தமிழ் சினிமா வரலாற்றுல எங்க பட டைட்டில் புதுசு!
‘‘நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவில் ஒருவர் கூட இதுவரையிலும் இந்தத் தலைப்பை எடுக்கலை. இந்த தலைப்பு எனக்காகவே காத்திருந்த மாதிரி இருக்கு. இத்தனைக்கும் விவசாயம் குறித்து அதிகம் பேசுவதும் நம் தமிழ் சினிமாதான். அப்படி கூட ஒருவரும் இந்த தலைப்பை பயன்படுத்தலை...’’ உற்சாகத்துடன் சொல்கிறார் ‘மருதம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கஜேந்திரன். ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா, மோகன் ராஜா, மற்றும் ‘பொம்மரிலு’ பாஸ்கர் உள்ளிட்டோரிடம் துணை இயக்குநராக இவர் வேலை பார்த்திருக்கிறார்.  ‘மருதம்’..?
ஐந்திணைகளில் வயலும் வயல் சார்ந்த பகுதிகளுமே ‘மருதம்’. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த விவசாயம் சார்ந்த ஓர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கேன். விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒருத்தருக்கு வங்கி சார்ந்து ஒரு பிரச்னை நடக்குது. முடிவு என்ன என்பதே படம்.
விதார்த்..?
கதை எழுதும் போதே விதார்த் மைண்ட்ல வந்தார். எதார்த்தமான நடிகர். ஐந்து வயது குழந்தைக்கு விவசாயி அப்பா என்ற கேரக்டருக்கு பொருத்தமா இருந்தார்.விதார்த்துக்கு ஜோடியா ரக்ஷனா. இதற்கு முன்பு மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் ‘மார்கழி திங்கள்’ படத்தில் கதாநாயகியா நடிச்சவங்க. இவங்க இல்லாம அருள்தாஸ், மாறன், என்னுடைய குருநாதர் சரவண சுப்பையா சார், மாத்யூ வர்கீஸ்... இப்படி எல்லோருமே சிறப்பான நடிப்பை கொடுத்திருக்காங்க.
பேராசிரியர் பணி எப்படிப் போகிறது?
இந்தப் படத்தை முடிப்பதற்காக மூன்று மாதங்கள் விடுமுறை எடுத்திருக்கேன். ராணிப்பேட்டைதான் எனக்கு சொந்த ஊர். பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சேன். சின்ன வயதில் இருந்து சினிமா மீது ஆர்வம்.
அடையாறு திரைப்படக் கல்லூரில ஃபிலிம் டெக்னாலஜி படிச்சேன். தொடர்ந்து சரவண சுப்பையா சாரிடம் துணை இயக்குநராக வேலை செய்தேன். என்னுடைய பேட்ச் தான் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் பொம்மரிலு பாஸ்கர். அவங்களுடைய படங்களிலும் தொடர்ந்து வேலை செய்தேன்.
இப்பவும் பல இயக்குநர்களின் கதை விவாதங்கள்ல கலந்துக்கறேன். கூடவே தனியார் கல்லூரியில் திரைப்பட தொழில்நுட்ப பேராசிரியரா இருக்கேன்.இந்தப் படத்தில் வேலை செய்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் என் கூடவே பயணித்தவர்கள்தான்.
என்.ஆர். ரகுநந்தன் இசை, அருள் சோமசுந்தரம் சினிமோட்டோகிராபி, சந்துரு பி எடிட்டர். இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தை மையமாக வைத்து திரைப்படங்கள் வந்ததில்ல. நான் பார்த்து வளர்ந்த ஒரு ஊர், அங்கே இருக்கும் சமூக பிரச்னை குறித்து பேசுகிற படம். குடும்பமாக சேர்ந்து பார்க்கலாம்.
ஷாலினி நியூட்டன்
|