நியூஸ் வே



*‘வேதாளம்’ படத்தில் லட்சுமி மேனனுக்கே பேசின தொகையைவிட கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ‘‘படத்தின் இயக்குநர் சிவாவுக்கு பேசின பேமென்ட்டே பெண்டிங்’’ என்று ரூம் போட்டு ரூமர் கிளப்பினார்கள் சிலர். அதைப் பொய்யாக்கும் விதமாக அஜித் - சிவா கூட்டணி இணையும் அடுத்த ப்ராஜெக்ட் விரைவில் ஆரம்பிக்கிறது!

*சென்னை ஃபுட்பால் அணி ப்ரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் அபிஷேக் பச்சன். விஜயகாந்தின் மகன்கள் அபிஷேக்கை சந்திக்க விரும்ப, உடனே அவர்களின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் விஜயகாந்த்!

*தமிழில் கைவசம் 3 படங்கள் வைத்திருக்கும் நந்திதா, கிடைக்கும் கேப்பில் எம்.பி.ஏ. படிப்பையும் தொடர்கிறார். சமீபத்தில் செமஸ்டர் எக்ஸாமை பெங்களூருவில் எழுதி முடித்து, ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறார்!

*பொங்கல் அறிவிப்பில் பாலா முந்திவிட்டார். அதனால் ‘தாரை தப்பட்டை’க்கு தியேட்டர்களின் நல்ல வரிசை கிடைத்துவிட்டது. சூர்யாவின் ‘24’ படத்தை பாலாவுக்காக தள்ளி வைத்தாலும் வைப்பார்களாம். ‘அரண்மனை 2’ படமும் கண்டிப்பாக ரிலீஸ் பட்டியலில் வந்துவிட்டது.

*தனுஷின் ‘தங்கமகனி’ல் எமி ஜாக்சனுக்கு டப்பிங் பேசியிருப்பவர் ஆண்ட்ரியா. ‘எமிக்கு ஆண்ட்ரியா குரல் மேட்ச் ஆகும்’ என தனுஷ் விரும்ப, உடனே சம்மதித்துவிட்டார் ஆண்ட்ரியா.

*‘தாறுமாறு’, ‘வெற்றி’, ‘காக்கி’ - இவற்றில் ஒரு பெயரைத்தான் விஜய்யின் புதுப்படத்திற்கு வைக்கப் போகிறார்கள். இதில் விஜய்யின் டிக், ‘காக்கி’. ஆனாலும், இன்னொரு கம்பெனி அதை புக் செய்திருப்பதால்தான் நெருக்கடி!

*நான்கைந்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு சுறுசுறுப்பாகிவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதனால் விஜய்யை சந்திப்பது, படம் பற்றிப் பேசுவது சுலபமாகி விடுகிறது என சந்தோஷப்படுகிறார்கள் இயக்குநர்கள்.

*பீகாரில் நிதிஷ் - லாலு கூட்டணி வெற்றிபெற்ற பிறகு, நிதிஷின் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கு டிமாண்ட் அதிகமாகிவிட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆலோசகர்கள் அவரை அழைத்துப் பேசினர். ராகுல் காந்தி அவரை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அசாம் முதல்வர் தருண் கோகோய் இதில் வித்தியாசம். பிரசாந்தின் மாமனாரிடம் அவர் பேசியிருக்கிறார்.

*அதிகமாக செல்ஃபி எடுக்கும் ஹீரோயின் யார் என்றால் இந்தியாவே கை காட்டுவது ராய்லட்சுமியை. ‘அகிரா’, ‘ஜூலி 2’ என இந்தியில் கவனம் செலுத்தும் ராய், தெலுங்கிலும் ஒரு படம் பண்ணுகிறார்.

*மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறப் போகிறார் நயன்தாரா. அதற்காக விக்னேஷ் சிவனையும் ‘விக்டர்’ எனப் பெயர் மாற்ற முயற்சி நடக்கிறது.

*நம் பிரதமர் நரேந்திர மோடி போலவே பிஸியாக உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங். சமீப நாட்களில் மோடி சென்ற அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு, அவருக்கு சில நாட்கள் முன்பாகவோ, பின்பாகவோ சீன அதிபர் சென்றிருக்கிறார்.

*ரன்பீர் கபூர் - தீபிகா படுகோனே காதல்தான் இப்போது ‘டாக் ஆஃப் பாலிவுட்’. ரன்பீர் இந்தக் காதலுக்கு புது அர்த்தம் கொடுக்கிறார். ‘‘ஒரு குடும்பத்தின்மீது கொட்டும் அத்தனை அன்பையும் நான் தீபிகா மீது பொழிகிறேன். காதல் என்பது நான் அவர்மீது காட்டும் அன்பு; அவரைப் பார்த்துக்கொள்ளும் அக்கறை; அவர் பற்றி எழும் கர்வம். இந்தக்கால காதலின் முகமும் பரிவும் மரியாதையும் மாறிவிட்டது. ஆனால், நல்லவிதமாக! சும்மா ஆளைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ என சொல்லும் முதிர்ச்சியற்ற காதல் இல்லை இது. வயது எனக்கு பக்குவம் தந்திருக்கிறது’’ என்கிறார் அவர்.

*விஜய் நடிக்க பரதன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் துவங்குகிறது. ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’விற்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் காஜல் அகர்வால். விஜய்க்கு முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் இசை.

*சகிப்புத்தன்மை குறைவதற்கு எதிராக விருதுகளைத் திருப்பித் தரும் போராட்டத்தை இலக்கியவாதிகளும் கலைஞர்களும் இங்கு நடத்துகிறார்கள். திருப்பித் தராதவர்களுக்கு எதிராக போராட்டங்களும் நடக்கின்றன. ஒரு ஃபிளாஷ்பேக்: ஒத்துழையாமை இயக்கத்தின்போது ‘பிரிட்டிஷ் அரசு கொடுத்த விருதுகளை இந்தியர்கள் திருப்பித் தர வேண்டும்’ என மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டார். பிரிட்டிஷ் கௌரவ விருதுகளைப் பெற்றிருந்த 5816 இந்தியர்களில் 24 பேர் மட்டுமே காந்தி சொல்லை மதித்து அவற்றைத் திரும்பக் கொடுத்தனர்.

*‘சர்வதேச டாய்லெட் தினம்’ கொண்டாடிய கடந்த வாரத்தில் இரண்டு டாய்லெட் செய்திகள்... குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் வீட்டில் கழிப்பறை இருக்க வேண்டும் என சட்டம் வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி வாய்ப்பிழந்த முதல் நபர் என்ற ‘பெருமை’யைப் பெற்றிருக்கிறார் அசோக் தாலவியா. கண்டேவி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் அசோக்.

இவரது வீட்டில் கழிப்பறை இல்லாததைக் கண்டறிந்து மனுவைத் தள்ளுபடி செய்தனர். இரண்டாவது செய்தி சீனாவிலிருந்து... நம்ம ஊர் போலவே அங்கும் பொதுக் கழிப்பறைகளில் கிறுக்குவது அதிகம். அதனால் வைஃபை வசதி, செல்போன் சார்ஜர் வசதி, எலெக்ட்ரிக் கார் பேட்டரி சார்ஜ் செய்துகொள்ளும் வசதி ஆகியவற்றோடு கழிப்பறைகள் திறக்கிறார்கள் இப்போது. இவற்றை மக்கள் பொறுப்பாக பார்த்துக்கொள்கிறார்கள்.

*‘தர்மதுரை’ டைட்டிலை பிரச்னையில்லாமல் மாமனாரிடம் பேசி தனுஷ் வாங்கிக் கொடுத்ததில் விஜய்சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி. இதனால், இரண்டே ஷெட்யூலில் தனுஷின் புது புரொடக்‌ஷனை முடித்துத் தருவதாக சொல்லிவிட்டார் உற்சாகமாக!

*கபாலி’யில் ரஜினியோடு நடிக்கும்போது அடிக்கடி பதற்றத்தில் கோட்டை விடுகிறார் தன்ஷிகா. இதனால் அவரிடம் ரஜினியை அடிக்கடி பேச வைத்து கூல் பண்ணி அதன் பின் ஷாட்டை ஓகே செய்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்!

*‘அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு நயன்தாரா ஜோடி. ப்ரியா ஆனந்த் நடிக்க மறுத்த இன்னொரு ஹீரோயின் கேரக்டரில் இப்போது கமிட் ஆகியிருப்பது பிந்துமாதவியாம்!

*மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரேந்தர் சிங் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஹரியானா மாநிலத்தில் ஊழல் குறைந்திருக்கிறது என்ற அவர், அதற்கு சொன்ன காரணம்தான் சர்ச்சையைத் துவக்கியது. ‘‘ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு பணம் தேவையில்லை. அவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டிய மகள் யாருமில்லை’’ என சிங் சொல்ல, ‘அப்படியானால் பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் முறைகேடாக சம்பாதித்துத்தான் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டுமா?’ என பெண்ணுரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன.

*‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ கொடுத்த மன உளைச்சலில் இருந்து மீண்டு வந்துவிட்டார் ஆனந்தி. அடுத்து, ‘விசாரணை’, ‘பண்டிகை’ படங்களில் பொண்ணு பிஸி. ‘‘எனக்கு ‘விசாரணை’ படத்தில் ரொம்ப சின்ன கேரக்டர். மொத்தமே நாலு நாள்தான் ஷூட்டிங் இருந்துச்சு. ஆனாலும் ஆனந்தி ஹேப்பி!’’ - என்கிறார் சிரித்துக்கொண்டே!