தாஜ் பலூன் திருவிழா!



காஸ்ட்லி கலக்கல் அனுபவம்

பாதுகாப்பு காரணங்களுக்காக இதுவரை தாஜ்மகாலுக்கு மேலே ஒரு பானா காத்தாடியைக் கூட பறக்க விட்டதில்லை. முதல்முறையாக பிரமாண்ட பலூன்களைப் பறக்கவிட்டிருக்கிறார்கள். அதுவும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏழாம் அதிசயத்தை ஏரியல் வியூவில் காட்டியிருக்கிறது உத்தரப்பிரதேச அரசு. நவம்பர் 14 முதல் 16 வரை, மூன்று நாட்கள் நடந்த இந்த பலூன் திருவிழா பிரமாண்ட வெற்றி என அறிவித்திருக்கிறது உ.பி. சுற்றுலாத் துறை!

‘‘ஆக்ரா மிகப் பழமையான நகரம். பாரம்பரிய மொகலாய கட்டிடங்கள் இங்கே நிறைய இருக்கின்றன. இந்தப் பழமையோடு புதுமையையும் தொழில்நுட்பத்தையும் சங்கமிக்கச் செய்வதுதான் இந்த விழாவின் நோக்கம். சர்வதேசத் தரத்திலான வெப்பக் காற்று பலூன் பயணத்துக்கு ஏற்ற இடம் இது என்ற நிலையைத்தான் நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். அதற்கான துவக்கம்தான் இது!’’ என்கிறார் உ.பி சுற்றுலாத் துறை இயக்குநர் அம்ரித் அபிஜத்.

வெப்பக்காற்று பலூன்களைப் பறக்கவிடும் ஸ்கை வால்ட்ஸ் நிறுவனத்தோடு இணைந்துதான் இந்த பலூன் திருவிழாவை அரங்கேற்றியிருக்கிறது உ.பி சுற்றுலாத் துறை. ஏற்கனவே ஜெய்ப்பூரிலும் இன்னும் பல இடங்களிலும் வெப்பக்காற்று பலூன்கள் மூலம் சுற்றுலா ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிறுவனம் இது. 24 பேரை ஏற்றிச் செல்லக் கூடிய இந்தியாவின் மிகப் பெரும் பலூனைக் கூட இயக்கிக் காட்டியவர்கள் இவர்கள். இந்த தாஜ் பலூன் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளுக்கு மட்டுமே இவர்கள் மூன்று வருடங்கள் உழைத்திருக்கிறார்களாம்!

‘‘சாகசத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தப் பகுதியில் நிரந்தரமாகவே வெப்பக்காற்று பலூன் சேவையை நாங்கள் நிறுவ நினைக்கிறோம். எல்லாம் சரியாக அமைந்தால், அடுத்த வருடத்தில் அது துவக்கப்படலாம்!’’ என்கிறார் ஸ்கை வால்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சமீத் கார்க். ‘‘மொத்தம் 15 பலூன்கள் இங்கு வரவழைக்கப்பட்டிருந்தன. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் என 12 நாடுகளிலிருந்து இதற்கான நிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.

அதிகாலை 5 மணிக்கெல்லாம் எங்களை ஹாத்தி காட் எனும் யமுனை நதிக்கரைக்கு வரச் சொல்லியிருந்தார்கள். பேய் போல ஒரு பலூன், வண்டு டிசைனில் ஒரு பலூன் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் அசத்தின. அதிலேறி வானத்தில் பறந்த அனுபவம் அலாதிதான். அடர்ந்த பனி மெல்ல விலகியபோது, தாஜ்மகாலை கழுகுப் பார்வையில் உச்சியிலிருந்து தரிசித்தது கண்கொள்ளாக் காட்சி’’ என்கிறார் இந்த அனுபவத்தை ருசித்து வந்த மேகா மாம்கைன்.

ஆனால், எல்லாருக்கும் இப்படி நல்லனுபவம் ஏற்படவில்லை. ‘‘அதிகாலை என்பதால் மூடு பனி போர்த்தியிருந்தது. எங்களால் எதையுமே பார்க்க முடியவில்லை. கொஞ்சம் வெளிச்சம் வந்தபோது எங்களை தரையிறக்கிவிட்டார்கள். குளிரில் பாதித் தூக்கத்தில் எழுந்து வந்த எங்களின் எதிர்பார்ப்பை பலூன் பயணம் பூர்த்தி செய்யவில்லை!’’ என்கிறார் டெல்லியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர்.

அதிருப்திப்படும் நபர்கள் முக்கியமாக வைக்கும் குற்றச்சாட்டு, கட்டணம் மிக அதிகம் என்பதே. அதாவது ஒரு நபர் பலூனில் பயணித்து தாஜ்மகாலைப் பார்க்க 250 டாலர்... அதாவது சுமார் 16 ஆயிரம் ரூபாய் கட்டணம்.‘‘இது தவிர்க்க முடியாதது. இந்தப் பயணத்துக்கான எரிபொருளிலிருந்து பலூன் செய்யப் பயன்படும் மூலப்பொருள் வரை அனைத்தையும் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.

பலூனைச் செலுத்தும் அயல்நாட்டு நிபுணர்களுக்கு ஒரு விமான பைலட்டுக்கு இணையான சம்பளம் தர வேண்டியுள்ளது. இத்தனை செலவினங்களைச் சரிக்கட்ட கட்டணத்தை இப்படித்தான் நிர்ணயிக்க முடியும்!’’ என்கிறார் சமீத் கார்க். கட்டணம் குறைக்கப்படும் வரை... ‘‘அண்ணாச்சி, அந்த ஆக்ரா மேப் ஒண்ணு குடுங்க!’’

- நவநீதன்