ரூ.100 கோடி மலையாளப் படங்களின் டப்பிங் இயக்குநர் இவர்தான்!
‘‘பான் இந்தியா திரைப்படம் என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. பேசும் ஒவ்வொரு வசனமும் ஸ்கிரீனில் இருப்பவரின் உடல் மொழிக்கு ஏற்ப உபயோகிக்க வேண்டும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் மலையாள பான் இந்தியா திரைப்படங்களின் டப்பிங் இயக்குநரான ஆர்பி பாலா. ‘புலிமுருகன்’ முதல் ‘எம்பிரான்’, ‘நரி வேட்டை’, ‘ஆடுஜீவிதம்’, ‘மரைக்காயர்’, தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என இதுவரை ஜெயித்த அத்தனை மலையாள ரூ.100 கோடி ப்ளஸ் பான் இந்தியா திரைப்படங்களுக்கு டப்பிங் இயக்குநர் இவர்தான்.  தயாரிப்பாளர், இயக்குநர், டப்பிங் இயக்குநர் மற்றும் வசனகர்த்தா என சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் அவ்வளவு பிசியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். டப்பிங் இயக்கம் என்றால் என்ன ?
ஒரு மொழி படத்துக்கு இன்னொரு மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வசனத்தை பேசுவது டப்பிங். ஆனால், ஒரு மொழி படத்துக்கு இன்னொரு மொழிக்கு ஏற்றவாறு பொருந்திப் போவது போல் வசனங்கள் எழுதி, ஒருசில இடங்களில் கதையிலேயே வசனங்கள் மூலம் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதையும் எழுதி பொருத்துவதுதான் டப்பிங் இயக்கம். கதை உருவாக்கத்தின்போதே நாங்களும் படக்குழுவில் இணைந்து கதை டிஸ்கஷனில் இருப்போம்.
டப்பிங் மீது எப்படி இவ்வளவு ஆர்வம்?
1996ம் ஆண்டு ஆரம்பிச்ச பயணம். 30 வருஷங்களா இந்த டப்பிங் பயணத்தில் இருக்கேன். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன். வேறு ஒரு வேலையா சென்னை வந்தப்ப நண்பர் ஒருவர் ‘டப்பிங் ஸ்டூடியோவில் ஒரு வேலை இருக்கு’னு சொன்னார். ஊர்ல நகைக்கடைல அக்கவுண்ட்ஸ் வேலைல இருந்தவன் டப்பிங் ஸ்டூடியோவுல ஆபீஸ் பாயாக சேர்ந்தேன். சினிமா ஆர்வம்தான் காரணம்.
அன்று ஆபீஸ் பாயாக அல்லது டீ பாயாக இருந்தவங்கதான் பின்னாடி பெரிய தயாரிப்பாளரா, இயக்குநரா இருக்காங்க. அவங்களை ரோல் மாடலாக எடுத்துக்கிட்டேன்.
இரண்டே நாட்கள்ல எனக்கு தியேட்டர் ஆப்பரேட்டர் வேலை அமைஞ்சிடுச்சு. அப்ப டப்பிங் ஸ்டுடியோ அல்லது கன்சோல் ரூம்களில் ஏசி இருக்காது. ஆபரேட்டர் ரூமில் நிச்சயம் ஏசி இருக்கும். இதை மனசுல வைச்சு இரண்டே நாட்களில் தியேட்டர் ஆபரேட்டர் வேலையை கத்துக்கிட்டு ப்ரமோட் ஆகிட்டேன்!
பிறகு சவுண்ட் மிக்சிங் இன்ஜினியர் டிரெயினிங் எடுத்துகிட்டு அந்த வேலையை தொடர ஆரம்பிச்சேன். எல்லோரும் வேலையை முடித்து போன பிறகு, சில படங்களை ஓடவிட்டு டப்பிங் பேசி ரெக்கார்டு செய்து பார்ப்பேன். அந்தப் பழக்கத்தால் டப்பிங் மீதான ஆர்வம் அதிகரித்தது.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக அடுத்த படம் என்ன ?
30 வருடங்கள் கொடுத்த அனுபவம் காரணமாக ‘லவ்’ படத்தை பரத் நடிப்பில் நானே இயக்கி தயாரித்தேன். அடுத்து ஒரு படம் அகோரி என்கிற தலைப்பில் உருவாக்கி போஸ்டர் வெளியானதும் ரூ.60 லட்சம் கொடுத்து ஒருவர் வாங்கிக்கிட்டார். ஆனால், இப்போது டப்பிங் திரைப்படங்களின் வேலை என்னை பிசியாக வைச்சிருக்கு. நிச்சயம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் அடுத்தடுத்து கவனம் செலுத்துவேன்.
டப்பிங்கில் அடுத்து என்னென்ன படங்கள் காத்திருக்கின்றன?
மோகன்லால் நடிப்பில் ‘ஹ்ருதயபூர்வம்’, அப்புறம் ‘பல்டி’ உள்ளிட்ட படங்கள் போயிட்டு இருக்கு. ஒரு சமயத்தில் ஒரு படம்தான். ஒரு மலையாளப் படம்... அதற்கு நான்கு அல்லது ஐந்து மொழிகளில் டப்பிங்.
இதுதான் என்னுடைய பாலிசி. நிறைய தெலுங்குப் படங்கள் கேட்கறாங்க. ஆனால், கொடுக்கிற நேரம் நமக்குப் போதாது. காசு வருகிறது என வாங்கி பையில் போட்டுக்கொண்டு ஒவ்வொரு படத்தையும் 10 நாட்களில் முடித்துக் கொடுக்க முடியாது.
ஒரு படத்திற்கு குறைந்தபட்சம் ஒன்றரை முதல் இரண்டு மாதங்களாகும். அப்படி வேலை செய்தாதான் லிப் சிங்குக்கு தகுந்தபடி வார்த்தைகளைப் பொருத்தி வசனங்கள் எழுதி டப்பிங் முடித்துக் கொடுக்க முடியும்.
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|