+2 மாணவர்களே பொதுத் தேர்வுக்கு தயாராகுங்க!



பொதுத் தேர்வு டிப்ஸ்

கே.கே.தேவதாஸ் M.Sc;  M.A., M.Phil., M.Ed., MBA,
முதுகலை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,செஞ்சி.


+2 பொதுத் தேர்வுக்கு வெகு நாட்கள் உள்ளதே மெதுவாக படித்துக்கொள்ளலாம் என்று மாணவர்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. நாட்கள் வேகமாக உருண்டோடிவிடும். பள்ளிக் கல்வித்துறை வேறு அவ்வப்போது திட்டங்களை மாற்றிக்கொண்டேயிருப்பதால் படிப்பதிலும் தேர்வை எதிர்கொள்வதிலும் மாணவர்கள்தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு +1க்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. +1 மற்றும் +2 பொதுத்தேர்வு மதிப்பெண்களே உயர்கல்விக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்த பள்ளிக் கல்வித்துறை, இந்த ஆண்டு +2 மதிப்பெண் மட்டுமே உயர்கல்விக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் +1 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும், அதிக மதிப்பெண் எடுக்காமல் இருந்தாலும் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் +2 பொதுத்தேர்வில் அவசியம் அதிக மதிப்பெண்கள் எடுத்தே ஆகவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. அதிலும் 600 மதிப்பெண்களுக்குத்தான் கணக்கிடப்படும் என்பதால் அதற்குத் தக்கபடி மாணவர்கள் தயாராக வேண்டும்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நாம் எந்தப் படிப்பை நோக்கிப் பயணிக்கப் போகிறோம் என்பதைக் காட்டும். பிளஸ் 2 பொதுத் தேர்வோ உயர்கல்வியை மட்டுமல்ல, அடுத்து என்னவாகப் போகிறோம் என்பதையும் சேர்த்தே காட்டும். அப்படி முக்கியத்துவம் பெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளைப் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்புகளே பல மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு பற்றிய பயத்தைக் கூட்டிவிடும்.

அதிகளவில் மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களைப் பெற்றோர் வழி நடத்துகின்றனர். மேலும், மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டுத் தரத்தைக் குறைத்துவிடுகின்றனர். அவ்வாறு செயல்படக்கூடாது. கல்வியும், தேர்வும் நமக்கு அடித்தளம். தேர்வைக் கண்டு அஞ்சக் கூடாது. நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அப்படி பொதுத்தேர்வை எதிர்கொள்ள இப்போதிருந்தே தயாராக என்ன செய்ய வேண்டும் என்பதை இனி பார்ப்போம்.

பள்ளிப் பருவம் முதல் கல்லூரி வரை மாணவர்களுக்கு எழும் கேள்வி, எப்படி படிப்பது?, எப்படி அதிக மார்க் எடுப்பது? என்பதுதான். முதலில் வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

திட்டமிட வேண்டும்எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. ஒவ்வொரு பாடத்துக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்கமுடியும்.

படிக்கும் இடம் முக்கியமானது. அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும்போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தைப் படிக்க முடியும். அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும்.

படிக்கும்போது, குறிப்பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்துப் பாடத்தையும் திரும்பப் படிக்க முடியாது. அந்தத் தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.நன்றாகச் சாப்பிட வேண்டும். சத்தான உணவு உண்ணுவது அவசியம். அதேபோல, போதிய தூக்கம் அவசியம். இரவு முழுவதும் விழித்திருந்து படிப்பது தவறு. அது உடல் சோர்வை ஏற்படுத்தும்.

எவ்வாறு படிப்பது?

*ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்துவிடக்கூடாது.

*படிக்கப்போகும் பாடம் முழுவதையும் முதலில் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும், துணைத் தலைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.

*முக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.

*தலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.

*பாடச்சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.

ஆர்வம்

எந்த ஒன்றில் வெற்றி பெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். படிக்கும்போதும் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது ‘கடினமான பாடம்’ என நீங்கள் நினைப்பதுதான் உங்களுடைய ஆர்வத்தைக் குறைக்கின்றது, ‘கடினமான பாடம்’ என்று எதுவும் இல்லை, நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். விரும்பிப் படித்தால் எதுவும் கடினமில்லை.

மறதி

மாணவர்களுக்குப் பொதுவாக உள்ள குறை மறதி. நன்றாகப் படித்தேன். ஆனால், தேர்வறைக்குச் சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, எனப் பல மாணவர்கள் கூறுவார்கள். இது மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. கவனமாகப் படியுங்கள், படிக்கும்போது யாரிடமும் பேசாதீர்கள்; பாட்டு கேட்காதீர்கள்; டிவி பார்க்காதீர்கள்; இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள்; அதிகாலையில் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள்.

எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தைப் படிக்கும்போது அந்தப் பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்கு செல்ல வேண்டும்.
படிப்பதைத் தள்ளிப்போடாதீர்கள்படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதைத் தள்ளிப்போடாதீர்கள். இப்படி தள்ளிப்போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கைப்
பாதையும் மாறிவிடும்.

பெற்றோர்கள் கவனத்துக்கு

மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளைத் தங்களுடைய பிள்ளைகள் நடைமுறைபடுத்துகின்றார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். ஏனெனில் கல்விக் கட்டணம் கட்டுவது நீங்கள்தான். அதைக் கவனத்தில்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

வெற்றி பெறுவதற்கு, குறுக்குவழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.