ஆகாயம் கனவு அப்துல் கலாம்



இந்திய ராக்கெட்டின் சரித்திரம் 8

ஆயுதம் செய்வோம்


சி.சரவணகார்த்திகேயன்


1964ம் ஆண்டு பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாரடைப்பு கண்டு இறந்தார். 1966ல் ஹோமி பாபா விமான விபத்தில் மரித்தார். ‘அது விபத்தல்ல, இந்தியா அணு ஆயுதத் தயாரிப்பில் முன்னேற்றம் கண்டு வருவது பொறுக்காது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நிகழ்த்திய திட்டமிட்ட படுகொலை’ என்றும் சொல்லப்படுகிறது.

ஒருவர், விஞ்ஞான முன்னேற்றம் தேசத்துக்கு முக்கியம் எனப் புரிந்து ஊக்குவித்த அரும்பெரும் தலைவர்; இன்னொருவர், அதைச் செயல்படுத்தக் களமிறங்கிய சிறந்த விஞ்ஞானி. இவ்விரு அசம்பாவிதங்களும் இந்திய ராக்கெட் இயலின் நகர்ச்சிக்கு வேகத்தடைதான் என்றாலும் இவர்களின் இடங்களை முறையே நிரப்பிய இந்திரா காந்தியும் விக்ரம் சாராபாயும் திட்டங்கள் தொய்வடையாது பார்த்துக் கொண்டனர்.

விண்வெளி ஆராய்ச்சி என்ற அமைதியான பயன்பாட்டுக்கு ராக்கெட்களை இந்தியா ஆராய்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அதிரடிப் பயன்பாடாய் ஆயுத ஆராய்ச்சியும் இன்னொருபுறம் மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது. தேசப் பாதுகாப்புக்கானது அது!சுதந்திரம் கிடைத்த பின் 1956ம் ஆண்டு பாதுகாப்பு அறிவியல் நிறுவனம் (Defence Science Organisation) துவங்கப்பட்டது. 1958ல் இதனுடன் மேலும் சில தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களை இணைத்து ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம்’ (Defence Research and Development Organisation - DRDO) உண்டாக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ‘நவீன ஆயுதங்கள் பற்றி ஆராய சிறப்பு ஆயுதங்கள் அவிபிருத்திக் குழு’ (Special Weapons Development Team - SWDT) ஒன்று அமைக்கப்பட்டது. தேர்ந்த பல விஞ்ஞானிகள் இக்குழுவில் இடம் பெற்றனர். அதன் தலைவர் டாக்டர் பி.என்.சிங்.அதற்கு அளிக்கப்பட்ட முதல் பணி, வழிப்படுத்திய ஏவுகணைகள் (Guided Missiles) குறித்து ஆராய்வது. குறிப்பிட்ட இலக்கைத் திட்டமிட்டுத் தாக்கி அழிக்கப் பயன்படுபவை இவை. அதனால்தான் இவற்றுக்கு இப்படிப் பெயர். இத்திட்டத்தின் முதற்கட்டமாய் இரு ஆராய்ச்சிகள் துவங்கப்பட்டன. ஒன்று, ஆயுதங்கள் தாங்கிய ராணுவ வாகனங்களை அழிக்கும் ஏவுகணைகளை (Anti-Tank Missile - ATM) உருவாக்குதல். அடுத்தது, அதி உயரம் பாயக்கூடிய சவுண்டிங் ராக்கெட்களை ஆராய்தல். இந்த சவுண்டிங் ராக்கெட் ஆய்வு நீண்ட காலம் தொடரவில்லை. ஆனால் ATM ஆராய்ச்சி முழு மூச்சுடன் மேற்கொள்ளப்பட்டது.

1961ம் ஆண்டு ஜூனில் இந்தக்குழு முறையான ஒரு பரிசோதனையகமாக புதுடெல்லி பாதுகாப்பு விஞ்ஞான மையத்தின் (Defence Science Centre) வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டது. அதன் பெயர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பரிசோதனையகம் (Defence Research and Development Laboratory - DRDL). பின் 1962 பிப்ரவரியில் ஆந்திர அரசு நிஜாமின் படை வீடுகளை அளித்ததை ஒட்டி இப்பரிசோதனைக்கூடம் ஐதராபாத்துக்கு மாறியது. கேப்டன் வி.கணேசன் இதன் முதல் இயக்குநரானார்.

தீவிர ATM ஏவுகணை ஆராய்ச்சியின் விளைவாக 1964ல் அதை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 1965ல் பாகிஸ்தானுடனான யுத்தத்தில் இந்தியாவின் வெற்றிக்குப் பின் ராணுவத்தின் ஆதரவும் இத்திட்டத்திற்குக் கிட்டி அதன் Staff Project ஆனது. (இரு விதமான திட்டங்களில் DRDO அமைப்பு செயல்படும்: ராணுவம் நிர்ணயித்த தொழில்நுட்பத் தேவைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்வது பணியாளர் திட்டம் -Staff Project. குறிப்பிட்ட ஒரு துறையில் நமது தொழில்நுட்பத் திராணியை வளர்த்துக் கொள்ளச் செய்வது தொழில்நுட்ப அபிவிருத்தித் திட்டம் - Technology Development Project.)

அடுத்த ஐந்தாண்டுகள் தீவிர ஆய்வு மற்றும் உழைப்புக்குப் பின் DRDL அமைப்பு 1970ல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ATM ஏவுகணைகளை போதுமான அளவு வானில் ஏவிப் பரிசோதித்துப் பார்த்தது. கன்னி முயற்சியிலேயே விண்ணில் சிரித்தது ATM. இந்த ஏவுகணைகளைத் தயாரிக்க ஐதராபாத்தில் அதன் அருகிலேயே பாரத இயக்கவியல் நிறுவனம் (Bharat Dynamics Limited - BDL) என்ற ஆலை அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ராக்கெட் தொழிற்சாலை அது!
பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரான டாக்டர் பி.டி.நாக் சௌத்ரி, ‘நீண்ட தூர ஏவுகணைகளை (Long Range Missiles) உருவாக்குவதுதான் DRDLன் முதன்மை நோக்கு’ எனத் தீர்மானித்தார். பல்நிலை வாகன அமைப்புகளின் (Multistage Vehicle Systems) வடிவமைப்பு குறித்து இந்தியா சிந்திக்கத் தொடங்கியது அப்போதுதான்.

3 டன் எடை கொண்ட எஞ்சினைப் பயன்படுத்தி தரையிலிருந்து விண்ணைத் தாக்கும் குறுகிய தூர ஏவுகணை உருவாக்கும் உத்தேசத்துடன் Devil என்ற திட்டம் உதயமானது. அப்போது கண்டம் விட்டுக் கண்டம் தாவும் எறியியல் ஏவுகணைகளும் (Intercontinental Ballistic Missile - ICBM) இந்தியாவிடம் இல்லை. உள்நாட்டிலேயே அதனை உருவாக்கும் பொருட்டு Valiant என்ற திட்டமும் கிட்டத்தட்ட அதே கட்டத்தில் தொடங்கப்பட்டது. 30 டன் எடையுள்ள எஞ்சினைப் பயன்படுத்தி நெடுந்தூரம் (1,500 முதல் 8,000 கி.மீ. வரை வெவ்வேறு தூரங்கள் சொல்லப்படுகின்றன) பாயும் ராக்கெட்கள் உருவாக்குவது இதன் நோக்கம். இரண்டுமே திரவ எரிபொருளில் இயங்கத் திட்டமிடப்பட்டன என்பது தவிர்த்து மற்றொரு ஒற்றுமையும் உண்டு. அது, இரண்டுமே ரகசியத் திட்டங்கள்!

ஜனவரி 1972ல் ஏர் கமோடர் வி.எஸ்.நாராயணன் DRDL இயக்குநர் ஆனார். இந்த இரு திட்டங்களுக்கும் சேர்த்து 16 கோடி ரூபாயை மத்திய அரசு அளித்தது. தனது தன்னிச்சை அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதமர் இந்திரா காந்தி ரகசியமாக இந்த நிதியை அரசாங்க கஜானாவிலிருந்து அளித்தார். DRDL வெளிப்படையாக இத்திட்டத்தை மேற்கொள்ளாமல் மழுப்ப வேண்டி இருந்தது.

இரு திட்டங்களுக்கும் ஐஐஎஸ்சி, ஐஐடி, ஆர்ஈசி (தற்போதைய என்ஐடி) மற்றும் தேசத்தின் பிற சிறந்த பொறியியல் கல்லூரிகளிலிருந்து ஆள் எடுத்தனர் மொத்த நிதியில் Devil திட்டத்துக்கு 5 கோடி ரூபாய் தந்தனர். இதில் பாதித் தொகை வெளிநாட்டிலிருந்து கருவிகளும் வழங்குபொருட்களும் இறக்குமதி செய்யப் பயன்படுத்தப்பட்டது. இது போக, 350 கிலோ எடை கொண்ட மெக்னீஷியம் திரவ எரிபொருள் எஞ்சின் சட்டகம், திட உயர்த்தி ஏவுகணை (Solid-Booster Rocket) ஆகியவற்றை உருவாக்க ஹிந்துஸ்தான் வானூர்தியியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited - HAL), பாரத கன தட்டுகள் மற்றும் கலன்கள் நிறுவனம் (Bharat Heavy Plates & Vessels Limited - BHPVL) இரண்டிலிருந்தும் சில ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தியது. வேலை துரிதமாய்த் தொடங்கியது.

இன்னொருபுறம் Valiant திட்டமும் சூடாய்ப் போய்க் கொண்டிருந்தது. அந்த ஏவுகணை 85 டன் எடை கொண்டிருக்கும் என்றும், மூன்று திரவ எரிபொருள் படிநிலைகளைப் பயன்படுத்திப் பாயும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மே 1974ல் இத்திட்டம் பரிசோதனைக் கட்டத்தை எட்டியது. ஆனால் இரு திட்டங்களும் தம்மை நிரூபித்துக் கொள்ளத் தவறின. போரில் பயன்படுத்தப்பட்ட Devil ராக்கெட் சரியாகச் செயல்படவில்லை. Valiantன் திரவ எரிபொருள் எஞ்சினை விண்வெளி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த முடியுமா என இஸ்ரோவை ஆராயப் பணித்தது மத்திய கேபினட். அதனை ஆராய்ந்து பார்த்துவிட்டு சங்கடமாய் உதட்டைப் பிதுக்கியது இஸ்ரோ. இத்திட்டங்களின் மீதான ராணுவத்தின் மற்றும் அரசின் ஆர்வம் மெல்லக் குறைந்தது.

1974ல் Valiant திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது. ஜனவரி 1975ல் Devil திட்டத்தை மதிப்புரை செய்ய இஸ்ரோ கேட்டுக் கொள்ளப்பட்டது. ‘திரவ எரிபொருள் ஏவுகணை உருவாக்குவதில் இல்லாவிட்டாலும் Devil வேறு பல விஷயங்களில் வெற்றிகரமாக இருக்கிறது’ என சுட்டிக்காட்டி, அது தொடர வேண்டும் என்று இஸ்ரோ சொன்னது.SAM ஏவுகணைகளின் ஆக்கம், வனைதல், சோதனை ஆகியவற்றுக்குத் தேவையான உள்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன.

அதிஉறுதி கொண்ட, எஃகு உறையிட்ட திட உயர்த்திகள், ஜி-எரிபொருளில் இயங்கும் இரு படிநிலை, 3 டன் எடையுடைய திரவ எரிபொருள் எஞ்சின் ஆகியன இத்திட்டத்தில் வெற்றிகரமாக செய்து காட்டப்பட்டன. ஆந்திர மாநிலம் சூர்யலங்காவில் நடந்த விமானப்படையின் வருடாந்திர நிகழ்வில் Devilன் துணையமைப்புகள் முதன்முறை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டன.

பிறகு முழுக்க ஒருங்கிணைக்கப்பட்ட Devil ராக்கெட் மூன்று முறை பரிசோதிக்கப்பட்டது (அதிலொரு முறை குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழிப்பதையும் செய்து காட்டியது). 1980ல் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. திட்டம் கைவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக DRDL இயக்குநர் நாராயணன், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

உணர்ச்சிவசப்படாது கவனித்தால் Valiant திட்டம் முழுத் தோல்வி என்றும் Devil திட்டம் ஓரளவு வெற்றி என்றும் சொல்லலாம். பிரதமர் இந்திரா காந்தி, அவருக்கு ஆலோசனை சொல்லும் இடத்திலிருந்த அதிகார வர்க்கத்தினர், சில DRDO விஞ்ஞானிகள் ஆகியோரின் தன்முனைப்பில்தான் இவை முகிழ்த்தன. இந்திய ஏவுகணை வடிவமைப்பு செயல்திறனை நிரூபிக்க அவர்கள் விரும்பினர்.

ஆனால் ராணுவம் இத்திட்டங்களின் முக்கிய முடிவுகளில் ஒதுக்கியே வைக்கப்பட்டது. தேவைக்கும் நோக்கத்துக்கும் இடைவெளி இருந்ததுதான் சிக்கல்.Devilம் Valiantம் அல்ப ஆயுளில் போனாலும், ப்ருத்வி ஏவுகணைக்கு அவையே விதை!விண்வெளி ஆராய்ச்சி என்ற அமைதியானபயன்பாட்டுக்கு ராக்கெட்களை இந்தியா  ஆராய்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அதிரடிப் பயன்பாடாய் ஆயுத  ஆராய்ச்சியும் இன்னொருபுறம் நடந்தது.

(சீறிப் பாயும்...)