தலைமுறை கனவு நிஜமானது



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

                       ‘‘எல்லாருக்குள்ளும் ஒரு கனவு இருக்கும். அது எங்கப்பா தியாகராஜனுக்கும் இருந்தது. 28 வருஷமா மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்த அந்தக் கனவுக்கு இப்ப உயிர் கொடுத்திருக்கார்...’’ என்று உற்சாகமாக ஆரம்பித்தார் பிரஷாந்த். அவர் குறிப்பிட்டது லக்ஷ்மி சாந்தி மூவீஸுக்காக தியாகராஜன் இயக்கத்தில் அவர் ஹீரோவாகியிருக்கும் ‘மம்பட்டியான்’ படத்தைப் பற்றி...

28 வருடங்களுக்கு முன் தியாகராஜன் நடித்து வெளியான ‘மலையூர் மம்பட்டியான்’ அப்போதைய தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டர். இப்போது மகன் பிரஷாந்த் நடிக்க மீண்டும் ‘மம்பட்டியானை’ உருவாக்கியிருக்கிறார் தியாகராஜன்.

 தமிழ் சினிமாவில் பல முன்னுதாரணங்களுக்கு அடையாளமான பிரஷாந்த், இந்தப் படத்தின் மூலமும் இன்னொரு உதாரணத்துக்கு இலக்காகிறார். தந்தை நடித்த அதே பாத்திரத்தில் மகன் நடிப்பதும் அந்தப்படத்தை அப்பாவே இயக்குவதும் இதற்குமுன் தமிழ் சினிமா சந்தித்திராத புதுமை.

பிரஷாந்த் தொடர்ந்தார்...

‘‘அப்பா நடிச்சு வெளியான ‘மலையூர் மம்பட்டியான்’ படம் எடுக்க நேர்ந்ததே ஒரு சுவையான கதை. அப்ப முன்னணி ஹீரோவா இருந்த அப்பா, சேலம் பகுதிகள்ல ஷூட்டிங் போகும்போது காட்டுக்குள்ள வேட்டைக்குப் போவாராம். இரவில அங்கே தங்க நேரும்போது அங்கே இருக்கிற மலைவாழ் மக்கள் ‘கேம்ப் ஃபயர்’ போட்டு இந்த மம்பட்டியான் கதையைப் பாடுவாங்களாம். அப்பதான் கிராம மக்களோட காவல் தெய்வமான மம்பட்டியான் கதை தெரிஞ்சு, அதைப் படமாக்க ஆசைப்பட்டு அதை நிறைவேத்தினார். ஆனாலும் அப்ப நிறைவேத்த முடியாத சில ஆசைகள் கனவா அவர் மனசில தங்கியிருந்தது.

அது என்னன்னா, இந்தக் கதை நடந்த பகுதியான மலையூரிலேயே இந்தப்படத்தை ஷூட் பண்ண அப்ப சரியான வசதிகள் இல்லை. அதோட கிராண்டியரா சொல்லியிருக்க வேண்டிய இந்தப் படத்தை, அப்ப இருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வசதிக் குறைபாடுகள்ல சின்னதாதான் சொல்ல முடிஞ்சது. ஆனா ஸ்கிரிப்ட் பலமா இருந்ததால அப்பவே இந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு. அப்ப எப்படி இதை சொல்லணும்னு அவர் மனசுக்குள்ள தேக்கி வச்சிருந்தாரோ, அந்த விஷயத்தை இப்ப அங்குலம் பிசகாம நிறைவேத்தியிருக்கார். அதுக்காகவே எந்த காம்ப்ரமைஸும் இல்லாம அதை அவரே இயக்கியிருக்கார்.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazineஉண்மையில இந்தப்படத்தோட ஹீரோ அப்பாவோ, நானோ இல்லை. கதைதான். எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்தக்கதை மக்களால ரசிக்கப்படும். நிஜ மம்பட்டியானை வெகுஜன மக்கள் பார்த்ததில்லைங்கிறதால, மம்பட்டியான்னா அப்பாதான் கண்முன்னால வந்து நிற்பார். இந்த ஜெனரேஷனுக்கு நான் தெரிவேன்ங்கிறது எனக்குக் கிடைச்ச வாய்ப்பு. அதேபோல அந்தப்படத்துல சரிதா, ஜெய்சங்கர், கவுண்டமணின்னு நடிப்புக்கு இலக்கணமானவங்க இருந்ததைப் போலவே இந்த ஜெனரேஷன்ல அதே இடத்தை நிரப்பத் தகுதியான மீரா ஜாஸ்மின், பிரகாஷ்ராஜ், வடிவேலு நடிக்கிறாங்க. அதுல ஜெயமாலினி வந்த ஒரு கிளாமர் கலந்த குணச்சித்திரக் கேரக்டர்ல இதுல முமைத் கான் நடிச்சிருக்காங்க. இவங்களோட கோட்டா சீனிவாசராவ், விஜயகுமார், மனோபாலா, கலைராணின்னு நடிப்புல கலக்கற ஒரு குழுவே உள்ளே இருக்கு.

சாலை வசதிகள் இல்லாத மலையூர்ல பயணப்பட்டுப் படமெடுத்தது புது அனுபவம். விடியற்காலை மூணு மணிக்குக் கிளம்பினா கொஞ்சம் கார், நிறைய நடைன்னு அங்கே போய்ச்சேர ஏழு, எட்டு மணி ஆகிடும். அதேபோல மாலை நாலு மணிக்கெல்லாம் வெயில் சாய ஆரம்பிச்சு இருள் பரவ ஆரம்பிச்சுடும். சில நாட்கள் அங்கே காட்டுக்குள்ளயே தங்கியிருந்தோம். யானைகள், பாம்புகள் எல்லாம் அப்பப்ப வந்து பார்த்துட்டுப் போகும். அங்கேயிருக்க மக்கள், ‘உங்க படத்தின் மூலமாவது எங்க பிரச்னைகள் வெளியுலகுக்குத் தெரிஞ்சு எங்களுக்கு சாலை வசதிகள் கிடைக்கணும்’னு சொன்னாங்க. அப்படி நடந்தா மலைகளைச் சுத்திப் போற அவங்க கடினமான வாழ்க்கைப் பயணம் எளிதாகும்.

முந்தைய படத்துல நூறு போலீஸ்காரர்கள் மம்பட்டியானைத் துரத்தினா இதுல பத்தாயிரம் போலீஸ் மற்றும் எஸ்.டி.எஃப்.காரர்கள் துரத்தறதும், பத்து நாள்கள் ஹெலிகாப்டர் வச்சு ஷூட் பண்ணியதும் பிரமாண்ட காட்சிகளா இருக்கும்.

அப்ப இசைஞானி இசைல பாடல்கள் நாட்டையே கலக்குச்சு. இந்தப் படத்துக்கு இளைஞர்கள் மனசைக் கொள்ளையடிச்சு வச்சிருக்க எஸ்.தமன் இசையமைச்சிருக்கிறதுல, இந்தப் பாடல்களும் கலக்க ஆரம்பிச்சிருக்கு. அதுல பழைய ‘காட்டு வழி போற பொண்ணே...’ பாடலையும், ‘சின்னப்பொண்ணு சேலை...’யையும் பழைய ஜீவன் மாறிடாம ரீமிக்ஸ் பண்ணியிருக்கோம். அதுல ‘காட்டுவழி போற...’ பாடலை என் வேண்டுகோளுக்காக அப்பாவே பாடியிருக்கார். அதையே இன்னும் மாடர்னா மாத்தி புரமோஷன் பாடலா தனி ஷூட் வச்சு உருவாக்கியப்ப, அதுக்கு சிம்பு வந்து பாடிக் கொடுத்தார். பிரமாண்ட ஒளிப்பதிவுக்கு ஷாஜி குமார் கை கொடுத்திருக்கார். இப்படி இந்த ஜெனரேஷனை மனசுல வச்சு பொருத்தமான டீம் உருவாகியிருக்கிறதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு.

‘மம்பட்டியான்’ ஆடியன்ஸ்ல ரெண்டு வகை இருக்காங்க. ஒண்ணு, அந்தக்காலத்துலயே இந்தப்படத்தைப் பார்த்திருக்க முதல் தலைமுறை. இன்னொருபக்கம் ‘மம்பட்டியான்னா யார்’னு கேக்கற இளைய தலைமுறை. இந்த ரெண்டு தலைமுறைக்கும் புது அனுபவத்தைக் கொடுக்க விரும்பியிருக்கோம். நிச்சயம் கொடுப்போம்..!’’
வேணுஜி