவேளைகளில் மருத்துவரை ஒரு பெண் சந்திக்கிறாள். இதன் காரணமாக தனக்கு ஏற்படும் புற்றுநோய் பற்றிய அறிகுறிகளை ஒரு பெண் விரைவில் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.

இதனால்தான் பெண்கள் புற்றுநோயிலிருந்து சீக்கிரம் குணமாகிறார்கள். ஆனால், ஆண்கள் அலட்சியமும், விழிப்புணர்வும் இல்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாக மருத்துவர்கள் கவலைப்படுகிறார்கள். 

டி.ரஞ்சித்