சிலந்திகள்



பொதுவாக சிலந்திகள் என்றால் மனிதர்களுக்குப் பயம்தான். அதற்கு காரணம் அவைகள் பார்ப்பதற்கு மற்ற பூச்சிகளைக் காட்டிலும் சற்று வேறுபட்டு உள்ளன. அவைகளுக்கு எட்டு கால்கள், 2 முதல் 8 கண்கள் உள்ளன.
உடல்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தலை மற்றும் உடல் பகுதி. இந்த சிலந்திகள் அனைத்தும் பூச்சி இனத்தில் வருவதில்லை. காரணம், பூச்சிகளுக்கு ஆறு கால்கள் இந்த சிலந்திகளுக்கு மட்டும் எட்டு கால்கள்.

வீட்டு சிலந்திகள்

இந்த சிலந்திகள் இருளடைந்த இடங்களை அதிகம் விரும்பும். வீட்டுக் கூரை மற்றும் ஜன்னல் பக்கம் வலை கட்டும். நிறைய பூச்சிகளைப் பிடிக்க முடியும் என்பதால் இந்த இடங்களை தேர்ந்தெடுக்கிறது. வலையைக் கட்டி முடித்ததும் ஒரு ஓரமாக அமர்ந்து பூச்சிகள் வருவதற்காகக் காத்திருக்கும். பெரிய பூச்சிகள் மாட்டினால் அவற்றின் மேல் அதிக அளவு நூலைப் போட்டு பிடித்துக் கொள்ளும்.

வெக்டர்கள் என்று அழைக்கக்கூடிய நோய்களைக் கடத்தும் ஈக்கள் போன்றவற்றை சிலந்திகள் பிடித்து சாப்பிடுவதால் வீட்டில் நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த காவலாளியாக இந்த சிலந்திகள் நன்மை செய்கின்றன.

தோட்ட சிலந்திகள்

தோட்டங்களிலும் புல்வெளி களிலும் வாழும். கருப்பு மற்றும் மஞ்சள் கோடுகளுடன் காணப்படும். நடுப்பகுதியில் சற்று அதிகமாக இருக்கும். ஆண் சிலந்தி பெண் சிலந்தி சுற்றிய வலையை மேலும் பெரிதாக்கிக்கொண்டே போகும். இதைப் ‘பூச்சிலந்தி’ என்றும் சொல்வார்கள். மஞ்சள் உடலில் சிவப்பு தீற்றல்கள் இருக்கும். கண்களுக்கு இடையேயும் சிவப்பு வண்ணம் காணப்படும். இவை புல்வெளி, வயல், தோட்டங்களில் வெள்ளை, மஞ்சள் மலர்களின் மேல் மலர்ந்திருக்கும்.

இவை பெரிய மலர்களின் ஓரத்தில் அமர்ந்திருக்கும். பூவிலுள்ள தேனைக் குடிக்க பூச்சிகள் வந்ததும் பிடித்து அவற்றின் உடலுக்குள் விஷத்தை ஏற்றும். இந்த விஷம் பூச்சியின் உடலில் உள்ள பாகங்கள் அனைத்தையும் உருக்கி திரவமாக மாற்றும். அதன் பிறகு அந்த திரவத்தை அப்படியே உறிஞ்சிக் குடிக்கும்.

பச்சைச் சிலந்தி

இவை வயல்களிலும் காடுகளிலும் காணப்படும். புதர்களிலும் சின்னச் செடிகளிலும் கூட இருக்கும். வேகமாக ஓடக்கூடிய இச்சிலந்திகள் பூச்சிகளை பூனை போல் பதுங்கிச்சென்று பிடித்து உண்ணும்.

கரோலினா உல்ஃப் சிலந்தி

இவை வயல்களில் காணப் படும். தரையில் கிடக்கும் பூச்சிகளை இரவில் வேட்டையாடும்.

பாலைவனச் சிலந்தி

சிலந்திகளுள் மிகப்பெரி யவை இவை. மணலுக்கடியில் புதைகுழிகள் கட்டி வாழும். இரவில் குழியின் வாசலருகே குட்டிப்பூச்சிகளுக்காக காத்திருந்து பிடிக்கும். மற்ற நேரங்களில் வெளியே வராது. ஆண் சிலந்திகள் 10-11 ஆண்டுகள் வாழும். பெண் சிலந்திகள் 25 ஆண்டுகள் வரை வாழும்.

சிலந்திகள் கொசுக்களை கட்டுப்படுத்துமா?

கண்டிப்பாக சிலந்திகள் கொசுக்களை கட்டுப்படுத்தும். பொதுவாக இன்றைய சூழ்நிலையில் கொசுக்களின் மூலம் பரவும் நோய்களால் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அந்த கொசுக்களை அழிக்க இயற்கையில் உருவாக்கப்பட்ட ஒரு ஜீவன் தான் இந்த சிலந்திகள்.

செயற்கை முறையில் நாம் என்னதான் இந்த கொசுக்களை அழிக்க முற்பட்டாலும், சில ரசாயனப் பொருட்கள் மூலம் கொசுக்களை அழித்தாலும் அந்த ரசாயனப் பொருட்கள் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் தீமையாக இருக்கின்றன. ஆனால்,இந்த சிலந்திகள் எந்தவித தீங்கும் இன்றி இயற்கையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு கணுக்காலிகளாக இருக்கின்றன.

விவசாயத்தின் நண்பன் சிலந்தி

ஆம்; சிலந்திகள் உண்மையிலேயே விவசாயத்தின் நண்பன் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். காரணம், நாம் விவசாயத்தில் பல்வேறு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்து கிறோம். இதனால் பூச்சிகள் அண்டாமல் பயிர்கள் பாதுகாக்கப்படும் என்று நினைக்கிறோம்.

ஆனால், அந்த ரசாயனப் பொருட்கள் சிலந்திகளையும் பாதிக்கின்றன. ஆனால், சிலந்திகள் பொதுவாக இயற்கையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. பயிர்களைத் தாக்கும் பூச்சி களை இந்த சிலந்திகள் உணவாக எடுத்துக் கொள்கின்றன.

இதனால் இயற்கையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் விவசாயத்தின் நண்பனாக இந்த சிலந்திகள் இருக்கின்றன. இந்த சிலந்திகளில் தாவும் சிலந்திகள் என்று அழைக்கக்கூடிய ஜம்பிங் ஸ்பைடர் செடியில் உள்ள பூக்களில் இருக்கும் பூச்சிகளைப் பிடிக்க ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு தாவும்பொழுது இயற்கையாகவே மகரந்தச் சேர்க்கைக்கு உதவி புரிகின்றன.

இதனால் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவேதான் இந்த சிலந்திகள் விவசாயத்தின் நண்பர்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற பல்வேறு நன்மைகளை சிலந்திகள் இந்த உலகிற்கு செய்கின்றன எனவே சிலந்தி இனங்களை பாதுகாப்போம். சிலந்திகளால் மனிதனுக்கு நன்மை என்பதை உணர்வோம்.

ஜெ.தர்மராஜ்