சிறை குற்றவாளிகளை உருவாக்குகிறது



ஒரு பழுத்த படிப்பாளியின் பத்தாண்டு அனுபவம்

தமிழ் தேசிய வட்டாரங்களில் பொழிலனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. நிறைந்த படிப்பாளி. கேட்பவரின் மனதுக்குள் இறங்கி ஆட்சி செய்யும் மொழி ஆளுமை. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகன் என்பதைத் தாண்டியும் இவருக்கென தனித்த அடையாளமும் தலைமைப் பண்பும் உண்டு.

கொடைக்கானல் டி.வி டவர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 1987ல் கைதான பொழிலனுக்கு அன்று முதல் வாழ்வின் ஓர் உறுப்பானது, சிறை. விசாரணைக் கைதியாகவும், தண்டனைக் கைதியாகவும் கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா சிறைகளுக்கும் 14 முறை சென்று வந்திருக்கும் பொழிலன், சிறை குறித்த தனது கசப்பான அனுபவங்களை எழுத்திலும் பேச்சிலும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

‘‘அடிப்படைத் தேவைகளான உணவு, மருத்துவம், உடை, கல்வி... இதையெல்லாம் பொறுத்தவரை இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடவும் தமிழகச் சிறைகள் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளன’’ - பேசும்போதே ஆதங்கம் ஆர்ப்பரிக்கிறது பொழிலனின் முகத்தில். ‘‘கேழ்வரகு களி, சோளக் களி என்றிருந்த சிறை உணவில் 80க்கு பிறகு மாற்றம் வந்தது. ஆனால், தரத்தில் மாற்றங்கள் ஏதும் கிடையாது. பொங்கலுக்குள் இரண்டு மிளகுதான் புதைந்து கிடக்கும்.

பருப்புச் சோற்றில் நான்கைந்து பருப்புதான் மிதக்கும். இதற்கு கொடுக்கும் சட்னியில் புளியும், பொட்டுக்கடலையும், மிளகாய்ப் பொடியும் கலக்கப்பட்டிருக்கும். மருந்துக்கும் அதில் தேங்காய் இருக்காது. ‘ஞாயிற்றுக்கிழமைகளில் கோழிக் குழம்பும் சோறும் போடுகிறார்கள்’ என்று சிறையைப் பற்றி பெருமையாகச் சொல்வார்கள் வெளியே உள்ளவர்கள். ஆனால், பல சிறைகளில் கொடுக்கப்படும் கோழியின் ஆரோக்கியமும் தரமும் சிறைவாசிகளின் வாய்க்கும் வயிற்றுக்குமே தெரியும்.

சிறைவாசிகளில் குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகள்... அதாவது, ரிமாண்ட் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் என இரண்டு வகையினர் உண்டு. இருவருக்கும் தனித்தனி சிறைகள். ரிமாண்ட் கைதிகளுக்கு சீருடை கிடையாது. தண்டனை சிறைவாசிகளுக்கு அவர்களின் தண்டனைக்கு ஏற்ப தொகுப்புச் சிறைகளும் உண்டு; தனிமைச் சிறையும் உண்டு.

தொகுப்பு சிறை என்பது சுமார் முப்பது அடிக்கு இருபது அடி அளவுள்ள அறைகள். இதில் சுமார் 20 முதல் 30 கைதிகள் இருப்பார்கள். 1990 வரை சிறைகளில் கழிவறை கிடையாது. இயற்கை உபாதைக்கு ஒரு தட்டுதான் கொடுப்பார்கள். இந்த நாற்றத்தோடு இரவு 6 மணி முதல் காலை 6 வரை இருண்ட அறையில் உள்ள சிறைவாசி, தன் குடும்பத்தை நினைத்து மனம் புழுங்கி அழுதுகொண்டிருப்பான்.

இந்த வேதனையே அவனை தற்கொலைக்குத் தூண்டிவிடும். பலவித போராட்டங்களுக்குப் பின்பே இந்த முறையை மாற்றி இப்போது ஒவ்வொரு தொகுப்புச் சிறைக்கும் ஒவ்வொரு பொதுக் கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

சிறைவாசிகளில் பாதிக்குப் பாதி ஐம்பது வயதைக் கடந்தவர்கள். எனவே உடல்நலக் குறைவை கவனிக்க எல்லா சிறைகளிலும் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், வெறும் காய்ச்சல், தலைவலிக்குத்தான் சிறைச்சாலைகளில் மாத்திரைகள் இருக்கும். வெளி மருத்துவமனைக்குப் போகும் அளவுக்குப் பெரிய நோய் என்றால் பல தடவை அதிகாரிகளிடம் நடையாய் நடக்க வேண்டும்.

அப்படியும் அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றால் பணம்தான் பேசும். நிஜமாகவே பணம் படைத்த, அதிகார பலமுள்ள சிறைவாசிகளால் சிறையையே சொர்க்கமாக்கிக் கொள்ள முடியும். ஆனால், பெரும்பான்மையான ஏழைக் கைதிகளுக்கு அது நரகத்திலும் நரகம். திடீர் மாரடைப்பு போன்ற இடர்கள் வந்தால் வெளி மருத்துவரைப் பார்ப்பதற்கு குறைந்தது மூன்று, நான்கு மணி நேரமாவது ஆகும். அதற்குள் சிறைவாசி இறந்துவிடும் ஆபத்து அதிகம்!

ஒரு காலத்தில் சிறை அறைகளுக்குள் வெளிச்சமே இருக்காது. ஆனால் இன்று சிறைக்குள்ளேயே தனியான விளக்கும், மின்விசிறிகளும் பொருத்துவதற்கான சட்ட திருத்தங்கள் வந்துள்ளன. இவையும் ஒன்று முறைகேடாகவோ, அல்லது மிகவும் மெதுவாகவோதான் நிறைவேற்றப்படுகிறது. கேரளாவில்கூட கைதிகளுக்கு வேட்டி கட்ட உரிமை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் அரைக்கால் டிரவுசர்தான். முழுக்கால் பேன்ட்டுக்கு அனுமதி இருந்தும் இன்னும் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.

மேல் சட்டையை பனியன் போன்றில்லாமல், பட்டன் வைத்த, காலர் வைத்த சட்டை கொடுக்கவும் சட்ட திருத்தங்கள் உள்ளது. அதுவும் இங்கு இல்லை. இரவில் லுங்கி கட்டவும் தடைதான். காரணம் கேட்டால், லுங்கியால் கழுத்தை நெரித்து கொலை செய்வார்கள் அல்லது தற்கொலையோ செய்து கொண்டுவிடுவார்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். கல்லால் அடித்தே சிறையில் கொலை செய்கிறார்கள்... இதில் லுங்கி என்ன கேடு?

கடுங்காவல் சிறைவாசிகளுக்கு கட்டாய வேலை என்று ஒன்று உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கைதிகளின் குடும்பத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். திகார் சிறையில் கூட சிறைவாசிகள் ஆடு, மாடு வளர்ப்பு போன்ற ஆக்கபூர்வமான வேலைகளை சிறைக்குள்ளேயே செய்து நல்ல வருமானம் ஈட்டுகிறார்கள்.

ஆனால், இங்கே அந்த வேலையையும் ஏதோ தண்டனை போலத்தான் பார்க்கிறார்கள். புல் பிடுங்குதல், செருப்பு தைத்தல், விளையாத காட்டில் விவசாயம் செய்தல் என்று இங்கே ஒப்புக்குச் செய்யும் வேலைகளால் யாருக்கும் எந்தப் பலனும் விளைவதில்லை. இதில் கிடைக்கும் ஒரு நாள் கூலி 45 முதல் 65 ரூபாய்.

அதிலும் பாதியை சாப்பாட்டுக்கு என்று பிடித்துவிடுவார்கள். மீதியில் பாதியை சிறைவாசியால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு என்று பிடித்தம் செய்வார்கள். இப்படிப் பிடித்தம் செய்த பணம் அந்தக் குடும்பங்களுக்கு போய்ச் சேர்கிறதா எனக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை.

மத்திய சிறைகளில் ஒப்புக்கு ஒரு பள்ளிக்கூடமும் அதற்குள் ஒரு நூலகமும் இருக்கும். ஆசிரியரையோ மாணவர்களையோ அங்கே பார்ப்பது அரிது. படிப்பதற்கான சூழ்நிலையே சிறைகளில் குறைவு. ‘இவர்கள் படித்து என்ன கிழிக்கப் போகிறார்கள்’ என்பதே அதிகாரிகளின் மனநிலை. சூழ்நிலையே ஒருவனை கைதியாக்குகிறது...

 அதே போல் சிறைச் சூழ்நிலைதான் அவனை மேலும் மேலும் குற்றவாளியாக்குகிறது. உதாரணமாக, பத்து சவரன் நகையைத் திருடியவனை போலீஸ் பிடித்தது என்றால், குற்றப்பத்திரிகையில் அவன் இரண்டு சவரன் திருடினான் என்று எழுதிவிட்டு மீதியை சுருட்டிவிடுவார்கள். தண்டனை பெற்ற பின்பு, பிணையில் வரும் குற்றவாளியைப் பார்த்து ‘அடுத்தது எப்போது?’ என்றும் விசாரிப்பார்கள் சில போலீஸார். இப்படி குற்ற நடவடிக்கைக்கு காவல்துறையினரே தூண்டுகோலாக இருக்கும்போது குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு ஏது?

அதோடு, இன்று சிறைகளில் அரசியல் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகம். சிறைக்குள்ளே கஞ்சாவும், சிகரெட்டும், போதைப் பொருட்களும், மதுபானங்களையும் விநியோகிப்பவர்கள் இவர்கள்தான். அங்கீகரிக்கப்படாத போலீஸ் என்றே இவர்களைச் சொல்லலாம். வெளி உலகில் நடக்கும் அரசியல் சார்ந்த கொலை, கொள்ளை, நிலப்பிரச்னைகளை எல்லாம் சிறையில் இருந்தபடியே இந்த கும்பல் முடித்துக் கொடுக்கும். சிறைக்குள் உருவாகும் கோஷ்டிகளுக்கும் மோதல்களுக்கும் இவர்களே ஆதாரம். 

மொத்தத்தில், திருந்துவதற்கான இடமாக சிறை என்றுமே இருந்ததில்லை. சட்டம் மற்றும் சிறைத்துறை என்று ஒரு அமைச்சகமே சிறைக்கு இருந்தாலும், வருமானம் தராததால் யாரும் இதை முக்கியமானதாகக் கருதுவதில்லை. சமூகப் பொறுப்புள்ள, மனிதநேயக் குழுவினர் ஒன்று சேர்ந்து சிறையையும், சிறைவாசிகளையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கி, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்போதுதான் சிறை என்பது மனம் திருந்தும் இடமாக மாறும்’’ என்கிறார் பொழிலன் வேதனை மனதோடு!

இங்கே வேலையையும் தண்டனை போலத்தான் பார்க்கிறார்கள். புல் பிடுங்குதல், செருப்பு தைத்தல், விளையாத காட்டில் விவசாயம் செய்தல் என்று ஒப்புக்குச் செய்யும் வேலைகளால் எந்தப் பலனும் விளைவதில்லை. சூழ்நிலையே ஒருவனைக் கைதியாக்குகிறது... அதே போல் சிறைச் சூழ்நிலைதான் அவனை மேலும் மேலும் குற்றவாளியாக்குகிறது.

டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்