கோரிக்கை



அடிக்கடி அந்தத் தபால் பெட்டியின் அருகே அவரைப் பார்க்க முடிகிறது. சுமார் ஐம்பத்தைந்து வயது இருக்கலாம். கையில் தபால் உறையுடன் வந்து அவர் நிற்கிறார். சுற்றுமுற்றும் பார்த்துக் காத்திருக்கிறார். அந்த வழியாக வருகிற யாரிடமாவது, ‘‘இதை இந்தத் தபால் பெட்டியில் போட்டுட முடியுமா?’’ என்று கோரிக்கை வைக்கிறார்.

நானும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அவரால் நடக்க முடிகிறது. வயோதிகமும் இல்லை. இவ்வளவு தூரம் வர முடிந்தவரால், பக்கத்தில் இருக்கும் பெட்டியில் ஒரு கவரை எட்டிப் போட முடியாதா? பின்னர் எதற்கு இந்தக் கோரிக்கை?

அருகே போன என்னிடமும் இதே கோரிக்கைதான்.நான் கேட்டுவிட்டேன்... ‘‘உங்களால இதை உள்ளே போட முடியாதா?’’ அவர் தயக்கமில்லாமல் பதில் சொன்னார்...‘‘என் மகளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடறேன்! அதுக்காகத்தான் அடிக்கடி இப்படி அவள் ஜாதகத்தை கேட்கறவங்களுக்குத் தபாலில் அனுப்பறேன். என் துரதிர்ஷ்டமோ என்னவோ... இதுவரைக்கும் ஒண்ணும் சரியா அமையல. யாருடைய கைராசியிலாவது என் மகளுக்கு ஒரு நல்ல இடம் அமையட்டுமே!’’அந்தத் தபால் உறையை வாங்கிக் கண்களில் ஒற்றி, கடவுளை வேண்டிக்கொண்டு தபால் பெட்டியில் போட்டேன்.

பர்வதவர்த்தினி