பாய்ஸ் கம்பெனி தந்த சகலகலாவல்லி எம்.எஸ்.திரௌபதி



செல்லுலாய்ட் பெண்கள்

ஸ்டில்ஸ் ஞானம்


திரௌபதி மகாபாரதத்தின் பெரும் புகழ் பெற்ற கதாபாத்திரம். அப்போதும் இப்போதும் எப்போதும் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் ஒரு பெண் பாத்திரம். ஐவருக்கும் பத்தினி என்று பெரும்பாலும் இழிவுபடுத்தப்படும் இந்தப் பெயரைத் தாங்கி ஒரு பெண் நடிகையாகப் புகழ் பெற்றிருக்கிறார் என்பதும் ஆச்சரியமே.  அந்நாட்களில் நாடகங்களின் வழியாகவே கலைஞர்கள் பலரும் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள். நாடகத்துறையின் ஆரம்பகர்த்தாக்கள் என்று அதில் பலரைக் குறிப்பிடலாம்.

முன்னோடிகள் என்றும் கொள்ளலாம். இவர்களில் பலர் திரைத்துறையில் சாதனையாளர்களாகவும் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் உயர்ந்தார்கள். அவர்களின் இந்த உயர்ந்த நிலைக்கு சபா நாடகக் குழுக்களும் பாய்ஸ் கம்பெனியில் அவர்களுக்குக் கிடைத்த பயிற்சிகளும் அங்கு அவர்கள் பெற்ற அனுபவங்களுமே முதன்மைக் காரணங்கள்.

அவர்களில் திரையுலகில் நுழைந்து புகழ் பெற்றவர்களுள் மிக முக்கியமானவர்கள் டி.கே.ஷண்முகம், டி.கே.பகவதி, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.ராதா, எஸ்.வி.சகஸ்ரநாமம், நவாப் ராஜமாணிக்கம், டி.எஸ்.சிவதாணு, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, டி.வி.நாராயணசாமி, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.சக்கரபாணி, சிவாஜி கணேசன், காக்கா ராதாகிருஷ்ணன், பி.எஸ்.கோவிந்தன், வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.திரௌபதி, ஏ.பி.நாகராஜன் என்று மிக நீண்ட பட்டியல்.

இவர்களில் பலரும் டி.கே.ஷண்முகம் நாடகக் குழுவுக்குள் இயங்கியவர்கள். பின்னாளில் இதே குழுவிலிருந்து வந்து புகழ் பெற்ற மேலும் இருவர் எம்.என்.ராஜம், கமலஹாஸன். இவர்களில் யாரும் அமெச்சூர் நாடகக்காரர்கள் அல்ல. அனைவருமே தொழில்முறை நாடகக் குழுக்களின் வழியாக திரையுலகுக்கு வந்து சாதித்துக் காண்பித்தவர்கள்.

நெசவுக் குடும்பம் நெய்து அளித்த மென்பட்டுப் பெண்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் நாளில் பிறந்தவர் திரௌபதி. தாய்மொழி கன்னடம், ஆனால் மிகத் தெளிவாகத் தமிழ் பேசி இளம் வயதிலேயே அதாவது எட்டு வயதிலேயே நாடகங்களிலும் அதைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்தவர். மிக எளிமையான குடும்பப் பின்னணி இவருடையது. நெசவுத் தொழில் செய்யும் தேவாங்கர் மரபின் வழி வந்தவர் இவருடைய தந்தையார் சின்னசாமி செட்டியார். திரௌபதிதான் குடும்பத்தில் மூத்த பெண் குழந்தை. இவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர் என பெரிய குடும்பம்.

ஆங்கிலேயர் ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தியான முரட்டுத் துணிகளைக் காட்டிலும் மென்மையும் வழவழப்பும் வனப்பும் மிக்க அயல் நாட்டுத் துணிகள் இங்கு ஏராளமாக இறக்குமதியாகி விற்பனைக்கு வந்ததால், இங்குள்ள பாரம்பரிய நெசவுத் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டு ஆட்டம் கண்டது.

அதை எதிர்கொள்ள முடியாமல் குடும்பமும் வறுமையின் பிடிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கித் தள்ளாட்டம் போடத் தொடங்கியது. சின்னசாமியின் குடும்பம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நெசவாளர்களின் குடும்பமும் இந்த நிலையில்தான் காலம் தள்ள வேண்டியிருந்தது.  கோவையில் பஞ்சாலைகள் நிறைந்திருந்தபோதும் குடும்பம் வேலை தேடி அண்மையில் இருந்த மற்றொரு தொழில் நகரான திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது.

இசை மீது கொண்ட காதலும் நாடக வாய்ப்புகளும்

சிறுமி திரௌபதிக்கு இசையின் மீது மாறாக் காதலும் தீராத விருப்பமும் இயல்பாகவே இருந்தது. மிக இளம் வயதிலேயே குப்புசாமி பாகவதர் என்பவரிடம் சாஸ்திரிய இசையைக் கற்க ஆரம்பித்தார். மகளின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தந்தையாரும் அவருக்கு இணக்கமாக இருந்தார். நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கிய டி.கே.எஸ். சகோதரர்களால் நடத்தப்பட்டு வந்த  பால சண்முகானந்தா சபா என்ற நாடகக் குழுவினர் 1938ல் திருப்பூர் கஜலட்சுமி அரங்கில் முகாமிட்டு நாடகங்களை நடத்தி வந்தனர்.  

அக்குழுவின் நடிகர்களில் ஒருவரான ராஜநாயகம் என்பவரின் பரிந்துரையால் திரௌபதி நாடகக் குழுவில் சேர்ந்து தன் கலையுலக வாழ்வைத் தொடங்கினார். பல்வேறு நடிப்பு, ஆடல், பாடல் என பட்டை தீட்டப்பட்டார். கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு நாடகக் கம்பெனிகளில் வந்து சேரும் சிறுவர், சிறுமியருக்கு அங்குள்ள வாத்தியார்களால் அடிப்படைக் கல்வியும் கற்பிக்கப்பட்டது. முதலில் எழுத்தறிவை அங்கிருந்துதான் அனைவரும் பெற்றிருக்கிறார்கள். சில மாதங்கள் தீவிர பயிற்சி பெற்ற பின், சின்னச் சின்ன வேடங்கள் ஏற்று நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் பஃபூன் வேடம் ஏற்று நடித்ததுடன் மிக அருமையாகப் பாடக் கூடியவராகவும் இருந்திருக்கிறார். கற்பூர புத்தி என்பதற்கேற்ப மிகக் குறுகிய காலத்திலேயே மிகத் திறமையானவர் என்றும் பெயரெடுத்தார். ராமாயண நாடகத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் உண்டு. அதில் பல வேடங்களை திரௌபதி ஒருவரே ஏற்று நடித்திருக்கிறார்.

பாய்ஸ் நாடகக் குழுவில் இயங்கிய ஒரே பெண்

பால நாடக சபாவின் பாலர்கள் பலருடன் அரை ட்ரவுசர் அணிந்து கொள்பவராக அவர்  இருந்ததால் யாரும் அவரை ஒரு பெண் குழந்தையாகவே நினைக்கவில்லை. ஆண் பிள்ளைகள் பலர் நிறைந்திருந்த அந்த பாய்ஸ் குழுவில் ஒரே ஒரு சிறுமி திரௌபதி மட்டுமே. 12 வயதை நெருங்கியதும் நாடகக் குழுவை விட்டு அவரை வெளியேற்றி விட நாடக நிர்வாகிகளில் ஒருவரும் டி.கே.எஸ்.

அவர்களின் மூத்த சகோதரருமான டி.கே.சங்கரன் முடிவு செய்தார். ஆண் பிள்ளைகள் பலருக்கு நடுவே பருவமடையும் வயதில் இருக்கும் இந்த ஒற்றைப் பெண்ணுக்கென்று தனிப்பட்ட பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர் அம்முடிவை எடுத்திருந்தார்; ஆனால், மிகத் திறமையான ஒரு நடிகையை இழக்க டி.கே. ஷண்முகம் விரும்பவில்லை.

ஒரு நாடகத்தின் அத்தனை வேடங்களையும் ஏற்று நடிக்கும் திறமை திரௌபதியிடம் இருந்தது. அத்துடன் நீண்ட காலம் பாலர் குழுவில் இருந்த ஒரே நடிகையும் இவர்தான். திரௌபதியும் அவ்வை டி.கே.ஷண்முகத்தின் நம்பிக்கையை வீணாக்கவில்லை. தொடர்ந்து பாய்ஸ் கம்பெனி பாய்ஸ்களுடன் அவர்களில் ஒருவராகவே குழுவில் தொடர்ந்தார்.

நாடகக் குழுவின் முதல் தர நடிகையாகத் தன்னை வளர்த்துக் கொண்டதுடன் அதைத் தக்க வைத்தும் கொண்டார். சதி அனுசூயா, அபிமன்யு சுந்தரி, பம்பாய் மெயில், சம்பூர்ண ராமாயணம், முள்ளில் ரோஜா, உயிரோவியம் போன்ற பிரபலமான நாடகங்களில் எல்லாம் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். சிறப்பாக நடித்ததால் நாடகக் குழுவினர் மட்டுமல்லாமல், மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.  

குமரிப் பெண்ணாக வளர்ந்த பின் இக்குழுவின் நாயகியும் இவரே. ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகிகள் நாடகக் கதையில் இடம் பெற்றால் நடிகர்கள் ஸ்திரீபார்ட் ஏற்று நடிப்பார்கள். திரௌபதிக்கு முன்னரும் சில நடிகைகள் அக்குழுவில் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் அனைவரும் மிகக் குறுகிய காலத்தில் குழுவை விட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள். ஆண்களே பெரும்பாலும் பெண் வேடம் ஏற்று நடித்ததால் பெண்களின் தேவையும் நாடகக் குழுக்களுக்கு அப்போது இல்லை.

‘தேசபக்தி’ நாடகம் டி.கே.எஸ். குழுவினரால் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கருத்துகளைப் பிரதிபலிக்கும் நாடகமாகவும் விடுதலைக் கனல் தெறிக்கும் வகையிலும் அது இருந்ததால் திருநெல்வேலி, சேலம் மாவட்டங்களில் அந்த நாடகத்தை நடத்தக்
கூடாது என பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. மேலும் சில நகரங்களில் ஒரு சில காட்சிகளை மட்டும் நடத்தக்கூடாது என்றும் தடையாணை நடைமுறைக்கு வந்தது.

இந்த நாடகத்தில் ஏ.பி.நாகராஜன், எம்.ஆர்.சாமிநாதன், புளிமூட்டை ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.சீதாராமன், டி.என்.சிவதாணு இவர்களுடன் எம்.எஸ்.திரௌபதியும் முக்கியமான ஒரு வேடமேற்று நடித்திருந்தார்.

சமூக மாற்றம் ஏற்படுத்திய குமாஸ்தாவின் பெண் திரைப்படம் திரௌபதி நடித்த நாடகங்கள் பலவும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டபோது அவை அனைத்திலும் திரௌபதியும் பங்கேற்றார். புராண நாடகங்களே மேலோங்கியிருந்த காலகட்டத்தில் சமூகக் கதைகளை நாடகமாக்கியதில் அவ்வை ஷண்முகத்துக்குப் பெரும் பங்கு உண்டு. டி.கே. ஷண்முகம் குழுவினர் நடித்த நாடகங்களில் மிகவும் புகழ் பெற்றது ‘குமாஸ்தாவின் பெண்’. வங்க மொழியில் நிருபமா தேவி என்பவர் எழுதிய நாவல் இது.

 இந்திய மொழிகள் பலவற்றிலும் அது மொழி பெயர்க்கப்பட்டு நாடகமாகவும் நடத்தப்பட்டு வந்தது. மலையாள மொழியில் இந்த நாடகத்தைப் பார்த்த ஷண்முகம், அதைத் தமிழில் நடத்தும் உரிமையை நாவலாசிரியர் நிருபமா தேவியிடம் முறைப்படி பெற்று நாடகமாக்கினார். தமிழகத்தில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நாடகம் அது. வயது முதிர்ந்த ஆண்கள் இரண்டாம் தாரம், மூன்றாம் தாரம் என்று இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதைக் கேள்விக்குட்படுத்தும் நாடகம் அது.

1941 ல் ‘குமாஸ்தாவின் பெண்’ டி.கே.எஸ். சகோதரர்கள் மற்றும் மூர்த்தி பிக்சர்ஸ் கூட்டுத் தயாரிப்பில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு மிகப் பெரும் வெற்றி பெற்றது. சீதா, சரசா என்ற இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான சரசா வேடமேற்று நடித்தவர் திரௌபதியே. இத்திரைப்படத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், அதிக வயது வித்தியாசம் கொண்ட திருமணங்கள் நடைபெற்றால், அப்போதைய இளைஞர்கள் அங்கு சென்று கல் வீசிக் கலகம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு கலை வடிவம், அது நாடகமோ அல்லது திரைப்படமோ எதுவானாலும் சமூகத்தில் இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை உண்டாக்குகிறது என்றால், அது அக்கலை வடிவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

1970களில் மீண்டும் இக்கதை ‘குமாஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. 1960களில் பெரும் புகழ் பெற்றிருந்த பேபி ஷகிலா, குமாரி ஷகிலாவாக மாறிய பின் இதே சரசா வேடமேற்று நடித்து அமர்க்களப்படுத்தினார். ஷகிலாவும், ஆர்த்தியும் சகோதரிகளாக நடித்துப் பாடும் பாடல், ‘எழுதி எழுதிப் பழகி வந்தேன், எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்’ என்ற பாடல் மட்டும் பெரும் புகழ் பெற்றது. 1941ல் இப்படம் பெற்ற வெற்றியை 70களில் ஏனோ பெறவில்லை.

கமல், சிவகுமார் போன்றவர்கள் நடித்திருந்தும் கூட படம் சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு ஓடிப் போனது. ஒரு காலகட்டத்தில் மிகப் பெரியதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்திய கதை 30 ஆண்டுகளுக்குப் பின் படுதோல்வியைச் சந்திக்கிறது என்றால், கதை நிகழும் காலகட்டமும் சூழலும் மாறிப் போயிருந்ததும் ஒரு முக்கிய காரணம். 70களில் இம்மாதிரியான திருமணங்கள் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டு விட்டதால், இக்கதை எடுபடவில்லை.

1948ல் டி.கே.எஸ்.சகோதரர்கள் மற்றும் சேலம் சண்முகா பிலிம்ஸ் இணைந்து பில்ஹணன் என்ற படத்தைத் தயாரித்தனர். இப்படத்தில் கதாநாயகி யாமினி வேடம் தரித்தவரும் திரௌபதிதான்.

அபலைப் பெண்ணாக நடிக்கவே உருவெடுத்தவர்

ஒரு கட்டத்தில் வாழ்விழந்த அபலைப்பெண் வேடம் என்றால் திரௌபதியைக் கூப்பிடுங்கள் என்ற நிலையும் ஏற்பட்டது. பின்னாளில் சௌகார் ஜானகியைத் திரையில் பார்த்தால் ‘அழுமூஞ்சி’ என்று பெண்களே கமெண்ட் அடிக்கும் நிலை இருந்தது. அபலைப் பெண், அழுமூஞ்சி பாத்திரங்கள் ஏற்பதில் அவருக்கு முன்னோடி திரௌபதி என்றாலும் தகும். ஏ.வி.எம்.தயாரித்து 1949ல் வெளிவந்த ‘வாழ்க்கை’ படத்திலும் ஏமாற்றித் தன்னைக் கைவிட்டுப் போன காதலன் (சஹஸ்ரநாமம்) மூர்த்தியைத் தேடியலையும் அபலைப் பெண் பாத்திரம்.

கையில் குழந்தையுடன் தெருத்தெருவாக அலைவதும் குழந்தையைப் பராமரிக்க வழியில்லாமல் யாரோ ஒருவரின் காருக்குள் குழந்தையைக் ைகவிட்டுச் செல்வதும் என நம்மையும் தவிக்க வைப்பார். குழந்தையைப் பிரிய மனமில்லாமல், குழந்தை இருக்கும் இடத்தின் அருகிலேயே இருந்து கண்காணிப்பதுமாக ஒரு தாயின் மனநிலையைப் பிரதிபலித்திருப்பார்.

வடிவாம்பாளின் மறு வடிவம்

‘வடிவாம்பாள்’ என்ற பெயரைக் கேட்டால் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் கதாநாயகி மோகனாவின் தாயாக நடித்த சி.கே.சரஸ்வதி ஏற்ற வடிவாம்பாள் பாத்திரம்தான் நினைவுக்கு வரும். ஆனால், அதற்கு முன்னதாகவே 1950 ஆம் ஆண்டு வெளியான திகம்பர சாமியார் படத்தில் வடிவாம்பாளாக நடித்தவர் இந்தப் பெயருக்கேற்ற வடிவுடைய மங்கையாக கதாநாயகியாக இவரைப் பார்த்தபோது உண்மையிலேயே வடிவழகி என்று தோன்றியது.

அதிகம் உயரமில்லை. வெடுக் வெடுக்கென்ற பேச்சு. எதிராளிகளால் கடத்திச் சென்று சிறை வைக்கப்படும்போதும், அவர்களிடம் தன்னை விடுவிக்கும்படி கெஞ்சும்போதும் முகத்தில் சோகம் ததும்பும் உணர்ச்சிக் கலவையான பாத்திரம். நாயகன் நரசிம்ம பாரதியுடன் காதல் கொள்ளும் முறைப்பெண்.

உறவினர்கள் சூழ்ச்சியால் இவர்கள் இருவரின் காதலும் கல்யாணமும் நடந்தேற முடியாமல் தவிக்கும்போது, ஆபத்பாந்தவனாக எங்கிருந்தோ வந்த திகம்பர சாமியார், பல்வேறு போராட்டங்கள், தந்திரங்கள், சமயோசிதங்கள், முடிச்சுகளுக்குப் பின் காதலர்கள் கரம் பற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் பத்து வேடங்களுக்கும் மேல் போட்டு அல்லது அவதாரங்கள் எடுத்து நிறைவேற்றுகிறார்.

‘நவராத்திரி’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் சாதித்ததை அவருக்கு முன்னதாகவே  வில்லன் நம்பியார் சாதித்துக் காண்பித்து விட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் தயாரிப்பில் அவரே இயக்கிய படம். அக்காலத்துத் துப்பறியும் கதை மன்னர் வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய பல்வேறு திருப்பங்களைக் கொண்ட ஒரு துப்பறியும் கதை.

ஆரவல்லியின் அல்லி ராஜ்ஜியக் கதை

மகாபாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்று ‘ஆரவல்லி’ படத்தின் கதை. தந்திரமாக ஆண்களைப் போட்டிக்கு அழைத்து அவர்களைத் தோல்வியடையச் செய்து, பின் அவர்களை அடிமைகளாகச் சிறைப்படுத்தும் ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் நடத்தும் அல்லி ராஜ்ஜியக் கதை இது. மந்திர தந்திரங்களும் மாயாஜாலங்களும் நிறைந்த ஃபாண்டஸி வகையில் எடுக்கப்பட்ட படம். இதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கிய புகழ் பெற்ற படம். இப்படத்தில் பாண்டவர்கள் குடும்பத்துப் பெண்ணாக தர்மனின் சகோதரி சங்காவதி என்ற பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார் திரௌபதி. ஆனால், ஆரவல்லியாக அட்டகாசம் செய்து பெயரைத் தட்டிக் கொண்டு போனவர் நடிகை ஜி.வரலட்சுமி.

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகி, குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் என அனைத்தையும் ஏற்று நடித்தவர். நாடகங்களிலும் திரைப்படங்களிலும் உணர்வுப்பூர்வமாகப் பல பக்கங்களுக்கு வசனம் பேசியே நடித்தவருக்கு தன் இறுதிப் படமான ‘புதுச் செருப்பு கடிக்கும்’ படத்தில் எண்ணி இருபது வார்த்தைகளுக்கு மேல் வசனம் இல்லை. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு அதையும் அவர் சிறப்பாகவே செய்தார். கதாநாயகி சாரதாவுக்கு அம்மா வேடம். அதுவும் நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் நடித்த படம். வயது முதிர்ந்த பெண்ணாக ஒப்பனை ஏதும் இல்லாமலேயே அசலான அம்மாவாக அவர் அப்படத்தில் தோற்றமளித்தார். ஆனால், இப்படம் பொது மக்கள் பார்வைக்கு வராமலே பெட்டிக்குள் முடங்கிப் போனதுதான் சோகம்.

1935ல் சின்னஞ்சிறுமியாக நாடக உலகுக்குள் நுழைந்தவர், 1940களில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர், ஏறக்குறைய 45 ஆண்டுகள் தமிழ்க் கலையுலகுக்குக் கலைச்சேவை அளித்தவர். திரௌபதியின் நாடக, திரையுலக நடிப்புக்காக அவருக்கு ‘இயல் இசை நாடக மன்றம்’ 1961ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. தன் இறுதிப் படமாக 1979ல் ஜெயகாந்தனின் ‘புதுச் செருப்பு கடிக்கும்’ படத்துடன் தன் திரை வாழ்க்கையை நிறைவு செய்தார்.

நாடகத்துடன் பிரிக்க முடியாத பந்தம்

திரைப்பட நடிகையான பின்னரும் கூட திரௌபதி சொந்தமாக ஒரு நாடகக் குழுவையும் நடத்தி வந்திருக்கிறார். திருநெல்வேலி பகுதியின் முக்கூடல் என்ற ஊரில் உள்ள முத்துமாலை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தக் கோயில் திருவிழா பத்து நாட்களுக்குக் கோலாகலமாக நடத்தப்படும். ஊரே அப்போது திருவிழாக்கோலம் பூண்டு கூத்தும் கும்மாளமுமாக இருக்கும். பத்து நாட்களும் நாடகம், கூத்து என்று அமர்க்களப்படும். அதில் ஒரு நாளில் திரௌபதி குழுவினரின் நாடகம் நடத்தப்பட்டது.

வழக்கமாக நாடக மேடையின் பின்புலத்தில் கதைப் போக்குக்கு ஏற்றவாறு திரைச்சீலைகள் மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கும். அன்று அவர்கள்
நடத்திய அந்த நாடகத்தின் ஒரு காட்சியில் கடல் வருவது போன்ற கதையமைப்பு. அதுவரை யாரும் செய்யாத புதுமையாக பின்னணியில்
16.எம்.எம். திரையில் கடல் கொந்தளிக்கும் காட்சியை ஒளிபரப்பி நாடக மேடையில் அசல் கடலைக் கொண்டு வந்து நிறுத்தி ஊர் மக்களை வாய் பிளக்கச் செய்து விட்டார். இதற்கு அவரது திரையுலக  அனுபவங்களும் ஒரு முக்கிய காரணம்.

1942 ஆம் ஆண்டிலேயே தன் சொந்தத் தாய்மாமன் பெரியசாமியைத் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தைத் தொடங்கினார். அவரும் கலையுலகம் சார்ந்து இயங்கியவரே. டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக்க் குழுவில் ஒப்பனையாளராகப் பணியாற்றியவர். இத்தம்பதிகளுக்கு மீனாட்சி என்று ஒரே ஒரு மகள் மட்டுமே.

(ரசிப்போம்!)

எம்.எஸ்.திரௌபதி

நடித்த திரைப்படங்கள்

குமாஸ்தாவின் பெண், பில்ஹணன், வாழ்க்கை, திகம்பர சாமியார், அந்தமான் கைதி, வேலைக்காரன், பசியின் கொடுமை, பெண் மனம், உலகம், பத்மினி, இன்ஸ்பெக்டர், புதுயுகம், ரத்த பாசம், ஆரவல்லி, சௌபாக்கியவதி, பெற்ற மகனை விற்ற அன்னை, ராஜா மலையசிம்மன், அதிசயப்பெண், ஆடு புலி ஆட்டம்.