சிறுநீர்க்கசிவு ஏற்படக் காரணம் என்ன?



சிலருக்கு தும்மும்போதோ, இருமும்போதோ, சிரிக்கும்போதோ அல்லது பளுவான பொருட்களை தூக்கும்போதோ அவர்களின் கட்டுப்பாடு இல்லாமலே சிறுநீர் கசிய ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னையின் காரணம், தீவிரம் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மீரா ராகவன்.

‘‘இந்த பிரச்னைக்கு Stress incontinence என்று பெயர். இந்த சிறுநீர்க் கசிவு பிரச்னையானது பெண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது. அது எந்த வயதிலும் ஏற்படலாம். பொதுவாக, இந்தப் பிரச்னை 35 வயதினருக்கு மேலேயே அதிகமாக தோன்ற ஆரம்பிக்கும். முக்கியமாக பெண்கள் மெனோபாஸ் காலத்திலும் அதற்குப் பிறகும் இந்தப் பிரச்னையால் அவதியுறுவர்.’’

சிறுநீர்க்கசிவு ஏற்படக் காரணம்?

‘‘உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு இவை ஏற்படும். தொடர்ந்து அதிக பளுவான பொருட்களை தூக்குபவர்களுக்கும் அல்லது பளுவான பொருட்களை தூக்கும் பணியில் இருப்பவர்களுக்கும் இது எளிதாக ஏற்படுகிறது.

சிறு வயதிலேயே கர்ப்பப்பை அகற்றியவர்களுக்கும், அதிக முறை நார்மல் டெலிவரியில் குழந்தை பிறந்தவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படலாம். மெனோபாஸ் வயதினருக்கு இந்த சிறுநீர்க்கசிவு பிரச்னை சற்று அதிகமாகவே காணப்படும். பேறு காலத்தில் ஏற்படும் சிறுநீர்க்கசிவானது சிறிது காலத்திலேயே சரியாகிவிடும். அதைப் பற்றி கவலைப்பட
வேண்டியதில்லை.’’

சிறுநீர்க்கசிவானது எதனால் ஏற்படுகிறது?

‘‘சிறுநீர்ப்பையை சுற்றியுள்ள தசைகள் நலிவடைந்து தொய்ந்து போய்விடுகிறது. அதனால் சிறுநீர்ப்பையை தாங்கும் சக்தி இல்லாமல் பை வலுவிழந்துவிடுகிறது. இதனால் திடீரென்று பெரிதாக சிரிக்கும்போதோ பளுவான பொருட்களை தூக்கும்போதோ கசிவு ஏற்படுகிறது. மெனோபாஸ் காலத்தில் இது இயற்கையாக ஏற்படும். கர்ப்பப்பை அகற்றிய பெண்களுக்கும் சிறுநீர்க்கசிவானது ஏற்படும்.’’

மன அழுத்தத்தாலும் இவை ஏற்படுமா?

‘‘சிறுநீர்க்கசிவானது மன அழுத்தத்தால் ஏற்படுவது இல்லை. உடலில் ஏற்படும் மாற்றங்களாலேயே கசிவானது ஏற்படும். கசிவு ஏற்படுவதால் மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்தால் சிறுநீர்க்கசிவு ஏற்படாது.’’
இவற்றால் உடலில் ஏற்படும் பிரச்னைகள்?

‘‘அடிக்கடி உடை நனைவதால் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். பூஞ்சைத் தொற்று இதனால் ஏற்படலாம். வெளியிடங்களுக்குச் சென்று வருவது கடினமாக இருக்கும். வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டி வரலாம். இந்தக் கசிவானது தொடர்ந்தால் சிறுநீர்ப்பை இறங்கும் வாய்ப்பு உள்ளது.’’

இதற்கான தீர்வு என்ன?

‘‘உடல் பருமன், நீரிழிவு, ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்திருப்பது, ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது, இதற்கான பிரத்யேக kegel exercise செய்வது போன்றவற்றால் இவற்றின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

இந்த உடற்பயிற்சிக்கு யோகாவில் அஷ்வினி முத்ரா என்று பெயர். சிறுநீர்ப்பையை சுற்றியுள்ள தசைகள் வலுவடைவதற்காக இந்த உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். தசைகள் வலிவடைவதால் சிறுநீர்க்கசிவை தடுக்கும் அல்லது கசிவை தீவிரப்படுத்தாமல் இருக்கும். தும்மும்போதோ அல்லதுஇருமும்போதோ ஏற்படும் சிறுநீர்க்கசிவை கட்டுப்படுத்த உடற்பயிற்சிகள் மட்டும் போதாது.

தும்மல் ஏற்படக் காரணமான அலர்ஜியைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். செல்லப் பிராணிகள் வளர்ப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றை தவிர்ப்பதும் அவசியம். இவற்றின் மூலம் சிறுநீர்க்கசிவை குறைக்க முடியும். சிறு குழந்தைகளுக்கு சிரிப்பதால் ஏற்படும் சிறுநீர்க்கசிவானது அவர்கள் வளர வளர சரியாகிவிடும்.

பெரியவர்களுக்கு ஏற்படும் தும்மல் மற்றும் இருமலால் ஏற்படும் சிறுநீர்க்கசிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை பெற வேண்டும். சிறுநீர்க்கசிவானது குறைந்தாலும் அதற்கான Uro gynecologist மருத்துவரின் ஆலோசனைப்படி இதை சரிசெய்து கொள்வது அவசியம்.’’

- மித்ரா