ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்... காஷ்மீரா பர்தேஷி!
தமிழ்த் திரையுலகில் இயக்குனர் சசி இயக்கத்தில், சித்தார்த் மற்றும் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் 2019 இல் வெளியாகி வெற்றி பெற்ற சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை காஷ்மீரா பர்தேஷி. இந்தப் படத்தை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த அன்பறிவு படத்திலும் நடித்திருந்தார்.
 அதன்பிறகு, ஜீவாவுடன் இவர் நடித்த வரலாறு முக்கியம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது தமிழில் இயக்குநர் அரவிந்த ராஜ் இயக்கத்தில் பரம்பொருள், பாபி சிம்ஹாவுடன் வசந்த முல்லை, மீண்டும் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து பிடி சார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் காஷ்மீரா பர்தேஷி. படித்தது, வளர்ந்தது எல்லாம் புனே, மஹாராஸ்ட்டிரா மாநிலத்தில். காஷ்மீரா, பேஷன் மீதுள்ள ஆர்வத்தால், பி.காம் படித்து முடித்த பிறகு, மும்பை நிப்ட் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். கல்லூரி பருவத்திலேயே மாடலிங் துறையில் வாய்ப்பு வர, மாடல் ஆனார். அதைத் தொடர்ந்து விளம்பர படங்கள், திரைப்படங்கள் என வாய்ப்புகள் அடுத்தடுத்த கட்டத்திற்கு இவரை கொண்டு சென்றது.
தெலுங்கில் ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான நர்தனசாலா என்ற படத்தின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் காஷ்மீரா. அதைத் தொடர்ந்து, அக்ஷய் குமார் மற்றும் நடிகை வித்யாபாலன் நடிப்பில் வெளியான மிஷன் மங்கல்யான் படத்தில் காஷ்மீரா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி, கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் காஷ்மீரா நல்ல நடன கலைஞரும் ஆவார். அவரது 6 வயதிலிருந்து முறைப்படி நடனம் கற்று உள்ளார்.
இந்திய பாரம்பரிய நடனங்களான குச்சுப்புடி, கதக், பரத நாட்டியம் போன்ற 8 விதமான கிளாசிக்கல் நடனம் கற்றவர். முறைப்படி வாய்ப்பாட்டும் கற்றுள்ளார். காஷ்மீரா பர்தேஷி தனது பிட்னெஸ் ரகசியங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை: ஃபிட்னெஸ் மாடலிங் துறையிலும் சரி, நடிப்புத் துறையிலும் சரி நீடித்து இருக்க வேண்டும் என்றால் உடலை பிட்டாக வைத்துக் கொள்வது மிகமிக அவசியம். எனவே, எப்போதும் என்னை பிட்டாக வைத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பேன்.
எத்தனை வேலை பளு இருந்தாலும், தினசரி ஜிம்முக்கு சென்று 1-2 மணி நேரம் வரை உடற்பயிற்சிகள் செய்வதை நிறுத்த மாட்டேன். அதுபோன்று தினமும் குறைந்தது ஒருமணி நேரமாவது யோகா பயிற்சியில் ஈடுபடுவேன். யோகா பயிற்சி என் மனதை ஒருநிலைப்படுத்துவதோடு புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது. அதுபோன்று மாலை நேரங்களில் நடன பயிற்சிகளில் ஈடுபடுவேன்.
டயட் பிட்னெஸ்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாலும் உணவு விஷயத்தில் நான் ரொம்பவே வீக் டயட் கண்ட்ரோல் எல்லாம் கிடையாது. டேஸ்ட்டான உணவுகள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று தேடி தேடி உண்ணும் அதிதீவிர புட்டி நான். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த உணவு பிரியாணி.
அதுபோன்று, லக்னெளவின் பாரம்பரிய உணவு வகைகள், மராத்திய பாரம்பரிய உணவுகள், இந்திய உணவு வகைகள் பீட்சா, பாஸ்தா, பர்கர், மோமோஸ், சமோசா, கேக் வகைகள், எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு நடிகையாக இருந்துக் கொண்டு இவ்வளவு உணவு பிரியையாக இருக்கீங்களே என்று எல்லோரும் கேட்பார்கள். நான் என்ன உணவு சாப்பிட்டாலும், அதற்கு தகுந்தவாறு உடற்பயிற்சிகளை செய்து அதனை சமன் செய்து விடுவேன்.
பியூட்டி ஒரு மாடலாக இருப்பதால், பிட்னெஸ் போலவே, பியூட்டி விஷயத்திலும் மிகவும் கவனமாக இருப்பேன். அதற்காகவே, பி.காம் முடித்த பிறகு, மும்பை நிப்ட் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படித்தேன். எனக்கு அவ்வப்போது டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி மாறும் பேஷன் நகைகள் அணிவது ரொம்ப பிடிக்கும்.
அதற்காகவே தேடி தேடி வாங்குவேன். மேலும், விதவிதமான ஷூக்கள் அணிவதிலும் அலாதி பிரியம் உண்டு. அது போலவே, வாசனை திரவியத்துக்கும், லிப்ஸ்டிக்கும் எனது மேக்கப் கிட்டில் முக்கிய இடமுண்டு. இதற்காகவே, டாப் பிராண்ட்கள் அறிமுகம் செய்யும் விதவிதமான வாசனை திரவியமும், லிப்ஸ்டிக்கும் வாங்கி வாங்கி சேர்த்து வைத்துக் கொள்வேன்.
- ஸ்ரீதேவி குமரேசன்
|