டிஜிட்டல் மயமாகும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை!



இணையவழியில் இலவச கற்பித்தல் பயிற்சி!

திறன் மேம்பாடு

வேலை தேடும் இளைஞர்கள் தங்கள் சுயதிறனை மதிப்பீடு செய்து மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக டிஜிட்டல் வேலைவாய்ப்பு முறைக்கான இணைய பக்கங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வடிவமைத்துவருகிறது. படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வெவ்வேறு துறையில் பணிபுரிந்த அனுபவத்தோடு வேலை தேடுவோர் இந்த இணைய பக்கத்தில் சென்று அதில் கோரப்படும் தகவல்களை அளிப்பதன் மூலமாக துறைவாரியாக தங்களுக்கான திறன் (ஸ்கில்), எந்தத்துறையில் தங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது என்பதை அறியமுடியும்.

கிடைக்கும் பதிலைப் பெற்று, பிறகு தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பயிற்சி மூலமாக திறனை வளர்த்துக்கொண்டு, மீண்டும் இணைய பக்கத்தில் மதிப்பீடு செய்யும்போது போதிய திறனைப் பெற்றிருந்தால் அதில் ‘SKILL OK’ என்று வந்துவிடும். போதிய திறனுடன் நிறுவனங்களை நாடும்போது எளிதாக அதிக ஊதியத்துடன் வேலையைப் பெற முடியும். இந்த இணையதள பக்கம் குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி கூறும் தகவல்களைப் பார்ப்போம்…

‘‘மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission ), மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (Staff Selection Commission ), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commission), ஆசிரியர் தேர்வுவாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (Railway Recruitment Board), இந்திய வங்கிப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம், ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்ற அமைப்புகள் போட்டித் தேர்வுகளை நடத்தி அதன்மூலம் நேரடியாக பணிநியமனம் செய்து வருகின்றன.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு பிரிவினால், இப்பணிக்களுக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வேலை நாடுநர்களுக்கு பயன்படும் விதமாக இலவசமாக ‘மெய்நிகர் கற்றல்’ முறையில் பாடத்திட்டங்கள் வலைத்தளம் மூலம் வழங்கப்பட உள்ளது.   இதற்காக தமிழக அரசு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளது. எங்கும், எதற்கும் கணினி பயன்பாடு என்ற நவீன காலத்திற்கேற்ப, வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்களை ஈர்க்கும் விதமாக இவ்வலைத்தளம் உருவாக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.in உடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.

வேலைநாடுநர்கள் அரசுப் பணிகளுக்காக நடைபெறும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு பயன்பெற, 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகைபுரியும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் செய்தித்தாள்கள், வார/மாத இதழ்கள் தற்போதைய புத்தக வெளியீடுகள், படிப்பு குறிப்புகள் மற்றும் முந்தைய தேர்வு வினாத்தாள்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் தகுதி படைத்த இளைஞர்கள் மற்றும் பிற அரசு வேலைநாடுநர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்துகொள்வதற்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அமைந்துள்ள தன்னார்வப் பயிலும் வட்டங்கள் மூலம் அளிக்கப்பட்டுவருகின்றன. இத்தன்னார்வப் பயிலும் வட்டங்களைப் பயன்படுத்தும் வேலை நாடுநர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவருவதால், இவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மெய்நிகர் கற்றலுக்கான வலைத்தளம் உருவாக்கப்பட்டு இதில் மின்-கற்றல்,

மின் - பாடக்குறிப்புகள், மின் - புத்தகங்கள் மற்றும் இணையதள மெய்நிகர் கற்றலோடு, கலந்துரையாடலுடன் கூடிய காணொலி மூலம் கற்கும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இக்கற்றல் வழியானது வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்துகொள்ளவும், தனித் திறன்களை மேம்படுத்தவும், அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டு வேலைவாய்ப்பு பெறும் தகுதியைப் பெறவும் தேவையான உதவிகளை இவ்வலைத்தளம் அளிக்கும்’’ என்று தெரிவித்தவர் செயல்முறைகள் பற்றியும் விளக்கினார்.‘‘இந்தத் திட்டத்திற்கான பாடக்குறிப்புகள், காணொலிகள் யாவும் மிகவும் கவனத்துடன் தயாரிக்கப்பட்டு வருவதுடன்,

தேர்ந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் மிக சமீபத்திய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவை தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனுறும் விதமாக எளிமைப்படுத்தப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்குமான மாதிரி தேர்வு மேற்கொள்ளவும் மற்றும் அதனடிப்படையிலான சுயமதிப்பீடு செய்துகொள்ளவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது’’ என ஆணையர் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த ஆணையர் ஜோதி நிர்மலாசாமி, ‘‘இக்கற்றல் வழியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நேரடி காணொலி வகுப்பு போட்டித் தேர்வுகளை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் அமையும். இவ்வலைத்தளத்தினை ‘யூ- டியூப்’ வாயிலாக காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பாடத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவர்களின் கைபேசிகளிலேயே தாங்கள் விரும்பும் பாடத்திட்டங்கள் மற்றும் போட்டித்தேர்வு விவரங்களை அறிந்துகொள்ள வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் போட்டித் தேர்வுகள் அறிவிப்பு விவரங்கள், நடைபெறவுள்ள தேதி, அதற்கு உரிய படிவங்களை சமர்ப்பிப்பதற்கு உரியநாள் ஆகியவை பங்குபெறும் மாணவர்களின் கைபேசிகளுக்கு குழும செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

இந்த வலைத்தளம் மின்-பாடக்குறிப்புகளை தமிழிலும் வழங்குவதால் மொழியினால் ஏற்படும் தடைகள் நீங்கியதாக அமையும். பல தனியார்களால் அதிக அளவிலான கட்டணத்துடன் நடத்தப்படும் இத்தகு பயிற்சி வகுப்புகளில் சேர இயலாத நடுத்தர மற்றும் மிகக் குறைந்த வருமானம் பெறும் ஏழை எளிய குடும்ப மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும் தரமான இச்சேவை மிகவும் பயனுள்ளதாக அமையும். அதேபோல் வலைத்தளம் மூலமான கற்றல் என்பதால் தமிழகத்தில் உள்ள பின்தங்கிய கிராமங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் தொலைதூரத்தில் உள்ள வேலை நாடுநர்களும் இதனால் அதிக பயன் பெறுவார்கள்’’ என்றார்.

- தோ.திருத்துவராஜ்