காப்பி



‘‘தம்பி, நீ பெரிய இயக்குநர்கிட்ட வேலை பார்த்திருக்கே. நம்பி உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன். ஏதாவது ஒரு கொரியன் படத்தைப் பார்த்து உல்டா பண்ணி கதை ரெடி பண்ணு. ஆனா... நாம காப்பி அடிச்சதை யாரும் கண்டுபிடிக்கவே கூடாது. கண்டுபிடிச்சிட்டா இந்த ஃபேஸ்புக், ட்விட்டர்ல இருக்குறவனுங்க  கிழி கிழின்னு கிழிச்சுத் தொங்க விட்ருவானுங்க!’’ - மணிமாறனிடம் கண்டிப்பாகச் சொன்னார் தயாரிப்பாளர் சிவநேசன்.

அவர் எதிர்பார்த்தது போலவே கவனமாகக் காப்பியடித்து ஒரு கதையை மணிமாறன் சொல்ல, சிவநேசனுக்குப் பிடித்துவிட்டது. படம் வெளியாகி சக்கை போடு போட்டது. வெற்றிக் களிப்பில் தனது உதவி இயக்குநர்களோடு  சிவநேசனை சந்தித்தான் மணிமாறன். ‘‘நாம காப்பியடித்த விஷயத்தை எங்கே மக்கள் கண்டுபிடிச்சிடுவாங்களோனு பயந்தேன். எவனாலும் கண்டுபுடிக்க முடியல. கெட்டிக்காரன் தம்பி நீ!’’ என்று பாராட்டினார் அவர்.

வெளியே வந்ததும் உதவி இயக்குநர்களுக்கு சந்தேகம்... ‘‘எப்படி சார் காப்பியடிச்ச கதையை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மாத்தினீங்க?’’மணிமாறன் வேதனையோடு சொன்னான், ‘‘அட போய்யா! இது என்னுடைய ஒரிஜினல் கதை. கொரியன் படத்தில் சுட்டதுன்னு சொன்னாதான் இப்ப வாய்ப்பே தர்றாங்க. அதனால பொய் சொன்னேன்!’’       

ஜெ.கண்ணன்