அந்தநாள் தீபாவளி!



தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ கூட 1931ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸாகத்தான் வெளியானது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கும், தீபாவளிக்குமான பந்தம் அப்போதிலிருந்துதான் தொடங்குகிறது.

தீபாவளிக் கொண்டாட்டத்தில் புதிய ஆடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளோடு திரைப்படங்களும் கொண்டாட்டத்தில் பெரும்பங்கு வகிப்பதை தமிழகம் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்டுவருகிறது.

தமிழில் முதன்முதலாக நூறு நாள் ஓடிய திரைப்படமான ‘ஆர்யமாலா’ (1941) கூட தீபாவளி ரிலீஸ்தான். தமிழின் முதல் சூப்பர் ஸ்டார்  தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ் ‘ திரைப்படம் 1944ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளியாகி, 1945 மற்றும் 1946ஆம் ஆண்டு தீபாவளியையும் தாண்டி ஓடியது.

கலைஞர் வசனத்தில், சிவாஜிகணேசன்  நாயகனாக அறிமுகமான ‘பராசக்தி’  1952ல் தீபாவளி நாளில் வெளியானது. ஒரே நாளில் தமிழ்த் திரையுலகம்  முழுதும் அறியப்பட்ட கதாநாயகனாக சிவாஜி சிகரம் தொட்டார்.ஆரூர்தாஸ் வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ‘பரிசு’, அவரது வசனத்தில் சிவாஜி நடித்த ‘அன்னை இல்லம்’ படங்கள் 1963 தீபாவளி நாளில் வெளியாகி நூறு நாட்களைத் தாண்டி ஓடின.

தீபாவளி நாளில் வெளியான சிவாஜியின் ‘ஊட்டிவரை உறவு’, ‘இருமலர்கள்’ படங்கள் 25 வாரங்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தன. தீபாவளியன்று சிவாஜியின் ‘சிவந்த மண்’ படம் திரையிடப்பட்ட பல தியேட்டர்களில், வாசலிலிருந்து  ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ரசிகர்களின் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தனவாம். சிவாஜியின் 100ஆவது படமான ‘நவராத்திரி’ யும் தீபாவளி நாளில் திரைக்கு வந்து 100 நாட்களைத் தாண்டி ஓடியது.

எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘படகோட்டி’ உள்ளிட்ட படங்கள் பட்டாசுத் திருவிழாவின்போது வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. தமிழில் தீபாவளிக்கு ரிலீஸான முதல் வண்ணப்படம் என்கிற பெருமை ‘படகோட்டி’யையே சாரும்.

சிவாஜி - ஜெயலலிதா நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’ மற்றும் ‘சொர்க்கம்’  படங்களும் தீபாவளி நாளில் திரைகண்டு  பெரிய வெற்றியைப் பெற்றன. ‘சொர்க்கம்’  படத்தில் இடம்பெற்ற ‘பொன்மகள் வந்தாள்...’ பாடல் மாஸ் ஹிட்டானது.  பின்னாளில் விஜய்யின் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் அந்தப்பாடலை  ஏ.ஆர்.ரஹ்மான் ரீமிக்ஸ்  செய்தார்.

கமல்ஹாசன் நடித்த ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘தப்புத் தாளங்கள்’, ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’, ‘நாயகன்’, ரஜினியின் ‘மனிதன்’, ‘முத்து’ உள்ளிட்ட படங்களும் அதிரடி தீபாவளியைக் கொண்டாடியவை.

பொதுவாக தீபாவளியன்று வெளியாகும் படங்கள் கொண்டாட்ட மனநிலையோடு இருக்க வேண்டும் என்பார்கள். இந்த விதியை உடைத்தது இயக்குநர் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’. ஒரு காலத்தில் தீபாவளிக்கு பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி, அவற்றில் நான்கைந்து படங்களாவது வெற்றி பெறும். இப்போது?

நெல்லை பாரதி