பேண்டஸி கதைகள்



செல்வு @ selvu

தாகமற்ற ஊர்

ஒரு மனிதன் ஒரு நாளில் குடிக்க வேண்டிய குறைந்தபட்ச தண்ணீரின் அளவு எவ்வளவு? 3 முதல் 5 லிட்டர்கள் வரையிலும் அவரவரின் தாகத்திற்கேற்ப குடிக்கலாம்; குடிக்க வேண்டும். சரி, ஒரு நாளில் ஒரு மனிதனால் அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீரைக் குடிக்க முடியும்? 10 லிட்டர்கள்?

ஒரு பேச்சுக்காக சாப்பாடே இல்லாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டிருந்தால் கூட 20 லிட்டர் என்கிற அளவைத் தாண்டமுடியாதுதானே? ஆனால், இந்தக் கதையில் வருகிற அவன் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லாரி தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பெரும் கிராமமே குடித்தும், குளித்தும் பயன்படுத்தக்கூடிய அவ்வளவு தண்ணீரையும் ஒரே ஒரு ஆள் குடித்துத் தீர்க்கிறான். எத்தனை தண்ணீரைக் குடித்தாலும் தாகம் மட்டும் நின்றபாடில்லை.

சமீப நாட்களாகத்தான் இப்படி அவன் குடித்துக் கொண்டிருக்கிறான். 2 லிட்டர் தண்ணீரை ஒரு மனிதன் ஒரே மூச்சில் குடித்தாலே வயிற்றிலிருக்கும் டேங்க் ‘ஃபுல்’லென்று நோட்டிஃபிகேஷன் வந்துவிடும். இரண்டு, மூன்று லாரிகளா? முதலில் அத்தனை தண்ணீரைச் சேமித்து வைக்குமளவிற்கு அவன் எவ்வளவு பெரியவனாக இருப்பான்?

 எவ்வளவு பெரியவனும் இல்லை. நம்மைப் போலவே ஆறடிக்கும் சற்றே குறைவான உயரமுடையவன்தான். அப்படியே அவன் குடிப்பதாக வைத்துக் கொண்டாலும் அந்தத் தண்ணீரெல்லாம் என்னவாகிறது? இன்கம்மிங் என்ற ஒன்று இருந்தால் அவுட் கோயிங் என்ற ஒன்று இருக்க வேண்டுமே?

அப்படியானால் அவன் இருக்கும் வீடே, தெருவே தண்ணீரில் மிதக்க வேண்டுமே? அதுவும் இல்லை. தண்ணீர் எங்கே போகிறதென்றே தெரியவில்லை. ஆனால், அவன்தான் குடிக்கிறான் என்பதை நேரில் பார்த்து, சோதனைகளை மேற்கொண்டு, ஆய்வறிக்கையெல்லாம் தயாரித்து வெளியிட்டுவிட்டார்கள்.

ஒன்றிரண்டு நாட்களில் உலகப் புகழ் பெற்றுவிட்டான். எப்படி இத்தனை தண்ணீரைக் குடிக்கமுடிகிறது? அந்த தண்ணீரின் அவுட்கோயிங் எங்கே இருக்கிறது? ஆராய்ச்சியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் பெரும் குழப்பமாகிப் போனது. அவனிடமே கேட்டுப் பார்த்தார்கள். ஆனால், அவனால் பேசமுடியவில்லை. தண்ணீர் குடிப்பதை ஒரு நிமிடம் நிறுத்தினாலும் அப்பொழுதே நாவெல்லாம் வறண்டு, தொண்டை காய்ந்து, மயக்கத்திற்குச் சென்றான்.

அவனை அப்படியும் விட்டுவிடமுடியாதென்பதோடு, இது எட்டாவது உலக அதிசயமாகக் கொண்டாடப்பட வேண்டியதும் கூட என்பதால் ஊரே திரண்டு அவனுக்கான தண்ணீரை ஏற்பாடு செய்தார்கள். அரசாங்கமே அவனைப் பெரிய நதிக்கரையில் கொண்டுபோய் விட்டுவிட ஏற்பாடு செய்தது. பின்னே, ஒரு நாளைக்கு அத்தனை தண்ணீரை ஒரே ஆள் குடித்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள், பாவம்! நதியின் அருகில் அவனுக்கொரு வீட்டினைக் கட்டி, அதில் நதியிலிருந்து நேராக அவனது வீட்டிற்கு பைப்லைனெல்லாம் போட்டு தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்தார்கள்.

அவன் சாப்பிடுகிற நேரம் போக மற்றெல்லா நேரத்திலும் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டேயிருந்தான். சரி, இத்தனை தண்ணீரைக் குடித்தால் உடல் என்ன ஆவது? நாம் பயப்படுகிற அளவிற்கு அப்படி எதுவுமே அவனுக்கு ஆகவில்லை. எப்பொழுதும் போலவே பசித்தது. சாப்பிட்டான். ஆனால், சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் தாகமெடுக்கும். பிறகு அடுத்தவேளை சாப்பாடு தயாராகும்வரையிலும் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டேயிருப்பான். இப்படியே நான்கைந்து மாதங்கள் கழிந்தது.

 ஆராய்ச்சி செய்பவர்களும், விஞ்ஞானிகளும் அவனது வீட்டிற்கு அருகிலேயே தங்களது கூடாரங்களை அமைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தபடி இருந்தார்கள். உருப்படியாக ஒன்றையும் கண்டு பிடிக்கமுடியவில்லை. அவனது தலைக்கு நேராக ஒரு செயற்கைக்கோளைச் சுழல வைத்து, ஏதாகிலும் தெரிகிறதா என்று பார்த்தார்கள். ம்ஹூம்.

இந்தச் சம்பவங்களெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதுதான் மற்றொரு அதிசயச் செய்தியும் ஊருக்குள் பரவ ஆரம்பித்தது. மிகத் தொலைவிலிருந்த ஒரு கிராமத்தில் யாருக்குமே தண்ணீர் தாகமே எடுப்பதில்லையாம். ஒரு நாள் முழுக்கவும் சேர்த்து அவர்கள் பத்து மி.லி. தண்ணீர்கூடக் குடிப்பதில்லையாம். ஆனாலும், அவர்களுக்கு தாகம் எடுப்பதில்லை. தண்ணீர் குடிக்காமல் விட்டுவிடுவதால் வருகிற மயக்கமோ, டீ-ஹைட்ரேஷனோ ஆகவில்லையாம். அப்படியானால் தண்ணீர் மனிதனுக்கும் அந்த கிராமத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று யோசித்துப் பார்த்தார்கள். ஆமாம், அவர்கள் இப்பொழுது சரியான பாதையில் வண்டியைத் திருப்பிவிட்டார்கள்.

தாகமே எடுக்காத மக்கள் வாழும் கிராமத்திற்குச் சென்று விசாரித்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. இந்தத் தண்ணீர் மனிதனின் சொந்த ஊர் அது. சில மாதங்களுக்கு முன்னர் அவன் அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தபோது, ஊர் மக்கள் அவனிடம் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்த்துவைக்குமாறு முறையிட்டார்களாம்.  அதற்கு இவன், ‘‘ஆமா, உங்க எல்லார் தண்ணியையும் நான் ஒருத்தனேதான் குடிக்கிறேன். எங்கிட்ட சொல்ல வந்துட்டீங்க’’ என்று கோபமாகப் பேசி, வாய்க்கு வந்தபடி திட்டி அனுப்பிவிட்டானாம். அதற்கு அடுத்த நாளிலிருந்தே இவனுக்குத் தாகம் அதிகரிக்கத் தொடங்கியதாகவும், அதன்பின்னர் அவன் எங்கே போனானென்று தெரியவில்லையென்றும் ஊருக்குள் பேசிக் கொண்டார்களாம்.

அந்த ஊரில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல; இப்பொழுது அந்த ஊருக்குள் புதிதாக நுழையும் எவருக்கும் தாகமே எடுப்பதில்லையென்ற உண்மையும் அப்போது புரிந்தது. விசாரிப்பதற்குப் போனவர்களுக்கும் தாகமெடுக்கவில்லை. இதனால் அந்த ஊரின் பெருமை பேய்த்தனமாகப் பரவி பெரும் சுற்றுலாத்தலமாகவே மாறிவிட்டது அந்த ஊர். ஒவ்வொரு நாளும் அந்த ஊருக்குள் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

நம் ஹீரோவான தண்ணீர் மனிதனுக்கு மேலும் மேலும் தாகம் அதிகரிக்க ஆரம்பித்தது. 2 லிட்டர் தண்ணீரை ஒரு மனிதன் ஒரே மூச்சில் குடித்தாலே வயிற்றிலிருக்கும்  டேங்க் ‘ஃபுல்’லென்று நோட்டிஃபிகேஷன் வந்துவிடும். இரண்டு, மூன்று லாரிகளா?