புல்லும் மருந்தாகும்!



உணவே மருந்து

துரித உணவுப்பழக்கம், தவறான வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் நமது உடல் நோய்களின் கூடாரமாகிவிடுகிறது. இதனால் வைட்டமின் குறைபாடு, புற்றுநோய், மலச்சிக்கல் மற்றும் பல்வேறு விதமான சரும நோய்களும் ஏற்படுகின்றன. இத்தகைய நோய்களின் பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக்கொள்ளவும் கோதுமைப்புல் மற்றும் அறுகம்புல் சாறுகள் உதவுகின்றன என்கிறார் இயற்கை மருத்துவர் எஸ்.இந்திராதேவி.

கோதுமைப்புல்

கோதுமைப்புல் மற்ற புல் வகைகளைவிட, மிகவும் சிறந்தது. இதில் நமக்குத் தேவையான ஏராளமான சத்துகள் உள்ளன. இதிலுள்ள குளோரோபில்லில் வைட்டமின் ஏ, சி, பி, இ, கே மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்தும் லேட்ரைஸ்பி17 ஆகியவை அடங்கியுள்ளன. எனவே, இதை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக அருந்தலாம். இந்த சாறு ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை குறைத்து, ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு செரிமான சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

இதுதவிர, நாள்பட்ட நோய்களான உயர் ரத்த அழுத்தம், ஞாபக மறதி, பாலியல் பிரச்னைகள், ஆஸ்துமா போன்றவற்றையும் சரி செய்கிறது. அதீத பருமன் மற்றும் மாதவிலக்கு சிக்கலையும் தீர்க்க உதவுகிறது. தினமும் இச்சாறை ஒரு டம்ளர் அளவுக்கு அருந்துவது நல்லது. சிறிய அளவு பஞ்சினை எடுத்து இதன் சாற்றில் நனைத்து அடிபட்ட காயத்தில் வைக்கும் போது நல்ல ஆன்டிபயாடிக்காக செயல் பட்டு காயத்தை ஆற்றுகிறது. இந்த சாற்றைக் கொண்டு வாய்கொப்புளிக்கும் போது தொண்டைப் புண்கள் குணமாகின்றன.

அறுகம்புல்

‘பெர்முடா கிராஸ்’ என்று அழைக்கப்படுகின்ற அறுகம்புல்லில், புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துகள் ஏராளமாக உள்ளன. இதில் அடங்கியுள்ள சிட்டோசிரால் மற்றும் நார்ச்சத்து இரண்டும் தேவையில்லாத உடல் கொழுப்பு, வழுக்கை, சிறுநீரக கற்கள், தலைவலி, உடல் வலி போன்ற பிரச்னைகளை குறைக்கின்றன. இதில் உள்ள குளோரோபில் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. இச்சாறு நெஞ்சு எரிச்சலை நீக்கி, மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்னைகளையும், வாதம், பித்தம், கபம் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றையும் சரி செய்கிறது.

அறுகம்புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து சருமத்தில் பூச, சருமம் தொடர்பான குறைபாடுகள் நீங்கும். குறிப்பாக, தொழுநோயைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு. அறுகம்புல்லினை மென்றுவர, ஈறுகளில் இருந்து உண்டாகும் ரத்தக்கசிவு குணமாகும். நமது உடலுக்கு இயற்கை அளித்த கவசமாக திகழ்கிற அறுகம்புல் சாற்றை தினமும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வரலாம்.

விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்