கால் இழந்தவரின் மராத்தான் ஓட்டம்!



இந்தியாவின் முதல் பிளேடு ரன்னர்

‘‘உடல் ஊனமுற்றவர்கள் தலைவிதியே என்று விரக்தியோடு வாழ்வில் இருந்து  ஒதுங்கி  நின்றுவிடக் கூடாது. ஊனம் ஒரு சாபம் அல்ல… சுமையும் அல்ல… கால்களை இழந்த பின்னும் பிறர் அதிசயிக்கும்படி  வாழ்ந்து காட்டலாம் என்பதற்கு  நான் ஒரு முன்னுதாரணம்!’’ - நம்பிக்கையின் மொத்த உருவமாகத் தெரிகிறார்  மேஜர் தேவேந்தர் பால் சிங்.இந்தியாவில்  செயற்கைக் காலுடன் மராத்தான் ஓட்டங்களை நிகழ்த்தி வரும் முதல் நபர். இதுவரை 14 மராத்தான் ஓட்டங்களில் பங்கெடுத்து சாதனை செய்திருப்பவர்.  அண்மையில் கொச்சி நகரில் ஒரு மராத்தானில் பங்கேற்க வந்தவரிடம் பேசினால் பிரமிப்பு ஹைஸ்பீடில்!

‘‘இந்திய ராணுவத்தில் சேர்ந்த இரண்டாவது ஆண்டே  எனக்கு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணி. கார்கில் யுத்தம்  உக்கிரமாகத் தொடங்கிய நேரம் அது. எதிரிகள் வீசிய குண்டு வெடித்து, நான் தூக்கி வீசப்பட்டேன்.

மருத்துவமனையில் இறந்து விட்டேன் என்றே முதலில் நினைத்திருக்கிறார்கள். சீனியர் டாக்டர் ஒருவர்தான் மெல்லிய நாடித் துடிப்பைக் கண்டறிந்திருக்கிறார். கஷ்டப்பட்டு என்னைக் காப்பாற்றினாலும், என் வலது காலை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. 25 வயதில் காலை இழந்து நின்ற என்னைப் பார்த்து என் குடும்பமே ஓவென்று அழுதது. எதிர்காலமே இருண்டுவிட்டதாகக் கவலைப்பட்டது. ஆனால், ‘கிட்டத்தட்ட இறந்தே போனவன் பிழைத்து வந்திருக்கிறேன்’ என்ற மகிழ்ச்சிதான் எனக்கு இருந்தது, இருக்கிறது!’’ என்கிற இவருக்கு 45 வயதாகிறது.

வேகமாய் ஓடுவதற்கென்றே இருக்கும் விசேஷ செயற்கைக்காலான பிளேடு கால்களைப் பொருத்தியபடி மராத்தான் ஓடுவது இவரின் தனிச்சிறப்பு. அயல் நாடுகளில் இந்தக் கால்களுடன் ஓடும் வீரர்களுக்காக தனிப் போட்டிகளும் உயரிய பரிசுகளும் வழங்கப்படுவதுண்டு. இந்தியாவில் ஒரே பிளேடு ஓட்டக்காரர் மேஜர் சிங்தான்.  தன்னைப் போன்ற கால் இழந்தவர்களை இணைக்கவும் நம்பிக்கை தரவும் ‘The  Challenging  ones’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார் இவர். இதில்  சுமார்  800  பேர்  உறுப்பினராக  உள்ளனர்.  

‘‘கால்களை இழந்த பிறகு க்ரட்ச்சஸ்   (crutches) வைத்து மெதுவாக நடக்கப்  பழகும்போது வலி கடுமையாகத்தான் இருக்கும். அதைப் பொறுத்துக்கொண்டு கொஞ்ச நாளில் செயற்கைக் கால் வைத்து நடக்க ஆரம்பித்தேன்... பிறகு நடையில் படிப்படியாக வேகம் கூட்டினேன்... ஓடவும் ஆரம்பித்தேன். இதனால் ஊனமுற்ற காலில் சிராய்ப்புகள் ஏற்படும். தோல் உரியும். புண்ணாகும். வலியும் சேர்ந்து வம்பு பண்ணும். அனைத்தையும் பொறுத்துக்கொண்டு 2009ல் முதல் மராத்தான் ஓட்டத்தில் பங்கு கொண்டேன்.

அதன் பின்பு தொடர்ச்சியாக ஓட்டங்கள். ஒவ்வொரு  முறை ஓடும்போதும்  தூரத்தைக் கடக்க நான் எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் குறைக்க முடிந்தது. வேகத்தைக் கூட்ட முடிந்தது. கால் இழந்தவனால் இதுவே முடிகிறதென்றால், வேறு என்னதான் முடியாது? இதுதான் நான் சொல்ல வரும் செய்தி. எனவேதான் நான் ஊனத்தை எதிர்கொண்ட விதம் பற்றி முடிந்தளவு மக்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்.

எனது விடா முயற்சியைப் பார்த்த இந்திய ராணுவம்,  ஓடுவதற்கு உதவும் ‘பிளேடு’ எனப்படும்  வித்தியாசமான செயற்கைக் காலை  அன்பளிப்பாகத் தந்தது. ‘C’  வடிவில்  ஸ்ப்ரிங் மாதிரி  இருக்கும் இந்த ‘பிளேடின்’ எடை  2.7 கிலோ.  இதை சரியாகக் காலில் பொருத்திக்கொண்டு ஓட்டத்துக்குத் தயாராவதற்கே ஒன்றரை  மணி  நேரம்  தேவைப்படும். இந்த பிளேடு அணிந்தாலும்,  ஓட்டத்திற்குப் பிறகு காலில் சிராய்ப்புகளும், வலியும் இருக்கும். நான்கைந்து நாட்கள்  ஓய்வு தேவைப்படும்.

பல நாடுகளில் ராணுவ  வீரர்கள்  கால்களை  இழந்தாலும், பிளேடு  கால்களை  மாட்டிக்கொண்டு  யுத்த  பூமிக்கு  வந்து விடுவார்களாம்.  தென் ஆப்ரிக்காவைச்  சேர்ந்த ஆஸ்கர் பிஸ்டோரியஸ்  என்பவர் 11 மாதக் குழந்தையாக இருந்தபோதே இரண்டு கால்களையும் இழந்தவர்.

அவர் வளர்ந்து பிளேடு கால்களைப்  பொருத்திக்கொண்டு  ஊனமுற்றவர்களுக்கான ஓட்டங்களில் சாதனை படைத்திருக்கிறார். அவர்தான்  என்  ஹீரோ. என்னை  இந்தியாவின்  முதல்  பிளேடு  ஓட்டக்காரனாக  மாற்றி  இருப்பவர் அவர்தான்!’’ - மேஜர்  மந்தகாசமாகச்  சிரிக்கிறார். பல நாடுகளில் ராணுவ  வீரர்கள்  கால்களை  இழந்தாலும், பிளேடு  கால்களை  மாட்டிக்  கொண்டு  யுத்த பூமிக்கு  வந்து  விடுவார்களாம்.

- பிஸ்மி பரிணாமன்