கோலிவுட்டை ஆள்கிறார்கள் பெண்ணரசிகள்!



தமிழ் சினிமாவில் நடிப்பு, மேக்கப், நடனம் உள்ளிட்ட சில துறைகள் தவிர்த்து மற்ற டெக்னிக்கல் துறைகளின் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவாகவே இருந்தது. இயல்பாக நம்மிடையே இருக்கக்கூடிய ஆணாதிக்க மனோபாவமும் இதற்கு காரணம். நாற்று நடுவதில் தொடங்கி, விண்வெளிக்கு செல்லும் வரை எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு போட்டியாக பெண்கள் முன்னேறும் இந்தக் காலத்தில் சினிமா மட்டும் என்ன விதிவிலக்கா?

பொதுவாக பெண் இயக்குநர்கள் என்றாலே குடும்பக் கதைகள், பெண்ணுரிமை என்று அவர்களுக்கு அவர்களே போட்டுக் கொண்ட லட்சுமண ரேகையை தாண்ட மாட்டார்கள். ஆனால், இப்போது அவர்களது பார்வை விசாலமாகி இருக்கிறது. நம்பிக்கையூட்டக்கூடிய வகையில் கடந்த ஆண்டு தடாலடியாக தங்கள் இடத்தை தாங்களே எடுத்துக்கொண்டு புதிய  களங்களில், புதுமையான கதைகளோடு களமிறங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக பாலிவுட்டில்தான் பெண் இயக்குநர்கள், புதுமையாக கதை சொல்லி பிரபலமாவார்கள். தமிழில் குடும்பக் கதை, காமெடிக் கதை என்றுதான் முயற்சிப்பார்கள்.

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’, தமிழ் பெண் இயக்குநர்கள் குறித்த அத்தனை பிம்பத்தையும் தவிடு பொடியாக்கியது. இந்தப் படத்தில் பாலியல் உணர்வு படுதூக்கலாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் பாலியல் ரீதியான உளவியல் பிரச்னையை நேர்த்தியாக அணுகியிருந்தார் கீதாஞ்சலி. திருமணத்துக்குப் பிறகு மனைவியோடு தாம்பத்ய உறவுக்கு அவசரப்படும் கணவனை குறித்த கதை அது.

பாலியல் உறவு என்பது தன்னியல்பாக உருவாக வேண்டும், வற்புறுத்தலால் நிகழ்ந்தால் அது பாலியல் வன்புணர்வு ஆகும் என்கிற மெசேஜை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருந்தார். அம்மாதிரி அவசரத்துக்கு நிகழ்ந்த உறவால் தம்பதியினரிடையே எத்தகைய உளவியல்ரீதியான மனப்பிளவு ஏற்படும் என்பதை எடுத்துக் காட்டியிருந்தார்.

‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் சுதா கொங்கரா. சமூகத்தின் அடித்தட்டு பெண்களிடையே ஆயிரம் திறமை இருந்தாலும், அது குடத்திலிட்ட விளக்காக உலகம் அறியாமல் போய்விடுகிறது என்பதே சமுதாய நிலை. அப்படிப்பட்ட ஒரு பெண்ணை தேர்வு செய்து, குத்துச்சண்டைப் போட்டியில் அவளை சர்வதேச உயரத்துக்கு அழைத்துச் செல்லும் ஒரு பயிற்சி யாளரின் உழைப்பை சித்தரிக்கும் படம் இது.

பயிற்சியாளரின் தனிப்பட்ட பலவீனங்களுக்கும், அவருடைய தொழில் விசுவாசத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்கிற கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக துணிச்சலான ஒரு பாத்திரத்தை உருவாக்கி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றார் சுதா. தமிழ் மற்றும் இந்தியில் மாதவன், ரித்திகாசிங் நடிப்பில் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’, இப்போது தெலுங்கிலும் ‘குரு’ என்கிற பெயரில் வெங்கடேஷ், ரித்திகாசிங் நடிப்பில் வெளிவருகிறது. இதையும் சுதாவே இயக்கியிருக்கிறார்.

மகளை படிக்க வைப்பதற்காக ஒரு தாயே மாணவியாக மீண்டும் பள்ளிக்குப் போகும் வித்தியாசமான கதை ‘அம்மா கணக்கு’. யதார்த்தத்தில் சாத்தியம் குறைவாக இருக்கும் கதையாக இருந்தாலும், தன்னுடைய குழந்தையின் உயர்வுக்காக ஒரு தாய் எந்த நிலைக்கும் செல்வாள் என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லி அனைவரின் கவனத்தையும் தன் மீது ஈர்த்தார் அஷ்வினி அய்யர் திவாரி. இளம் விதவைப் பெண் சந்திக்கும் பிரச்னைகள், இளம் தலைமுறையினரின் உதாசீனப் போக்கு என்று பல விஷயங்களை அவர் தொட்டுச் சென்ற லாவகம் விமர்சகர்களை கவர்ந்தது. டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்த அமலாபாலின் துணிச்சல் பாராட்டுக்கு உரியது.

ஏற்கனவே ‘ஆரோகணம்’ மூலம் தன்னை தரமான இயக்குநராக நிரூபித்தவர் நடிகை  லட்சுமி ராமகிருஷ்ணன். ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்று த்ரில்லிங்கான கமர்ஷியல் மூலம் வேறு பரிமாணத்தை எட்டினார். கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘அம்மணி’, உலகப்படங்கள் ஏற்படுத்தக்கூடிய உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. கைவிடப்பட்ட முதியோர்களின் வாழ்வியல் வலிகளை யதார்த்தமாக பதிவு செய்திருந்தார். சம்பாதிக்கும் வரை கொண்டாடப்பட்டு, தளர்ந்த காலத்தில் தூக்கி எறியப்படும் மனிதர்களின் கதையாக, சமகால அவலத்தை சுர்ரென்று சுடும் விதமாக ‘அம்மணி’யை இயக்கியிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

கிராமப் புறங்களின் அண்ணன் - தம்பி உறவு என்பது சுவாரஸ்யமானது. பாண்டியராஜன் போன்ற இயக்குநர்கள் ‘ஆண்பாவம்’ போன்ற படங்கள் மூலமாக இதை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள். அதே சப்ஜெக்டை மிக அழகாக நகைச்சுவை கலந்து திறமையாக இந்த தலைமுறையினருக்கு மறு அறிமுகம் செய்தார் அறிமுக இயக்குநர் உஷா கிருஷ்ணன். எந்த ஒரு காட்சியுமே பெண் இயக்குநரால் இயக்கப்பட்டது என்கிற அடையாளம் தெரியாத அளவுக்கு சிறப்பான கமர்ஷியலாக ‘ராஜா மந்திரி’ அமைந்தது.

ரோகிணி, சந்திரா தங்கராஜ் உள்ளிட்ட பெண் இயக்குநர்கள் தயாராகி இருக்கும் தங்களுடைய படங்களோடு 2017-ஐ ஆள்வதற்கு தயாராக இருக்கிறார்கள். ஏற்கனவே டிரெண்டில் இருக்கும் பேய்க்கதைகளையோ, வழக்கமான ஹீரோயிஸப் படங்களையோ வழங்காமல் புதுமையான கதை சொல்லல் முறைக்கு கோலிவுட்டை அழைத்துச் செல்லும் இவர்களது சேவை, தற்போதைய தமிழ் சினிமாவின் சூழலுக்கு அத்தியாவசியமானதும், காலத்துக்கு ஏற்ற தேவையாகவும் இருக்கிறது.

- மீரான்