டியர் ஜீவாவைப் பற்றி டியர் பிரகாஷ் பாஸ்கர்!
சமூக வலைத்தளங்களில் சத்தமில்லாமல் பிரபலமாகி வருகிறது ‘டியர் ஜீவா’ திரைப்படத்தின் போஸ்டரும், டிரெய்லரும். காரணம் சின்னத் திரையில் மிமிக்கிரி செய்து மக்களை மகிழ்வித்த டிஎஸ்கே, நாயகனாக அறிமுகமாகும் படம் இது. உற்சாகமாக பேசத் தொடங்கினார் இயக்குநர் பிரகாஷ் பாஸ்கர்.
 ‘டியர் ஜீவா’ பற்றி டியர் பிரகாஷ்பாஸ்கர் என்ன சொல்கிறார்?
முதலில் தயாரிப்பாளர்களான உமர் முக்தாரையும் சதீஷையும் பாராட்டியே ஆகவேண்டும். பிரச்னையில்லாமல் இப்படம் முடிய இவர்களே காரணம். காதலர்களுக்கு இப்படம் ரொம்பப் பிடிக்கும். ‘டியர் ஜீவா’ ஃபீல் குட் ரொமாண்டிக் படம். செமயா லவ் பண்ணி, கல்யாணமானதும் கணவன் - மனைவிக்குள் ஈகோ இருந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லும் சிம்பிள் லவ் ஸ்டோரி.
டிரெய்லரை பார்த்ததும் ‘ராஜா ராணி’ படம்போல் இருப்பதாக கமெண்ட்ஸ் வருகிறதே..?
நானும் படித்தேன். இயக்குநர் அட்லியை எனக்கு பிடிக்கும். ஆனால், ‘டியர் ஜீவா’வுக்கும் ‘ராஜா ராணி’க்கும் சம்மந்தம் இல்லை. படம் பார்த்ததும் நீங்களும் அப்படித்தான்
உணர்வீர்கள்.
மறைந்த இசை மேதை சி.ஆர்.சுப்பராமனின் பேரனான ரஷாந்த் அர்விந்த், இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே நான் எடுத்த குறும் படங்கள், வெப்சீரிஸுக்கு மியூசிக் அமைத்ததும் இவர்தான். எங்களுக்குள் நல்ல ரேப்பா நிலவுகிறது. நாயகனாக டிஎஸ்கே?
நானும் டிஎஸ்கேவும் 15 வருட நண்பர்கள். இருவரும் இணைந்து பல குறும்படங்கள், மியூசிக் ஆல்பங்களில் பணியாற்றியுள்ளோம். இதுவரை டிஎஸ்கேவை காமெடியனாகவோ, மிமிக்ரி ஆர்டிஸ்டாகவோ நான் பார்த்ததே இல்லை.
அவர் பக்கா ஹீரோ மெட்டீரியல். ‘டியர் ஜீவா’ கதையை எழுதி முடித்தவுடன் எனக்கு பாய் நெஸ்ட் டோர் லுக்கில் உள்ள ஒரு ஹீரோ தேவைப்பட்டார். சட்டென்று நினைவுக்கு வந்தது டிஎஸ்கேதான். கதையைச் சொன்னேன். உடனே ஓகே சொல்லிவிட்டார். இதுவரை பார்க்காத டிஎஸ்கேவை இந்தப் படத்தில் பார்க்கலாம். காமெடி, மிமிக்ரி இது எதுவுமே இல்லாமல் கதைக்குத் தேவையான எதார்த்த நடிகராக பார்ப்பீர்கள். ஹீரோயின்..?
தீப்ஷிகா. பக்கா தமிழ்ப் பொண்ணு. திருச்சிதான்அவருக்கு சொந்த ஊர். அவருக்கு இது முதல் படம். கதைக்கு நன்றாகப் பொருந்தியுள்ளார். பிறகு ‘கேபிஒய்’ யோகி, லொள்ளு சபா உதயா, பிரியதர்ஷினி, மனிஷாஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏன் இரண்டு ஒளிப்பதிவாளர்கள்?
ஆம். அரவிந்த் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும்தான் இந்தப் படத்தின் சினிமாட்டோகிராபர்ஸ். இருவரும் எனக்கு நல்ல நண்பர்களாக இருப்பதால் இப்படத்துக்கு இரண்டு சினிமாட்டோகிராபர்ஸ் என்பது தானாகவே அமைந்தது. கதைக்கு தேவையான பிரேம்ஸ்சை இருவரும் சேர்ந்து நன்றாக கொடுத்துள்ளனர்.
2021ல் வெளியான ‘ஊமை செந்நாய்’ படத்தில் பாடலாசிரியராக பணியாற்றியிருக்கிறேன். ஆக, முதலில் பாடலாசிரியராகத்தான் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானேன். பின்புதான் நான் இயக்குநர். எனவே இப்படத்தில் பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன்.
எப்போது பெரிய ஹீரோவுடன் இணைவீர்கள்..?
நடிகர் சிவகார்த்திகேயன் அண்ணாவுடன் நான் எப்போது பேசினாலும், ‘பெரிய விஷயத்துக்காக மட்டும் வெயிட் பண்ணாதீங்க... சின்னச் சின்ன விஷயங்களை பண்ணிகிட்டே இருங்க, அது உங்களுக்கு பெரிய விஷயத்தை கொண்டுவந்து கொடுக்கும்’னு சொல்லுவாரு.
அது எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போதுவரை, அவரோட வார்த்தைகள் மட்டுமே எனக்கு சினிமாவில் இருக்க நம்பிக்கை கொடுக்குது. அதனால இப்போது இந்த சின்ன படத்தை எடுத்திருக்கேன். இந்தப் படம் நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
ரா.ரெங்கராஜன்
|