ஜெராக்ஸ் கார்த்திகாKungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

             ‘‘உங்களுக்கு யார் வேணும்? கார்த்திகாவா... மேகியா...? நான் மேகி.... ‘கார்த்திகா’ன்னு நினைச்சு வந்திருந்தீங்கன்னா ரொம்ப சாரி...’’

 ஆட்டோகிராபோ, போட்டோகிராபோ கேட்டு நெருங்கும் ரசிகர்களிடம் முதலில் இப்படிக் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்ட பிறகே அடுத்த வார்த்தை பேசுகிறார் மேகி. சன் டி.வியில் ‘ஆண் பாவம்’ தொடரின் நாயகியான இவர், நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவின் ஜெராக்ஸாக இருப்பதால் வருகிற குழப்பம்தான் காரணம்!

‘‘ஷாப்பிங் மால், தியேட்டர்னு எங்க போனாலும் இதே குழப்பம்தான். ஆட்டோகிராப் கேட்பாங்க. கார்த்திகான்னு நினைச்சுக் கேட்கறாங்களா... இல்லை, ஒரு டி.வி நடிகையா என்னைத் தெரிஞ்சுக்கிட்டுக் கேட்கறாங்களான்னு புரியாது. ‘கோ’ படத்துல ஒர்க் பண்ணின சிலர், ஒரு இடத்துல என்னைப் பார்த்துட்டுப் பேசறதுக்காக பக்கத்துல வந்துட்டாங்க. உற்றுப் பார்த்துட்டு, ‘நீங்க கார்த்திகான்னு நினைச்சுட்டோம்’னு சொல்லிட்டு, பின்வாங்கிப் போனாங்க. உயரம், பாடி லாங்குவேஜ், கலர்னு எல்லா விஷயத்துலயும் அவங்களை மாதிரியே இருக்கிறதா சொல்றாங்க. அது எனக்கு பிளஸ்சா, மைனஸான்னே தெரியலை...’’ என்கிற மேகியின் முழுப் பெயர் மார்கரெட் திவ்யா.

‘‘மீடியாவுல பிரபலமாகணும் ங்கிறது தான் என் கனவு. அதுக்காகவே லயோலா காலேஜ்ல விஸ் காம் முடிச்சேன். மாடலிங்ல நிறைய வாய்ப்புகள் வந்தது. அதுலேருந்து நடிப்புக்கு பிரமோஷன். சன் டி.வில என்னோட முதல் தொடர் ‘நாகம்மா’. அதுல எனக்கு காட்டுவாசி கேரக்டர். இப்ப ‘ஆண் பாவம்’ல பட்டிக்காட்டுப் பொண்ணா வர்றேன். இதுவரைக்கும் எந்த சீரியல்லயும் டூயட் சாங் எல்லாம் வந்ததில்லை. முதல் முறையா ‘ஆண் பாவம்’ல எனக்கு டூயட்டெல்லாம் இருக்கு. கிட்டத்தட்ட ஒரு படத்துலயே நடிச்ச மாதிரி ஃபீலிங்...’’ என சிலிர்க்கிறவர், ராம்ப் வாக், கேட் வாக், மாடலிங் என மாதத்தின் பல நாள்களில் அல்ட்ரா மாடர்ன் பார்ட்டி. படிய வாரிய தலையும், எண்ணெய் வடிகிற முகமுமாக சீரியலில் அப்படியே உல்டா!

‘‘போலீஸ், காட்டுவாசின்னு நிறைய கேரக்டர்ல நடிச்சிட்டேன். ஆனா இந்த வில்லேஜ் கெட்டப்புக்கு எக்கச்சக்க பாராட்டு தெரியுமா? எனக்கும் இது வித்தியாசமான அனுபவம்...’’ கண் சிமிட்டிச் சிரிப்பவரின் அடுத்த திட்டம் பெரிய திரை.

அங்கதான் கார்த்திகா இருக்காங்களேம்மா..!

இசை வைட்டமின்

‘தென்றல்’, ‘மாமா மாப்ளே’ தொடர்களில் நடிக்கிற தேவிக்ருபா, பாடகி அவதாரம் எடுத்துப் பல மாதங்கள் ஆயிற்று. மேடை நிகழ்ச்சிகளில் மெல்லிசைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருக்கிற தேவிக்ருபா, விரைவில் ‘வைட்டமின் எம்’ என்கிற பெயரில் மியூசிக்கல் ட்ரூப் தொடங்குகிறாராம். ‘வைட்டமின் எம்’மில் உள்ள எம் ஃபார் மியூசிக்காம்! ட்ரூப்பில் பாட குரலழகிகள், குரலழகர்கள் வேட்டை நடக்கிறது.
 ஆர்.வைதேகி