அசினை எதிர்பபீர்கள்... அபதுல் கலாமை என்ன செய்வீர்கள்?



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


              பச்சை சோளத்தைக் காட்டினால் பாப்கார்னாகி விடும் அளவிற்கு சூடாக இருக்கிறார் மு.களஞ்சியம். அப்துல் கலாம், அசினில் ஆரம்பித்து அஞ்சலி வரை அவரது பேச்சில் வாடிவாசல் திறந்துவிட்ட காளையாய் கொம்பு சிலுப்பி வருகின்றன வார்த்தைகள். ‘பூமணி’, ‘பூந்தோட்டம்’, ‘கிழக்கும் மேற்கும்’, ‘மிட்டா மிராசு’ போன்ற படங்களை இயக்கியதுடன் கொஞ்சகாலம் நாட் ரீச்சபளில் இருந்தவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கருங்காலி’ மூலம் உள்ளேன் ஐயா சொல்லியுள்ளார்.

புதிதாக ‘தமிழர் நலப் பேரியக்கம்’ என்னும் அமைப்பைத் தொடங்கி மேடைகளில் முழக்கம் காட்டும் இவர், சீமான் உட்பட பலரையும் வறுத்தெடுக்கிறார்.

இந்த திடீர் சீற்றத்தின் நோக்கம், உள்நோக்கம் என்ன?

‘‘அண்ணன் சீமானுக்குப் போட்டியாகவோ, என்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காகவோ இந்த அமைப்பைத் தொடங்கவில்லை. இருபது வருடங்களுக்கும் மேலாக அரசியல், பொது நலத்தில் ஈடுபாடுகொண்ட ஆள் நான். இலங்கையிலும், தமிழகத்தின் பல முகாம்களிலும் ஈழத் தமிழர்களுக்கான வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என்பதுதான் என் கருத்து. சீமான், வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட பலரும் தனித்தனியாக நின்றுதான் செயல்படுகின்றனரே தவிர, ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை.

உலக நாடுகள் பல சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவித்த ராஜபக்ஷே, அங்கே முள்வேலிக்குள்ளே தமிழர்கள் சொர்க்கத்தில் வாழ்வதுபோல இருப்பதாகவும், தமிழக முகாம்களில் உள்ள அகதிகள் பிச்சைக்காரர்கள் போல வாழ்வதாகவும் தெனாவெட்டு பேட்டி கொடுக்கிறார். இந்த நிலையில் அப்துல்கலாம் இலங்கைக்குச் செல்லவேண்டிய அவசியம் என்ன?

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஜனாதிபதியாக இருந்த போது தமிழ்நாட்டின் மீது எந்த அக்கறையும் காட்டாதவர்தான் கலாம். பற்றி எரிந்த எந்தப் பிரச்னையிலாவது அவர் தலையிட்டாரா? இப்போது இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் அவர் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன? யாருக்கு பலன் பெற்றுத் தருவதற்காக அவர் இதைச் செய்கிறார்? தமிழர்கள் மத்தியில் அவரது மரியாதையும் செல்வாக்கும் பூஜ்ஜியமாகக் குறைந்துவிட்டது. தமிழர்கள்  குறிப்பாக இளைஞர்கள்  இதுபற்றிய புரிதலே இல்லாமல் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அசின் நடிக்கப்போவதாக ஒரு செய்தி. உடனே, ‘இலங்கைக்குச் சென்ற அசினை தமிழ்ப் படத்தில் நடிக்க விடமாட்டோம்’ என்று ஃபேஸ்புக்கில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த அசின் இலங்கைக்கு சென்றால் என்ன... இழவுக்குச் சென்றால் உனக்கென்ன? அசினுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இலங்கை போய் வந்த தமிழர் அப்துல் கலாமை என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி.’’

அந்தப் பிரச்னை இருக்கட்டும். மேடைகளில் சீமானைப் பற்றி அதிகம் பேசிவருகிறீர்களாமே?

‘‘சினிமாவில் என்னைவிட சீனியர் அவர். நான் நாகரிகமான முறையில்தான் அவரைப் பற்றிப் பேசுகிறேன். ஈழப்போரில் கால்களை இழந்த ஒருவருக்கு எங்கள் அமைப்பு சார்பில் மருத்துவ உதவி செய்தோம். இது சீமானுக்குப் பொறுக்கவில்லை. ‘அவர்களுக்கு உதவி செய்ய நீ யார்’ என்று என்னிடம் சண்டைக்கு வருகிறார். ‘எதுவாக இருந்தாலும் என் மூலமாகத்தான் செய்யவேண்டும்’ என்கிறார். ஈழத் தமிழர்களுக்கு எல்லா உதவிகளையும் சீமான் மூலமாகத்தான் செய்ய வேண்டும் என யாராவது சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? போனில் என்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகிறார். அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு போன் போட்டு, ‘உன்னை இரண்டு நாளில் காலி பண்ணிடுவோம், மூன்று நாளில் காலி பண்ணிடுவோம்’ என்று மிரட்டுகிறார்கள். நான் கொல்லப்படலாம். சாவுக்கு நான் பயப்படவும் இல்லை.

சீமானின் தோழர்கள் பலர் எங்கள் அமைப்பிற்கு வந்துள்ளார்கள். கண்ணிவெடி கந்தசாமி என்பவர் தலைமையில் மும்பையிலுள்ள ‘நாம் தமிழர் இயக்கத்தினர்’ பலர் எங்களுடன் இணையத் துடிக்கிறார்கள். பி.ஜே.பிக்கு சீமான் ஆதரவு தந்ததால் அவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். நாங்கள் யாரையும் இழுக்கவில்லை. அவர்களாகத்தான் வர நினைக்கிறார்கள். இதுதெரியாமல் சீமான் என்னை சீண்டக் கூடாது.

என் நோக்கத்தை சந்தேகிக்கும் அளவுக்கு யாருக்கும் நேர்மையோ, மனசோ இல்லை. காசு வாங்கிக்கொண்டு கூட்டத்துக்குப் போகும் ஆள் நான் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்து வருகிறேன். தமிழ் நடிகர்களில் எத்தனை பேர் இதுபோன்ற பணியில் ஈடுபடுகிறார்கள்? அகதி முகாம்களில் இருக்கும் மாணவ, மாணவிகள் 50 பேரை கருணாஸ் கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார். சூர்யா பல பேருக்கு கல்வி வெளிச்சம் கொடுக்கிறார். ஏழை மாணவர்களின் கல்விக்காக விஜய் உதவி செய்கிறார். இவர்கள்தான் உண்மையான தமிழ் உணர்வுள்ள நடிகர்கள்.”

சினிமாவை விட்டுட்டு அரசியலுக்கு டிராக் மாறிட்டீங்களே?

“சினிமாவை விட்டுவிடவில்லை. அடுத்த மாதம் ‘ஊர் சுற்றி புராணம்’ என்ற படத்தை இயக்கி நடிக்கவுள்ளேன். அஞ்சலி, அமலா பால், இனியா இந்த மூவரில் ஒருவர் கதாநாயகியாக நடிக்கலாம். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்பதால் இவர்களைத் தேர்ந்தெடுத்தேன்.”

சமூக அக்கறையுள்ளவராக காட்டிக் கொள்கிறீர்கள். குடும்ப விவகாரம், அஞ்சலியுடன் நெருக்கம் என நெகட்டிவ் ஏரியாவில் உங்கள் பெயர் அடிபடுகிறதே?

‘‘ஏன்... அஞ்சலியுடன் எனக்கு நெருக்கம் இருக்கக்கூடாதா என்ன? ‘கருங்காலி’ படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறேன். அடுத்த படத்திலும் நடிக்கலாம். அதற்காக சேர்த்து வைத்து எழுதினாலும், பேசினாலும் எனக்குக் கவலை இல்லை. தேவயானியை வைத்து நான்கு படங்கள் தொடர்ந்து இயக்கியபோதுகூட அவரை நான் திருமணம் செய்துகொண்டதாக எழுதினார்கள். இப்படி அஞ்சலியை திருமணம் செய்துகொண்டதாகவும் எழுதலாம். இதெல்லாம் பழகிவிட்டது.

எட்டு வருஷத்துக்கு முன்பாக அண்ணாமலையார் பற்றி ஒரு டெலி ஃபிலிம் எடுத்தேன். அஞ்சலி கேமரா முன் நின்றது அதுதான் முதல் முறை. அதன்பிறகு நகுலின் அண்ணன் மயூர் ஜோடியாக அஞ்சலியை வைத்து, ‘சத்தமின்றி முத்தமிடு’ படத்தைத் தொடங்கினேன். பிறகு ‘வாலிப தேசம்’, ‘என் கனவு நீதானடி’ என அஞ்சலியை வைத்து மூன்று படங்களைத் தொடங்கினேன். எதிர்பாராதவிதமாக அந்தப் படங்கள் நின்றுபோயின. ஆக, அஞ்சலியைக் கண்டெடுத்தது நான்தான். இன்றைக்கு யார் யாருடனோ அஞ்சலியை இணைத்துப் பேசலாம். ஆனால் எனக்கு அஞ்சலி மீது நிறைய உரிமை இருக்கிறது.

அவ்வளவுதான் சொல்லமுடியும்!’’
 அமலன்
படங்கள்: புதூர் சரவணன்