காதலில் சொதப்புவது எப்படி சினிமா விமர்சனம்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

              ஒரு காதலின் வெற்றிக்குப் பின்னால் எத்தனை சொதப்பல்கள் இருக்கின்றன என்று பட்டியல் போடும் படம். ‘அன்பே வா’வில் ஊடலாகவும், ‘குஷி’யில் ஈகோவாகவும் காலத்துக்கேற்ற மாறுதல்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் உடன்பட்டுப் போகாத காதல் உணர்வுகளையே இந்தக் காலத்துக்கேற்ற ‘சொதப்பல்களாக’ சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன்.

தன் காதல் சொதப்பல்களை சித்தார்த் சொல்ல ஆரம்பிப்பதிலிருந்து விரிகின்றன ஃபிளாஷ்பேக் காட்சிகள்.
 விரும்பி நடித்த படமானதால் அனுபவித்து நடித்திருக்கிறார் சித்தார்த். ‘பாய்ஸி’ல் பார்த்த விடலை சித்தார்த்தை மீண்டும் பார்த்தது போலிருக்கிறது. எதார்த்தமாக ஒரு விஷயத்தை அமலா பாலிடம் சொதப்பிவிட்டு, சட்டென்று அது புரிந்து அமலாவைப் பதறியபடி பார்க்கும் அப்பிராணி பார்வையில் அசத்துகிறார். ‘‘என் காதல் பிரேக் அப் ஆயிடுச்சு...’’ என்று அவர் வருத்தமாகச் சொல்லும் நொடியில் அது பாடலுக்கு ஏற்ற சிச்சுவேஷன் என்று உணர்ந்து உடன் இருக்கும் மாணவர்கள் சிட்டிகை போட, ‘‘நான் பாடற மூடுல இல்லடா...’’ என்று அவர் மறுப்பது அட்டகாசம். அப்படியும் அவரைப் பாட வைத்துவிடுகிறார்கள் என்பது வேறு விஷயம்.

சொதப்பல் டிகாக்ஷனுக்கு ஏற்ற பதத்தில் அமலா பால். அந்த அழகு முகத்துக்குள் இப்படி கோபமும், வெறுப்பும் கூட வெளிவருமா எனும் விதத்தில் அநேக பாவங்களில் அசத்தும் அமலாவுக்கு அங்கங்கே விரியும் காதல் பார்வைகளுக்கும் களமாகின்றன அகலக் கண்கள்.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineபுத்திசாலித்தனம் வழிந்தோடும் காட்சிகளும், திரைக்கதை யமைப்புமாக இயக்குநர் பாலாஜி மோகன் படத்தை நகர்த்துகிறார். ‘‘பொண்ணுங்க எப்பவுமே எதையாவது யோசிச்சுக்கிட்டே இருப்பாங்க...’’ என்று சித்தார்த் சொல்ல விரியும் காட்சியில், அமலா பால் கண்களில் படும் விஷயங்களைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க, சித்தார்த்தோ ஒன்றுமே நினைக்காம லிருக்கிறார் என்பது நமக்குப் புரிய வைக்கப்படுகிறது. ஆனால் அமலா அதை நம்பாமல், மீண்டும் பிரச்னை முளைக்கிறது. இப்படி பல காட்சிகளில் ரசனை வழிந்தோடுகிறது.

ஒரே பிரச்னையில் நகரும் கதையானதால் அதிலிருந்து வெளியே வர, சித்தார்த்தின் நண்பர்களின் காதல்கள், ஒரு நண்பனின் காதல் கல்யாணத்தில் மணப்பெண்ணின் முன்னாள் காதலர் கலந்து கொண்டு கலாய்ப்பது, அமலாவின் அப்பா சுரேஷ் விவாகரத்து வேண்டி சித்தார்த்தின் லாயர் அப்பா ரவி ராகவேந்தரிடம் வந்து பிரச்னையை உணர்ந்து கொள்வது என்று ஏகப்பட்ட கிளைக்கதை சுவாரஸ்யங்கள் வைத்திருக்கிறார் இயக்குநர். அதில் சீரியஸான சுரேஷ்  சுரேகாவின் பிரிவினை விஷயம், ‘வளையோசை கல கல கலவென...’ இசைஞானி பாடலுடன் இனிதாக முடிவடைவது அமர்க்கள எபிசோட்.

சித்தார்த்தின் நண்பர்களில் காதலிகளிடம் அடி வாங்கியே பழக்கப்பட்ட அர்ஜுனும், காதலி ‘அண்ணா’ வென்று அழைத்தும் மன முடையாமல் நின்று காதலில் ஜெயிக்கும் விக்னேஷும் பின்னி எடுக்கிறார்கள். டைட்டிலில் ‘சொதப்பல்’ என்று வைத்துவிட்டதால் எல்லாப் பிரச்னைகளும் சொதப்பல்களாகவே இனம் காணப்படுவதும், மேடை நாடகம் போல் எல்லோரும் நீள வசனங்கள் பேசிக் கொண்டிருப்பதும் குறைகள்.  

படத்தைப் படு இளமையாக மாற்றியிருப்பதில் நீரவ் ஷாவின் வானவில் ஒளிப்பதிவு முன்னிலை வகிக்கிறது. இளமை தூக்கலாக இருக்கும் எஸ்.தமனின் இசையில் பாடல்களைத் தாண்டி பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.
குங்குமம் விமர்சனக்குழு