ப்ளூ இஸ் த வார்மஸ்ட் கலர்



நீலம் ஒரு வெது வெதுப்பான நிறம்

பெண் மைய சினிமா


சினிமா ஓர் உன்னத கலை. மனிதர்களுக்கும் சினிமாவிற்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. நாம் நினைத்தவை, நினைக்க முடியாதவை உள்ளிட்ட பலவற்றையும் காட்சிப்பொருளாக்கி நம் கண்களில் கலக்கும் அற்புதப் படைப்பே ஆரோக்கிய சினிமா. ‘ப்ளூ இஸ் த வார்மஸ்ட் கலர்’ என்ற பிரெஞ்ச் திரைப்படமும் இந்த வகையைச் சேரும்.

நாம் பேசத் தயங்குகிற, அங்கீகரிக்க மறுக்கிற,  நிராகரிக்கிற, குற்றம்சாட்டுகிற சமபாலீர்ப்பு பற்றி மிகவும் வெளிப்படையாக துணிச்சலுடன் அலசுகிறது இந்தப் படம். அடெல் என்ற இளம் பெண்ணின் தனிமையை, அவளின் மென்மையான உணர்வுகளை, அவளின் காமம் சார்ந்த ஆசைகளை, உளக்கிளர்ச்சியை, அவளுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையேயான காதலை, ஏமாற்றத்தை, பிரிவை ரத்தமும் சதையுமாக நம் முன் வைக்கிறது இந்தப் படம்.

முதலில் படத்தின் கதையைப் பார்ப்போம். பிரான்ஸ் தேசத்தின் ஓர் அழகிய நகரில் பெற்றோருடன் வசித்து வருகிறாள் பதினாறு வயதே ஆன அடெல். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் அவளுக்கு சீனியர் மாணவனுடன் காதல் மலர்கிறது. அந்தக் காதல் பாலுறவு வரை நீள்கிறது. ஆனால், கொஞ்ச நாட்களில் காதல் உறவில் திருப்தியடையாமல் காதலனைவிட்டு பிரிந்து தனிமையில் வாடுகிறாள்.

இந்த நிலையில் தன்னுடன் படிக்கும் சக மாணவியின் மீது அடெலுக்கு ஒருவித ஈர்ப்பு உண்டாகிறது. அந்தப் பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தும்போது பெருத்த நிராகரிப்புக்கு உள்ளாகி அவமானம் அடைகிறாள். மனச்சோர்வில் சுழலும் அவளின் வாழ்க்கை தனிமைக்குள் அகப்படுகிறது.

அவளுக்கு சமபாலீர்ப் பாளனாகிய ஒரேயொரு நண்பன் மட்டுமே இருக்கிறான். அவனுடனும் அவளால் நட்பாக இருக்க முடிவதில்லை. அடெலின் மனம் ஏதோவொன்றை தேடி அலைபாய்கிறது. தேடுவது கிடைக்காமல் வீடு, பள்ளி, தனிமை என்று அவளின் தினசரி வாழ்க்கை மெதுவாக நகர்கிறது.

ஒரு நாள் நீல நிற தலை முடியை கொண்ட எம்மா என்ற பெண்ணை ஏதேச்சையாக சாலையில் பார்க்கிறாள். அந்த முதல் பார்வையிலேயே அடெலுக்கு எம்மாவின் மீது காதல் அரும்புகிறது. இரவில் எம்மாவுடன் பாலுறவில் லயிப்பதைப் போல கனவு காண்கிறாள். ஒரு லெஸ்பியன் பாரில் எம்மாவை மறுபடியும் சந்திக்கும் அடெல் அவளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்கிறாள்.

முன்பின் தெரியாத எம்மாவுடனான நட்புறவு அடெலின் வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிடுகிறது. அவளின் கனவு,காதல்,கட்டுக்கடங்காத காமத்தை எம்மா பூர்த்தி செய்கிறாள்.

ஆரம்பத்தில் காமத்தை மட்டுமே எம்மாவிடம் பகிர்ந்து கொண்ட அடெல் தன் வாழ்க்கையில் யாருடனும் பகிர்ந்து கொள்ளாத பல விசயங்களையும, அன்பையும் எம்மாவிடம் பகிர்ந்து கொள்கிறாள். எம்மாவிற்கும் அடெலுக்கும் இடையேயான உறவு தெரிய வர அடெலை ‘லெஸ்பியன்’ என்று பள்ளியில் படிக்கும் சக மாணவிகள் அவமானப்படுத்துகிறார்கள். அதை யெல்லாம் பொருட்படுத்தாமல் எம்மாவுடனான உறவை அடெல் தொடர்கிறாள். இருவரும் எப்போதும் எங்கேயும் சேர்ந்தே இருக்கிறார்கள்.

காலம்  ஓடுகிறது. எம்மாவும் அடெலும் ஒரே வீட்டில் கணவன் மனைவியைப் போல வாழ ஆரம்பிக்கிறார்கள். அடெல் தன் விருப்பமான நர்சரி பள்ளியின் ஆசிரியை ஆகிவிடுகிறாள். எம்மாவிற்கும் அடெலுக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்படும் விதமாக எம்மா தன்னுடைய பழைய காதலியை ஒரு விருந்தில் சந்திக்கிறாள்.

எம்மாவும் அவளின் பழைய காதலியும் நெருக்கமாக இருப்பதை பார்க்கும் அடெலின் மனதுக்குள் ஒரு வித பயம் தொற்றிக் கொள்கிறது. முன்பு போல் எம்மா அடெலுடன் அதிக நேரம் இருப்பதில்லை. மீண்டும் தனிமைப்படுத்தப்படும் அடெல் தனிமையிலிருந்து விடுபட தன்னுடன் பணியாற்றும் ஒருவனை நாடிச் செல்கிறாள்.

இந்த விசயம் எம்மாவிற்கு தெரிய வர அடெலை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்திவிடுகிறாள். பள்ளி யில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாலும் ,அவர்களுடன் சேர்ந்து விளையாடினாலும் எம்மாவின் மீதான ஏக்கம், அவளைப் பிரிந்து வாழும் தனிமைத்துயரம் அடெலை வாட்டி எடுக்கிறது . இனிமேல் எம்மாவுடன் சேரவே முடியாது என்ற எதார்த்தத்தையும், தனக்கென்று யாருமே இல்லாத தனிமையையும், தன் நிலையையும் புரிந்து கொள்கிறாள் அடெல்.

இனி வரும் காலத்தை, வாழ்க்கையை, எம்மா இல்லாத வெறுமையை எப்படி அடெல் எதிர்கொள்ளப் போகிறாள் என்ற மர்மத்தை சொல்லும் விதமாக வெதுவெதுப் பான நீல நிற உடையணிந்த அடெல் தன்னந்தனியாக சாலையில் நடந்து செல்வதுடன் படம் நிறைவடைகிறது.

அடெல் எம்மாவிடம் மட்டும்தான் சுதந்திரமாக உணர்கிறாள். மனம்விட்டு வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசுகிறாள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முழுமையடைகிறாள். இந்த உலகில் அவள் வாழ்வதற்கு எம்மாவை தவிர யாருமே தேவையில்லை என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறாள். காமத்தைத் தாண்டி இந்த சுதந்திரமான உணர்வுதான் எம்மாவுடனான அடெலின் உறவுக்கு அடித்தளமாக இருக்கிறது. ஆனால், அந்த உறவு சுற்றியிருப்பவர்களால் கொச்சைப்படுத்தப்படுவது துயரம்.

பிரான்ஸ் போன்ற தேசத்தில் சமபாலீர்ப்பு எல்லாம் சகஜம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், அங்கேயும் அது பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பதை பள்ளியில் அடெலுக்கு நிகழும் அவமானங்கள் சொல்லாமல் சொல்கின்றன.

எம்மாவும் அடெலிடம் நல்லபடியாக, அன்பாக நடந்து கொண்டாலும் இருவருக்கிடையில் ஏற்படுகின்ற பிரிவு, எம்மா வேறு பெண்ணுடன் கொள்கின்ற  உறவு, ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்குமான காமம் சார்ந்த உறவின் நிலையற்ற தன்மையை, சிக்கலை ஆழமாக நமக்கு உணர்த்துகிறது. வெளிப்படையான நீண்ட நேர லெஸ்பியன் காட்சிகளும், செக்ஸ் சம்பந்தமான பெரும்பாலான உரையாடல்களும் பிரான்ஸ் தேசத்தின் கலை சுதந்திரத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையிலான லெஸ்பியன் உறவு காதலாக மலர்வதை பார்வையாளர்கள் உணர்ந்து அங்கீகரிக் கும்படி படமாக்கியிருப்பது சிறப்பானது. அதே நேரத்தில் இவ்வளவு நேரம் பாலுறவு காட்சிகள் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.

‘‘இந்தப் படத்தைப பார்க்கும் பெண் என்ன நினைக்கிறாள்?’’ என்பதே எனக்கு முக்கியம் என்கிறார் 32 வயதே ஆன ஜூலி மோரா என்ற பெண் எழுத்தாளர். அவர் எழுதிய கிராபிக் நாவலைத் தழுவித்தான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இயக்குனர் கேச்சிசேவுக்கும், எம்மா, அடெலாக வாழ்ந்து காட்டிய இரு நடிகைகளுக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் முதன்மையான விருது பகிர்ந்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- த.சக்திவேல்