உயர்கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பு!



அட்மிஷன்

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2007 ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டதுதான் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பஃர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மேனுபேக்சரிங் (Indian Institute of Information Technology, Design and Manufacturing-iiitdm). இந்தியாவின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் சர்வதேச தரத்தில் மாணவர்களை உருவாக்கி வருகிறது இக்கல்வி நிறுவனம். சென்னையின் புறநகர் பகுதியில் இயங்கும் இவ்வுயர்கல்விநிறுவனத்தின் 2018ம் ஆண்டிற்கான பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: இந்தியாவில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் அதிக முக்கியத்துவம் பெறும் இக்கல்விநிறுவனமானது கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் எஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங், மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ் போன்ற துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.

கல்வித் தகுதி: எஞ்சினியரிங் அல்லது  டெக்னாலஜியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பிஎச்.டி முழுநேர ஆராய்ச்சிப் படிப்பிற்கு  விண்ணப்பிக்க, ஐ.ஐ.டி.யி-ல் படித்தவர்கள் தங்கள் இளநிலையில் CGPA of 8.0 on a 10 point scale அல்லது GATE தேர்வில் அதற்கு இணையான மதிப்பெண்ணையோ பெற்றிருக்க வேண்டும். மற்றும் இந்திய அளவில் மற்ற பல்கலைக்கழகங்களில்  இளநிலை முடித்தவர்கள் அப்பல்கலையின் முதல் 10 ரேங்குக்குள் இருத்தல் அவசியம். எம்.இ./எம்.டெக். /எம்.டிசைன்/எம்.எஸ். ஆகிய முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் GATE தேர்வில் உயர் மதிப்பெண்களையோ அல்லது UGC/CSIR NET/NBHM ஆகியவற்றில் இணையான மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் வேண்டும்.

முதுநிலைப் பட்டம் படித்துவிட்டு பிஎச்.டி. படிக்க விரும்பும் மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் எஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங், மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ் போன்ற உயர்கல்வி துறைகளில் முது
நிலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் எஞ்சினியரிங் துறையின் கீழ்வரும் எம்.டெக் / எம்.இ/எம்.எஸ்., எலக்ட்ரானிக்கல் துறையின் கீழ்வரும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் துறையின் கீழ்வரும் ஏரோ ஸ்பேஸ் எஞ்சினியரிங், ஆட்டோ மொபைல் எஞ்சினியரிங், எனர்ஜி எஞ்சினியரிங், இன்டஸ்டிரியல் எஞ்சினியரிங், மெக்கட்ரானிக்ஸ், புரொடெக்‌ஷன் / மேனுபேக்சரிங் எஞ்சினியரிங் மற்றும்  மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ் போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.iiitdm.ac.in  என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆண் மாணவர்கள் ரூ.250-ம் மற்றும் பொதுப் பிரிவு மாணவிகள் மற்றும் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் ரூ.125-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பித்த மாணவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளின் மூலம் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். மாணவர்கள் தங்களின் முதுநிலைப் படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டும் ஆராய்ச்சிப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டு ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.25 ஆயிரமும், 3-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை ரூ.28 ஆயிரமும் உதவித்தொகை கிடைக்கும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வுயர்கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய கடைசி நாள் 30.4.2018.
தேர்வு நாட்கள்: கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் எஞ்சினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு 28.5.2018 அன்றும்,  மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் மாணவர்களுக்கு 29.5.2018 அன்றும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும்.

- வெங்கட்