ஓட்சி என்ற பனி மனிதன்!



ஆஸ்திரிய - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள ஆல்பைன் என்ற பனிமலையில் 1991ம் ஆண்டில் ஹெல்முட் சைமன் மற்றும் எரிக்கா சைமன் என்ற இருவரும் ஏறினர். அப்போது அங்குள்ள பனியாற்றில் புதைந்த நிலையில் இருந்த, இறந்த பனி மனிதனின் உடலைக் கண்டெடுத்தனர். ஓட்சி என்ற இடத்தில் அந்த பனி மனிதன் உடலை கண்டுபிடித்ததால் அந்த பனி மனிதனுக்கு ஓட்சி (Oetzi) என்று செல்லமாக பெயரிட்டனர்.

அந்தப் பனி மனிதனும், அவனது சொத்துகளான உடை மற்றும் பொருட்களும், இத்தாலியின் தெற்கு டைரோலில் உள்ள போல்சானோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பனிமனிதன் காயத்தில் உறைந்திருந்த ரத்தக் கலம்தான், நாம் இதுவரை அறிந்தவற்றில் மிக மிகப் பழமையான ரத்தக் கலம்.

தற்போதைய அறிவியல் தகவல்படி உலகில் அதிக வயதுள்ள, நன்றாக இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்டுள்ள மனித மம்மி இது மட்டுமே. இதில் பல ஆராய்ச்சிகள் செய்து ஓரளவுக்குத் தகவல்களைத் திரட்டியுள்ளனர். இந்த கற்கால மனிதன் ஒரு காயத்தினால் உடனே இறந்திருக்கிறான். பனி மனிதன் மிக வன்மையாகத் தாக்கப்பட்டு, கொடூரமான முறையில் இறந்திருக்கிறான் என்றும் கண்டறிந்துள்ளனர். இந்த உடலைக் கண்டுபிடித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இதனைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிந்தபாடில்லை.

உலகில் இதுவரை அதிகமாக ஆராயப்பட்ட ஒரு மம்மி உண்டென்றால், அது ஓட்சிதான். ஃபைனெய்ல்ஸ்பிட்ஸ் மற்றும் சிமிலாம் மலைகளுக்கிடையே உள்ள ஹாஸ்லாப்ஜோ என்னும் இடத்தில் ஓட்சி பள்ளத்தாக்கில் கிடந்திருக்கிறான் இந்தப் பனி மனிதன். இந்தப் பகுதியில் ஓட்சி பள்ளத்தாக்கின் ஓரங்களை அலங்கரிக்க அடுக்கி வைத்தது போல வரிசையான ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.

அங்கே ஓட்சி ஆல்ப்ஸ் பள்ளத்தாக்கில் இன் நதியில் பனிப் பாளங்களுக்கிடையே சொருகிக் கிடந்திருக்கிறான் இந்தப் பனி மனிதன். இந்தப் பகுதி ஆஸ்திரிய, இத்தாலிய எல்லையில் இருப்பதால் இது இரு நாடுகளுக்கும் சொந்தமானது. இதுவரை கிடைத்த ஐரோப்பிய மம்மிகளிலேயே இதுதான் நன்கு இயற்கையில் பதப்படுத்தப்பட்ட மனித மம்மியாகும்.

‘ராயல் சொசைட்டி இன்டர்ஃபேஸ்’ என்ற அறிவியல் பத்திரிகையில் ஓட்சி பற்றிய புதிய கண்டுபிடிப்புத் தகவல்கள் வந்துள்ளன. ஓட்சி பனி மனிதன் நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் இருந்திருக்கிறான். அவன் இறப்பதற்கு முன் தானிய ரொட்டியையும் சிவப்பு மானின் இறைச்சியையும் உண்டிருக்கிறான். அவன் ஏன் இறந்தான் என்பதன் காரணமும் கூட கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. ஒரு அம்பு அவனது தோளில் இறங்கி, அங்குள்ள தமனியை ஊடுருவிச் சென்றதன் விளைவால் இறப்பு நிகழ்ந்திருக்கிறது.

ஆல்பர்ட் ஜிங்க் என்ற ஆய்வாளரும் அவரது குழுவினரும் ஓட்சியின் தோள் காயத்திலிருந்து திசு மாதிரிகளை எடுத்தனர். அது போலவே, அவன் வலது கையில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்தும் திசு மாதிரிகள் எடுத்தனர். வெறும் சாதாரண உருப்பெருக்கி கொண்டு பார்த்தபோதே அவை வட்ட வடிவ சிவப்பணுக்கள் போலவே காணப்பட்டன. ஜிங்க் ‘இது கட்டாயமாய் மனிதனின் சிவப்பணுக்கள்தான்’ என்று உறுதியாக நம்பினார். மேலும் இது தொடர்பான நவீன தொழில்நுட்ப அளவிலான ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பினார்.

மற்ற ஆய்வாளர்கள் பழங்கால, தற்காலக் கருவிகளில் பனி மனிதனின் ரத்தம் பற்றி ஆராய முயற்சி செய்யும்போது, இந்தப் பனி மனிதனின் ரத்த சான்று நேரடியாக நின்று மனிதவியல் துறைக்கு பெரிதும் உதவுகிறது. அவன் அம்பால் குத்தப்பட்டும் கூட பல மணி நேரம் அல்லது சில நாட்கள் இறக்காமல் இருந்திருக்கிறான். அவன் தோள்பட்டையில் உள்ள ரத்தத் தமனி அறுபட்டு அதிகமாக ரத்தம் வடிந்து இதயம் இயங்க மறுத்து இறந்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.

அவனது முதுகில் அம்பின் தலை குத்திக் கிடக்கிறது. அது 6.5 செ.மீ. ஆழமான காயத்தை உண்டு பண்ணியுள்ளது. அவன் அந்த இடத்தைச் சுற்றி சுமார் 65 கி.மீ. சுற்றளவில் மட்டுமே சுற்றி வந்திருக்கிறான் என்றும் இப்போது தெரிவிக்கின்றனர். அவனை முழுதும் ஆராய்ந்து விஞ்ஞானிகள் அவன் 5 அடி 2.5 அங்குலம் இருந்தான் என்று கணிக்கின்றனர். அவன் இறந்த பிறகு, உடலின் உயரம் சில அங்குலங்கள் குறைந்திருக்கலாம். இறப்பு நிகழும்போது அவனது எடை 110 பவுண்டுகள். ஆனால் இப்போதுள்ள மம்மியின் எடை வெறும் 29 பவுண்டுகள் மட்டுமே. பனி மனிதன் இறக்கும்போது அவனுக்கு வயது 46. பொதுவாக அந்தக் காலத்தில் இந்த வயது வரை பலரும் வாழ்ந்ததில்லை.

பனி மனிதனுக்கு பழுப்பு வண்ணக் கண்கள் இருந்தன. அவனது இரத்தம் ‘ஓ’ குரூப்பைச் சேர்ந்தது. அதுவும்  rh+ (Rhesus Positive)  வகை ரத்தம்தான். மனித சமுதாயம் கண்டறிந்தவற்றில் இதுதான் உலகின் முதல் கொலையும், முதல் மனித ரத்தமும் கூட. ஓட்சி பனி மனிதனைப் பற்றி ஆய்வாளர்கள் தரும் தகவல்களை அறியம்போது ஆச்சரியத்தில் புருவங்கள் விரிகின்றன.

- சி.பரத்