பாலக்காட்டு மாதவன்கள்!



மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியரான கே. பாக்யராஜும், பத்ம விருது பெற்ற நடிகர் விவேக்கும் சந்தித்தனர். காரணம், இருவருமே ‘பாலக்காட்டு மாதவன்’கள். 30 ஆண்டுகளுக்கு முன் வந்த படம் ‘அந்த 7 நாட்கள்’.

அதில் ‘பாலக்காட்டு மாதவன்’ கேரக்டரில் பாக்யராஜ் நடித்து இயக்கினார். படம் அபார வெற்றி.
தற்போது விவேக் கதாநாயகனாக நடித்து, வெளிவந்திருக்கும் படம் ‘பாலக்காட்டு மாதவன்’. ஆகவே, ‘வண்ணத்திரை’க்காக இந்த ஸ்பெஷல் சந்திப்பு.

‘பொது இடத்தில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாமா?’ என்று சின்னக்கலைவாணரிடம் கேட்டதும், ‘‘சார் எவ்வளவு பெரிய ஜாம்பவான்! அவரோட எடத்துக்கே நாம போறதுதான் மரியாதை’’ என்றவர், அடுத்த நிமிடமே பாக்யராஜ் வீட்டுக்குப் பயணப்பட்டார்.

விவேக் : நான் மதுரையில் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் இருந்தே உங்கள் தீவிர ஃபேன் சார்! பாக்யராஜ் : ரொம்ப சந்தோஷம் விவேக். எனக்கும் உங்கள் கருத்துக்கள் அடங்கிய காமெடி ரொம்ப பிடிக்கும்.
விவேக் : ‘அந்த 7 நாட்கள்’ நினைவுகள் பற்றி....

கே.பா : அதில என் கேரக்டர் பேரை ‘பாலக்காட்டு மாதவன்’னு வைச்சேன். எம்.எஸ்.வி மாதிரி பெரிய இசையமைப்பாளரா வரணும்ங்கற கனவோட சென்னைக்கு வர்ற கேரக்டர்.
விவேக் : நான் நடிச்சிருக்கிற படத்தோட டைட்டிலே ‘பாலக்காட்டு மாதவன்’தான். இந்த கேரக்டர் நீங்க உருவாக்கினது. எல்லோராலும் விரும்பப்பட்டது. எங்க கதைப்படி ஐ.டி. கம்பெனியில மாதவனும் (நான்) அவன் மனைவி லட்சுமியும் (சோனியா அகர்வால்) சென்னையில வேலை பாக்கறாங்க. சோனியா, என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறாங்க. அதில வர்ற ஈகோ பிரச்னைதான் கதை.
கே.பா : உங்க படத்துல நானே
நடிக்கிறதா கூட இருந்துச்சு.

விவேக் : அப்புறம் ஏன் நடிக்கலை?
கே.பா : கதையில மாதவனுக்குத்தான்
முக்கியத்துவம். நான் வந்தா எனக்காக தனி சீன் பண்ணணும். அது கதையை டிஸ்டர்ப் பண்ணிடும். ஸோ, வாழ்த்து சொல்லிட்டு வந்துட்டேன். இதில் நீங்க ஹீரோ. ஏன் ஃபைட் இல்ல?
விவேக் : கதையில எனக்கு வில்லனே கிடையாது. என் மனைவி சோனியாவும், நான் தத்து எடுக்கிற ‘செம்மீன்’ ஷீலாவும் - தான் அடிக்கடி சண்டை போட்டுக்குவாங்க.

கே.பா : பிரச்னைகளை எதிர்த்து ஜெயிக்கிறதே ஹீரோயிஸம்தான். அந்த 7 நாட்கள்ல கூட ஃபைட் கிடையாதே!
விவேக் : ‘அந்த 7 நாட்கள்’ கதையை சுருக்கமா எப்பிடிசொல்வீங்க சார்?
கே.பா : என்னுடைய காதலி இன்னொருத்தருக்கு மனைவி ஆகலாம்; ஆனா.... இன்னொருத்தரோட மனைவி எனக்கு காதலி ஆக முடியாது!
விவேக் : சூப்பர் சார்! இந்த வசனத்தை நீங்க க்ளைமாக்ஸ்ல பேசும்போது தியேட்டரே தெறிக்கும் சார்!
கே.பா : சாி! உங்க கதை, ஒரு வரியிலே.....?

விவேக் : நான் எறா மீன்; என் மனைவி பிராமீன் - ரெண்டு பேருக்கும் நடுவில பூந்த செம்மீன் ஷீலா - ஒரு சுறாமீன்.
கே.பா : படத்துல பாத்ததவிட நீங்க சொல்லும்போது  சுவாரஸ்யமா இருக்கு! உங்களுக்கு ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல தீனி போடக்கூடிய ‘ரோல்’னு நினைக்கிறேன்.
விவேக் : ஆமா சார்! கிட்டத்தட்ட ரெண்டரை வருஷ கேப்புக்குப் பிறகு, 27 லட்சம் மரங்களை நட்டுட்டு, இப்ப மீண்டும்  முழு உற்சாகத்தோட படங்களுக்குத் திரும்பி இருக்கேன்.

கே.பா : பத்திரிகைகள் படிக்கிறேன். உங்களோட மரம் நடும் முயற்சிக்கு என் வாழ்த்துகள். இது ‘பேய்ப்பட’ சீசன் ஆச்சே! படத்தில ஏன் பேய் இல்ல?
விவேக் :  சோனியா அகர்வால்தான் இருக்காங்க!
கே.பா : உங்க கதையில படம் முழுக்க காமெடி பண்ணிட்டு கடைசில அழ வைக்கிற கேரக்டர்தான். அதை நீங்க  கரெக்ட்டா பண்ணி ஜமாய்ச்சுட்டீங்க!
விவேக் : எல்லாமே டீம் ஒர்க்தான் சார்! ‘செம்மீன்’ ஷீலா மேடம் - க்ளைமாக்ஸ்ல தன்னோட பண்பட்ட நடிப்பால காப்பாத்தி இருக்காங்க! சோனியாவும் தன் சோக நடிப்பை ஓரங்கட்டிட்டு, காமெடியில பூந்து விளையாடிட்டு, கடைசில கண் கலங்க வச்சுட்டாங்க!
கே.பா : ‘அந்த 7 நாட்கள்’ - மாதவன், அம்பிகா, ஆர்மோனிய அஸிஸ்டென்ட், ராஜேஷ்னு வலம் வந்தார்.அதே மாதிரி உங்க படத்துக்கும் பக்காவான டீம் அமைஞ்சிருச்சு.

விவேக் : மொட்டை ராஜேந்திரன், கிரேன் மனோகர், மனோபாலா, சிங்கமுத்து, சுவாமிநாதன், பாண்டு, செல் முருகன், ஆர்த்தி, சுஹாசினி, இமான் அண்ணாச்சி எல்லாரும் காமெடியில் தூள் பண்ணி இருக்காங்க!
கே.பா : காமெடியும் கருத்தும் கலந்து சொல்றவர் நீங்க! படமும் நல்லா வந்திருக்கு. என்னோட படத்துக்கு மியூசிக் எம்.எஸ்.வி சார்! எல்லாமே ஹிட்.
விவேக் : அவர் பெரிய மலை. அவர்கிட்டே நெருங்க முடியுமா? எங்களுக்கு காந்த் தேவா. (இவரும் மலைதான்) மூணு பாட்டும் ஹிட்டாயிடுச்சு. அதிலும் மலேஷியாவில் எடுக்கப்பட்ட, அனிருத் பாடிய பாடல் பெரிய ஹிட். தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேக்கறாங்க. சார்! ஒரு ஆசை. மீண்டும் நீங்க இயக்கணும். அதில் நான் நடிக்கணும்.
கே.பா : நினைச்சா நடக்கும். ‘பாலக்காட்டு மாதவன்’ வெற்றி அதை உறுதி செய்யும்.
விவேக்: உங்கள் வாக்கு பலிக்கும் சார்!

 தொகுப்பு: ரசிகன்