அதிக வருமானம் தரும் அழகுக் கலை!



சுயதொழில்

உலகில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது அந்நாட்டின் தொழில் வளர்ச்சியே ஆகும். தொழில் முனைவோர்கள்தான் அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றனர். புதிய புதிய பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்டுவருகிறார்கள்.

முறையான தகுதி பெற்ற திறன் படைத்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவர்களும் தொழில் முனைவோர்கள் தான். எனவே, நீங்கள் தொழில் தொடங்கி தொழில்முனைவோராகவும், தொழில் அதிபராக ஆவதும் உங்கள் பொருளாதாரத்தை மட்டும் உயர்த்தாது, நாட்டின் பொருளாதாரத்தையும் சேர்த்து உயர்த்தும்.

என்ன தொழில் செய்யலாம்..?, எப்படிக் கடன் பெறுவது..? எப்படி அரசு சலுகைகள் மற்றும் மானியம் பெறுவது? என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பவரா நீங்கள்? இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களும், திட்டங்களும் உங்களுக்கு உதவக்கூடும்.
மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அழகு.

அதிலும் ஆதிகாலம் முதல் பெண்கள் தங்களை அழகாகவும், வசீகரமாகவும் காட்டிக்கொள்ளவும் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கான பிரத்யேகமான அழகு நிலையங்கள் இப்போது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.இந்த அழகு நிலையங்கள் பெண்களின் அழகை மெருகூட்டிக் காட்டுவதால் பெண்கள் தன்னம்பிக்கையுடன் உயர்நிலை அடைவதோடு மனதளவிலும் மகிழ்ச்சி அடைகின்றனர். இன்று அதிக அளவில் பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்கள் தங்களை அழகாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

* கலை ஆர்வம் கொண்ட பெண்கள் எளிதில் அழகுக் கலைப் பயிற்சி பெற்று சுயதொழில் தொடங்கலாம். பியூட்டி பார்லர் பயிற்சி மையங்கள் பல இடங்களில் உள்ளன. மத்திய மாநில அரசுகளின் பயிற்சி மையங்களும் உள்ளன.

* திருமணம், மஞ்சள்நீராட்டு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என சுபநிகழ்ச்சிகள் தொடங்கி ஆண்டு விழா வரை அழகுக் கலைப் பயிற்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு கள் உள்ளன. முகம், கை, கால் மற்றும் தேகம் என அழகைப் பராமரிக்க இந்த அழகுக் கலைப் பயிற்சி உதவுகிறது.

நல்ல லாபம் தரக்கூடிய தொழில். இதன் தேவை அதிகம். இந்தத் தொழிலை அரசு மானியத்துடன் (UYEGP 3 லட்சம், PMEGP 5 லட்சம்) கடன் பெற்றுத் தொழில் தொடங்கலாம்.த்ரெட்டிங், வாக்சிங், பிளீச்சிங்(Bleaching), ஃபேசியல்(Facial), முடி மற்றும் சிகை அலங்காரம்(Hair and hairstyle), மெகந்தி(Mehandi), கலரிங்(Colouring), மெனிக்யூர்(Manicure), பெடிக்யூர்(Pedicure) மற்றும் மணப்பெண் அலங்காரம்(Bridal Make-up) பள்ளி நாடக நாட்டிய அலங்காரம் முதலியவை சேவைக்கலை ஆகும்.  இந்தத் துறைக்கு வருகிறவர்கள், அரசு சான்றிதழ் பெற்ற அகாடெமியில் சேர்ந்து, கோர்ஸை நன்கு படித்துவிட்டு ஆரம்பிப்பதுதான் நல்லது. அப்போதுதான் உத்தரவாதத்துடன் இந்தத் துறையில் அப்கிரேட் ஆகமுடியும். இதில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் நீங்களும் அழகுக்கலை நிபுணராக வலம் வரலாம்.

செயல்முறை

அழகுக் கலையில் பெண்களின் தலைமுடி முதல் பாதம் வரை அனைத்தையும் அழகு மற்றும் பராமரிப்பு செய்வதாகும். முதலில் பெண்களின் முடி. இதில் முடியை வெட்டுதல், கருமை மற்றும் பிற நிறம் சேர்த்தல், பொடுகை நீக்குதல், தேவையற்ற முடிகளை நீக்குதல் முதலியவை அடங்கும். மிக முக்கியமானது சிகை அலங்காரம். சிகை பராமரிப்பு ஜடை பின்னுவது அலங்காரம் ஆகியவை அடங்கும்.

அதேபோல் ஃபேசியலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் முகப் பருக்களை அகற்றுதல், தேவையற்ற ரோமங்களை நீக்குதல், புருவத்தைச் சீர்செய்தல், உதட்டுச் சாயம், சருமத்தைப் பளபளப்பாக்குதல், நிறம் மாற்றுதல் போன்றவையாகும். இதில் த்ரெட்டிங், வாக்சிங், பிளீச்சிங் எனப் பலவகை சேவைகள் அடங்கும். பெனிக்யூர், பெடிக்யூர் முதலியன கை, கால், உடல் மற்றும் நகம் போன்றவற்றைச் சீரமைக்கத் தேவையான சேவையாகும்.

திருமண மணப்பெண் அலங்காரம் மிக முக்கியமான ஒன்றாகும். நடைமுறை வாழ்க்கையில் மணப்பெண் அலங்காரம் என்பது பல ஆயிரம் ரூபாய் செலவில் சிறப்பாகச் செய்யபடுகின்றது. எனவே, இப்படிப்பட்ட அழகுக் கலையை நன்கு பயிற்சி பெற்று செய்வது மிக முக்கியம். சிறப்பான முறையில் சேவை செய்தால் நாளுக்கு நாள் வாடிக்கையாளர் அதிகரித்துக்கொண்டே இருக்கும். நல்ல லாபகரமான தொழில்.

திட்ட அறிக்கை:
முதலீடு:
இடம்      : வாடகை
கட்டடம் : வாடகை  இயந்திரங்கள்
மற்றும் உபகரணங்கள்    : 2.40  லட்சம்
இன்டீரியர் டெகரேஷன்: 1.60 லட்சம்
மின்சாரம்&நிறுவும் செலவு : 0.20 லட்சம்
இதர செலவுகள்    : 0.30 லட்சம்
நடைமுறை மூலதனம் : 0.50   லட்சம்
மொத்த முதலீடு : 5.00 லட்சம்

இந்தத் தொழிலை அரசின் மானியத்துடன் கடன் பெற்று சுயமாக செய்யலாம்.

மொத்த திட்ட மதிப்பீடு    : 5.00 லட்சம்
நமது பங்கு 5%    : 0.25 லட்சம்
அரசு மானியம் 25%    :  1.25 லட்சம்
வங்கிக் கடன்    : 3.50 லட்சம்
(UYEGP 3 லட்சம், PMEGP 10 லட்சம் வரை கடன் )

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்PMEGP என்பது பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம். இத்திட்டத்தில் உங்கள் திட்ட மதிப்பீட்டில் நீங்கள் 5% வரை கொண்டு வந்தால் போதும்.

அரசு நகர்ப்புறங்களில் தொழில் ஆரம்பிக்க 25% மானியமும் கிராமப்புறங்களில் தொழில் ஆரம்பித்தால் 35% மானியமும் வழங்கும் மீதம் வங்கியில் கடனாகப் பெறலாம். வங்கி 12% வட்டியில் 5 வருடக் கடனாகக் கொடுக்கும். இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள குழுத் தேர்வு செய்து, தகுதி அடிப்படையில் கடன் வழங்கப்படும்.  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்குத் திட்ட அறிக்கை தேவை.   

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்