+2 வேதியியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெறும் வழிகள்



+2 பொதுத்தேர்வு டிப்ஸ்

+2 படிக்கும் மாணவர்களின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் பாடப்பிரிவுகளில் வேதியியல் முதன்மையானதாக உள்ளது. இப்பாடத்தில் பெறும் மதிப்பெண் உயர்கல்வியில் விரும்பிய பாடத்தை தேர்வு செய்ய மிகவும் அவசியமாகும்.

 “திட்டமிட்டுப் படித்தல், முழுமையான ஈடுபாடு, ஆர்வம், முழுக் கவனம் செலுத்து தலோடு படித்தால் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெறுவது எளிது”  என்கிறார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியர் பி.ஏ.செந்தில்குமார். அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

+2 வேதியியல் பாடம் மருத்துவம், பொறியியல், உயிரி தொழில்நுட்பம் போன்ற பாடப்பிரிவுகளைப் படிப்பதற்கு அவசியமானது. இப்பாடத்தில் முழு மதிப்பெண்களைப் பெறுவதற்கு விடை குறிப்புகள் (Key Answer), கட்டாயக் கணக்கு, ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

* ஒரு மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை தன் மதிப்பீட்டு வினாக்களில் (Book Back Questions) குறைந்தபட்சம் 18 வினாக்கள் கேட்கப்படும். எனவே, தன் மதிப்பீட்டு வினாக்களை முழுவதும் படிக்க வேண்டும்.

இவற்றுடன் பழைய கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகளையும், கணக்கு வரும் பாடங்களான உட்கரு வேதியியல், வெப்ப இயக்கவியல் -II, வேதிச் சமநிலை-II, வேதிவினை வேதவியல் -II, மின்வேதியியல் I, கரிம நைட்ரஜன் சேர்மங்கள் போன்ற பாடங்களில் உள்ள கணக்குகளின் விடைகளைத் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

* மின்வேதியியல் -II, கரிம வேதியியல் மாற்றியம் மற்றும் நடைமுறை வேதியியல் பாடங்களைப் படிக்க வேண்டாம். அவற்றில் ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெறுவதில்லை.

* F தொகுதி தனிமங்கள், அணு அமைப்பு-II, d தொகுதி தனிமங்கள், வெப்ப இயக்கவியல் -II, புறபடிப்பு வேதியியல், ஈதர்கள், உயிர்வேதி மூலக்கூறுகள், கரிம நைட்ரஜன் சேர்மங்கள் போன்ற பாடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வினாக்கள் கேட்கப்படுவதால் அவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* மூன்று மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை அணைவுச் சேர்மங்கள், மின்வேதியியல் - II, ஈதர்கள், உயிர்வேதி மூலக்கூறுகள், F தொகுதி தனிமங்கள் போன்ற பாடங்களைப் படிக்க வேண்டாம். இவற்றில் மூன்று மதிப்பெண் வினாக்கள் இடம்பெறுவதில்லை.

* P தொகுதி தனிமங்கள், d தொகுதி தனிமங்கள் வேதிவினை வேகவியல்-II, ஹைட்ராக்ஸி வழிப்பொருட்கள் போன்ற பாடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மூன்று மதிப்பெண் வினாக்கள் இடம்பெறுவதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* கணக்கு வரும் பாடங்களில் உட்கரு வேதியியல், வெப்ப இயக்கவியல்-II, ஆவர்தன அட்டவணை-II, வேதிச்சமநிலை-II, வேதிவினை வேகவியல்-II, மின்வேதியியல்-I, கரிம நைட்ரஜன் சேர்மங்கள் ஆகியவை இடம்பெறும். எனவே, கணக்கு வரும் இப்பாடங்களில் கணக்குகளை முழுவதும் பயிற்சி செய்தல் வேண்டும்.

* ஐந்து மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை மூன்று பிரிவுகளாக உள்ளன. அவற்றில் முதல் பிரிவு கனிம வேதியியல் - 1) அணு அமைப்பு -II, 2) d தொகுதி தனிமங்கள், 3) அணைவுச் சேர்மங்கள், 4) F தொகுதி தனிமங்கள் போன்ற பாடங்களில் இடம்பெறும் இவற்றில் மூன்று (அ) இரண்டுக்கு விடையளித்தல் போதுமானது. இவற்றில் அணு அமைப்பு -II யில் கணக்கு வரும் வாய்ப்பு அதிகம்.

* இயற்பியல், வேதியியல் பாடங்களில் 1. வெப்ப இயக்கவியல் -II, 2. வேதிச்சமநிலை -II, 3. வேதிவினை வேகவியல் -II, 4. மின்வேதியியல்-II ஆகிய பாடங்களில் வினாக்கள் இடம்பெறும். இவற்றில் மின்வேதியியல் II-ல் கணக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். இவற்றுடன் வேதிவினை வேகவியல்-II மற்றும் வேதிச்சமநிலை -II இவற்றில்கூட கணக்கு இடம்பெறலாம்.

* கரிம வேதியியல் பாடங்களில் 1. கரிம வேதியியல் மாற்றியம், 2. ஈதர்கள், 3. கார்பனைல் சேர்மங்கள், 4. கார்பாக்ஸாலிக் அமிலங்கள் பாடங்களில் இருந்து வினாக்கள் வரும். இவற்றில் கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்ஸாலிக் அமிலங்கள் பாடங்களில் வரும் வினைவழி முறைகளில் ஒன்று கேட்கப்படலாம். எனவே, மொத்தம் உள்ள 9 வினை வழிமுறைகளை அவசியம் படிக்க வேண்டும்.

* பத்து மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும் பாடங்கள் 1.ஆவர்தன அட்டவணை -II, 2. P தொகுதி தனிமங்கள் இரண்டு பாடங்களையும் சேர்த்து படித்தல் வேண்டும். அப்போதுதான் ஒரு கேள்விக்கு விடையளிக்க முடியும். 3. அணைவுச் சேர்மங்கள் மற்றும் 4. உட்கரு வேதியியல் இரண்டு பாடங்கள் அடுத்த கேள்வியில் இடம்பெறும். இவை மட்டும் கனிம வேதியியல் இடம்பெறும் பாடங்கள் ஆகும்.

* இயற்பியல் வேதியியலைப் பொறுத்தவரை 1. திடநிலைமை -II, 2. புறபரப்பு வேதியியல் இரண்டு பாடங்களைப் படித்தல் வேண்டும். அடுத்து மின்வேதியியல்-I மற்றும் மின்வேதியியல் -II சேர்த்து ஒரு கேள்வி இடம்பெறும்.

* கரிம வேதியியல் பொறுத்தவரை 1. கரிம வேதியியல் மாற்றியம், 2. கார்பாக்ஸாலிக் அமிலங்கள் சேர்த்து ஒரு வினா, 3. கரிம நைட்ரஜன் சேர்மங்கள் மற்றும் 4. உயிர்வேதி மூலக்கூறுகள் சேர்த்து ஒரு வினா என  இடம்பெறும்.

* பத்து மதிப்பெண் வினாக்களில் கணக்குகள் இடம்பெறுவதில்லை. எனவே, மூன்று, நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கும் விதத்தில் தயார் செய்துகொண்டால் கட்டாயம் மூன்று வினாக்களுக்கு விடையளித்துவிட முடியும்.

* கட்டாயக் கணக்கு பொறுத்தவரை அல்லது என்று இடம்பெறுவதால் முதல் பகுதியில் d தொகுதி தனிமங்களும், ஹைட்ராக்ஸி வழிப்பொருட்களும் இணைந்து கேட்கப்படும். இவற்றில் d தொகுதி தனிமங்களில் உலோகங்களின் தயாரிப்பு மற்றும் வேதிப்பண்புகளைப் படிக்க வேண்டும்.

* மற்றொன்று மின்வேதியியல் -Iயில் எடுத்துக்காட்டு கணக்குகள் மற்றும் பயிற்சி கணக்குகளை முழுவதும் படிக்க வேண்டும். இதனுடன் கார்பனைல் சேர்மங்களில் பென்சால்டினைஹடு (C6H5CHO), அசிட்டோன் (CH3 CO CH3) அசிட்டால்டிஹைடு (CH3CHO) போன்றவற்றிலிருந்து வினாக்கள் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம்.மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி படித்தால் +2 வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண்களை அள்ளலாம்!வெற்றி பெற வாழ்த்துகள் மாணவர்களே!