நம்பிக்கை



‘‘இதைக் கொண்டு போய் நம்ம துணிக்கடையில் கொடுத்துட்டு வாங்க!’’ - ஒரு பெட்டியை, டிரைவர் சுந்தரத்திடம் கொடுத்தார் தொழிலதிபர் மகாலிங்கம்.காரில் ஏறிய சுந்தரம், முன்புறத்தில் தன் அருகில் உள்ள சீட்டில் பெட்டியை வைத்துவிட்டு காரை ஓட்ட ஆரம்பித்தார். மழையில் சிதைந்திருந்த ரோட்டின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கிய காரின் அதிர்வில் பெட்டி தற்செயலாக திறந்துகொண்டது.

உள்ளே... கட்டுக்கட்டாக ஆயிரம் ரூபாய் நோட்டுகள்! 30 கட்டுகள்... சுளையாக 30 லட்சம் ரூபாய். வைத்த கண் வாங்காமல் பார்த்தார் சுந்தரம்! பையனின் வேலை... பெண்ணின் கல்யாணம்... மனைவியின் மருத்துவம்... குடும்பச் சூழ்நிலை அவர் கண்ணை மறைத்தது. கைகள் மெல்ல பணக்கட்டுகளைத் தடவிப் பார்த்தன. ஆனால், சடாரென தடுத்தது மனசாட்சி!

‘‘ச்சே! எவ்வளவு கேவலமான நினைப்பு. 30 வருஷங்களாக கட்டிக் காத்த நாணயமும் விசுவாசமும்தானே, இந்தப் பெட்டியை பூட்டாம கூட கொடுக்க வச்சிருக்கு! ‘நம்ம துணிக்கடை’ என்று சொல்லி கொடுத்தாரே! அந்த நம்பிக்கையை நானே கெடுத்துக்கொள்ளலாமா?’’மனம் வருந்திய சுந்தரம், பெட்டியை மூடினார். இடம் வந்ததும் பெட்டியை எடுத்துக்கொண்டு கடைக்குள் நுழைய, அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்!அங்கே, நம்பிக்கையின் இடமான கேஷ் கவுன்டரில் அவரது மகன், புதிதாக வேலையில் அமர்த்தப்பட்டிருந்தான்.  

 ப.உமாமகேஸ்வரி