வெள்ளத்தில் வீட்டைக் காக்கும் இன்சூரன்ஸ்!



‘‘இப்படியெல்லாம் நடக்கும்னு யாரும் நினைச்சுப் பார்க்கலை சார்... மழை, வெள்ள சேதத்துக்குக் கூட இன்சூரன்ஸ் உண்டான்னு இப்பத்தான் கேக்குறாங்க!’’ என ஒரே குரலில் ஆதங்கப்படுகிறார்கள் சென்னையைச் சேர்ந்த காப்பீட்டு நிபுணர்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் ஒன்றிரண்டு பேர்தான் உஷாராக இப்படிப்பட்ட காப்பீடுகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தரும் வேலைகளில் இருக்கும் நேரத்தில், புதிதாக வெள்ள இன்சூரன்ஸ் போட வேண்டும் எனக் கேட்டு தினம் 50 போன் அழைப்புகள் வருகிறதாம் முகவர்களுக்கு. வெள்ள இன்சூரன்ஸ்... இதன் முழுமுதல் தகவல்களை இங்கே தருகிறார் சென்னையைச் சேர்ந்த காப்பீட்டு நிபுணர் மதுசூதன் மஞ்சிரேகர்.

‘‘வெள்ள இன்சூரன்ஸ் எனத் தனியாக ஒன்று இல்லை. தங்கள் வீட்டை, கட்டிடத்தை, அதில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்களை பல்வேறு சேதங்களில் இருந்து காக்க, ‘தீ மற்றும் பேரழிவு காப்பீடு’ (Standard Fire & Special Perils Policy) என்ற காப்பீடு உள்ளது. பொதுக் காப்பீட்டை வழங்கும் அரசு நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகியவற்றில் இந்தக் காப்பீடு உள்ளது. எல்லா இடத்திலும் இதற்கு ஒரே மாதிரியான விதிமுறைகள்தான். பொதுக்காப்பீட்டை வழங்கும் தனியார் நிறுவனங்களும் இதனை வழங்குகிறார்கள். அங்கே விதிமுறைகளில் சற்று மாற்றம் இருக்கலாம்!’’ என்கிறவர் அரசு நிறுவனங்கள் தரும் காப்பீட்டை விளக்குகிறார்...

‘‘வீடு, அலுவலகம், தொழிற்சாலை என அனைத்துக்குமே இந்தக் காப்பீடு செல்லுபடியாகும். இந்தக் காப்பீட்டின்படி, கட்டிடம், கதவுகள், மின்சார வயரிங்குகள், மற்றும் வீட்டுக்கு உள்ளே இருக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை சேதமடைந்தால் இழப்பீடு கிடைக்கும். வீட்டு காம்பவுண்ட் சுவர், கிணறு, ஆகியவற்றையும் தனியாக இதில் சேர்த்துக்கொள்ளலாம். பெருவாரியான ஆபத்துகளில் இருந்து இந்தக் காப்பீடு பாதுகாப்பு தருகிறது. நெருப்பு, மின்னல், வெடிவிபத்து, விமானம் விழுந்து உண்டாகும் சேதம், கலவரம் / வன்முறை, புயல்/வெள்ளம், மோதல் விபத்து, பாறை உருளுதல் உள்ளிட்ட நிலச்சரிவுகள், ஏரி, குளம் அல்லது நீர்க்குழாய் உடைப்பு அல்லது நிரம்பி வழிதல், ஏவுகணை சோதனை விபத்து, தீயணைப்பு தண்ணீர்க்குழாய் உடைப்பு, காட்டுத்தீ ஆகிய ஆபத்துகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.



பூகம்பம் இந்தப் பட்டியலில் இல்லை. ஆனால், அதை Add-on முறையில் சேர்த்துக்கொள்ளலாம். மிக அரிதாக நிகழும் விபத்துகள் என்பதால் இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியம் மிகமிகக் குறைவு. அதாவது, ஒரு லட்ச ரூபாய்க்கு ஆண்டு பிரீமியமே 60 ரூபாய்தான். பூகம்ப ஆபத்தையும் சேர்த்தால் 69 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். அவ்வளவே! இதையும் மூன்று வருடம், ஐந்து வருடம் என மொத்தமாக சேர்த்துக் கட்டினால் தள்ளுபடி உண்டு!

வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்துக்குமோ இந்தப் பேரழிவுக் காப்பீட்டின் கீழ் இழப்பீடு கிடைக்கும். ஆனால், அவை பேரழிவால் / விபத்தால் சேதமடைந்திருக்க வேண்டும். திருடு போனாலோ, ஹை வோல்டேஜ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டாலோ இழப்பீடு கிடைக்காது. இதிலிருந்தும் பாதுகாப்பு வேண்டுகிறவர்கள் Householders Insurance என்ற காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தக் காப்பீடு நாம் வீட்டில் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் இருந்து சைக்கிள் வரை தனித்தனியே பட்டியலிட்டு பிரீமியம் பெறுகிறது. கொள்ளை போதல் எனும் ஆபத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டுக்கு சுமார் 240 வரை பிரீமியம் இருக்கும். மின்சார உபகரணங்கள் செயல் இழப்புக்கு அதுவே 250 ரூபாயாக இருக்கும். தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை எல்லா வித ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்க ஒரு லட்சம் ரூபாய்க்கு சுமார் ஆயிரம் ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்!’’ என்கிற மதுசூதன், தற்போதைய சென்னை மக்களுக்கு ஒரு மெசேஜும் சொல்கிறார்.

‘‘தற்போது இந்த இன்சூரன்ஸை நாடி நிறைய பேர் வருகிறார்கள். இப்போது சென்னை மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் இந்தக் காப்பீட்டை உடனடியாகப் பெறுவது கடினம். அப்படியே பெற்றாலும் ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து செல்லுபடியாகும்படி கால நிபந்தனை குறிப்பிட்டுத்தான் தருவார்கள். ஆனால், இப்போதேனும் விழிப்புணர்வுடன் நடந்துகொண்டால் வருங்காலத்தில் எந்தப் பேரழிவு நேர்ந்தாலும் இழப்பீடு பெறலாம்!’’

- நவநீதன்