உண்டியல் குலுக்கி சினிமா எடுக்கலாம்!



டிரெண்டிங்கில் கிரவுட்ஃபண்டிங்

‘அம்மன் கோயிலுக்குக் கூழ் ஊத்தறோம்... உங்களால முடிஞ்சதைப் போடுங்க’ என்பது போலவே கேட்கிறார்கள், ‘சினிமா எடுக்கறோம்... பணம் கொடுங்க’ என்று. சமீப காலமாய் ஆன்லைனில் இது பெருகிவிட்டது.

பொதுவாக புது ஐடியாவோடு தொழில் செய்ய இறங்குகிறவர்கள், இப்படிப் பலரிடம் பணம் வசூல் செய்யும் நடைமுறையை ‘கிரவுட்ஃபண்டிங்’ என்பார்கள். இதற்கென்றே பல பிரத்யேக இணையதளங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தித்தான் இப்போது சினிமா எடுக்க பணம் வசூல் நடக்கிறது.    

இதெல்லாம் சரியா? பிராக்டிகலாக நடக்குமா? என்றால், ‘‘ஏன் நடக்காது?’’ என சுற்றி வளைக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்!‘‘இங்க சித்தார்த் நடிச்ச ‘எனக்குள் ஒருவன்’, கன்னடத்துல ‘லூசியா’னு வந்து சூப்பர் ஹிட் ஆச்சு சார். அதுவே இப்படி பணம் வசூல் பண்ணி எடுத்த கிரவுட்ஃபண்டட் படம்தான். அப்படிப்பட்ட படங்கள் தமிழிலும் சக்கை போடு போடுற காலம் சீக்கிரமே வரும்!’’ என்கிறார் ரோகித். சினிமாக்களுக்காக நிதி திரட்டும் ‘ஃபண்ட்மைட்ரீம்’ (fundmydream.in) என்ற இணையதளத்தை நடத்தி வருபவர் இவர்.

‘‘கிரவுட்ஃபண்டிங்ல ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு, லாபத்துல பங்கு தர்றேன்னு சொல்லி மக்கள்கிட்ட பணம் கேட்குறது. மேற்கத்திய நாடுகள்ல இது சகஜம். ஆனா, பிரச்னைகள் வரும்னு இந்திய சட்டம் இதை அனுமதிக்கல. இன்னொரு வகை, ரிவார்டு மாடல். அதாவது, மக்கள் கொடுக்குற பணத்துக்கு பதில் பணமா தராம, ஒரு அன்பளிப்பையோ கௌரவத்தையோ தர்றது. ‘டைட்டில் கார்டுல பெயர் போடுறோம்...’, ‘படம் வெளியானா பிரிவியூ காட்டுறோம்...’, ‘டிக்கெட் தர்றோம்...’ இப்படி சில விஷயங்களை ப்ராமிஸ் பண்ணி பணம் கேக்கலாம். இது இங்கே சட்டப்படி தப்பில்லை. சினிமாவுக்குப் பணம் திரட்ட இது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு.

2013ம் வருஷத்துல தொடங்கி இன்னிக்கி வரை என்னோட வெப்சைட்டுல மட்டுமே சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு நிதி திரட்டியிருக்கோம். இப்ப, ‘மை சன் இஸ் கே’னு ஒரு முழுநீள சினிமாவுக்காக சுமார் 11 லட்ச ரூபாய் பணம் திரட்டினோம். லோகேஷ்ங்கற தமிழ்நாட்டு இளைஞர்தான் இந்தப் படத்தோட டைரக்டர். படம் சீக்கிரமே வெளிவரப் போகுது.

எங்ககிட்ட ஒரு ப்ராஜெக்ட்டை கொண்டு வரும்போதே அது சுவாரஸ்யமா இருக்கான்னு நாங்க பார்ப்போம். எங்களுக்குப் பிடிச்சிருந்தா, அதைப்பத்தி வெப்சைட்ல விரிவா விளக்குவோம். ‘இந்தப் படத்துக்கு நிதி உதவி செய்யுங்க’னு பிரசாரமும் பண்ணுவோம். அது மக்களோட ரசனைக்கு ஏத்த மாதிரி இருந்தாதான் பணம் வரும்.

பணம் வர்ற வேகத்தைப் பார்த்தாலே, இந்தக் கதை தேறுமா தேறாதானு தெரிஞ்சிடும். ஆக, தகுதி இல்லாத கதைக்கு உதவி பண்ணிட்டோமேனு யாருக்கும் இதுல சங்கடம் வர வாய்ப்பே இல்ல. நிதி கொடுக்குறவங்கதான் அந்தக் கதைக்கு முதல் ஆடியன்ஸ். அவங்களுக்குப் பிடிச்சிருந்தா, நாளைக்கு படமான பிறகு மற்ற ரசிகர்களுக்கும் பிடிக்கும்!’’ என்கிறார் அவர் நம்பிக்கையாக!

‘‘கிரவுட்ஃபண்டிங் என்பது உலக சினிமாவிலோ அல்லது தமிழ் சினிமாவிலோ புதிய விஷயம் ஒன்றும் இல்லை. நண்பர்களிடம், உறவுக்காரர்களிடம், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியோ வட்டிக்கு வாங்கியோ படம் எடுக்கும் போக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் உண்டு!’’ என்கிறார் ‘சினேகாவின் காதலர்கள்’ என்ற படத்தை இயக்கிய முத்துராமலிங்கன். இவர் தனது அடுத்த படத்தை மக்கள் பணத்தில் எடுப்பதற்காக மூவிஃபண்டிங்.இன் (www.moviefunding.in) எனும் இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார். ‘கேள்விக்குறி’ என்ற படத்தைத் தயாரித்து நடித்த ஜெலானி என்பவரும் இதில் பார்ட்னர்.

‘‘வருடத்துக்கு நூற்று சொச்சம் படங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்த தமிழ் சினிமாவில் இன்று வருடத்துக்கு 300 படங்கள் வருகின்றன. காலம்காலமாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் தயாரிப்பு ஜாம்பவான்கள் தவிர்த்து, புதுப்புது தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

அவர்களில் பலர் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். எது நல்ல கதை... யார் சிறந்த இயக்குநர்... என எடை போடத் தெரியாமல் பணத்தைப் போட்டு ஒரே படத்தோடு காணாமல் போகிறவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்களை இந்த கிரவுட்ஃபண்டிங் ஈர்க்கும். இதன் மூலம் அவர்கள் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய முடியும்.

கிரவுட்ஃபண்டிங்கைப் பொறுத்தவரை லோ பட்ஜெட் என்பதைத் தாண்டி மைக்ரோ பட்ஜெட் படங்கள் கூட எடுக்கிறார்கள். அதாவது, வெறும் சில லட்சங்களிலேயே படத்தை முடித்துவிடுவது.

இதில் நஷ்டம் வந்தாலும் அது பெரிய நஷ்டமாக இருக்காது. தான் போடும் பணம் நியாயமான முறையில் செலவழிக்கப்படுகிறதா... முறையாக பயன்படுத்தப்படுகிறதா... சொன்னபடி படப்பிடிப்பு நடக்கிறதா என்றெல்லாம் பணம் போட்டவர்களுக்கு சந்தேகம் வருவது சகஜம். அது பற்றிய தகவல்களை நிதி வசூல் செய்யும் இணையதளங்கள் விலாவாரியாக, ஆதாரத்தோடு வெளியிட்டுவிட்டால் பிரச்னையே வராது.

சினிமாவை நாடி வரும் சின்ன தயாரிப்பாளர்களுக்கு, வெறும் லாபம் மட்டுமே குறிக்கோள் இல்லை. பெயர், புகழ், விளம்பரம், நட்பு வட்டத்தை அகலப்படுத்துதல்... இவற்றின் மூலம் மற்ற தொழில்களை விரிவாக்குதல் எனப் பல கணக்குகள் அவர்களுக்குள் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் யாரோ முகம் தெரியாத இடைத்தரகர்களிடம் மாட்டிக்கொண்டு அல்லல்படுவதை விட, லாபமோ நஷ்டமோ, அது ஒரு நல்ல பெயருடன் கிடைக்கட்டும் என கிரவுட்ஃபண்டிங் நோக்கி வரலாம்.

அதுதான் எங்கள் காத்திருப்பு!’’ என்கிறார்கள் பார்ட்னர்கள் இருவரும்.சினிமாவில் பஞ்சாயத்து சீன் குறைஞ்சிடுச்சு... ஆனால், சினிமா பற்றிய பஞ்சாயத்துகள் பெருகிடுச்சு. அப்படி எதிலும் இது சிக்காமல் இருந்தால் சரி!புதுப்புது தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு  ஆண்டும் தமிழ் சினிமாவுக்குள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களில் பலர்  இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.

- டி.ரஞ்சித்