மீன்கொடி தேரில் வலம் வந்த மன்மதராஜனின் நினைவலைகள்!



‘சோலைக்குயிலே காலைக்கதிரே’ பாடலை நினைவிருக்கிறதா? அடிக்கடி ரேடியோவில் கேட்கும், எஸ்.பி.ஷைலஜாவின் குரலில், ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் எம்.ஜி.வல்லபன்.

இது மட்டுமல்ல. ‘ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி’ (தர்மயுத்தம்), ‘அரிசி குத்தும் அக்கா மகளே’ (மண்வாசனை), ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ (உதயகீதம்), ‘உன்னைக் காணும் நேரம்’ (உன்னை நான் சந்தித்தேன்), ‘மீன் கொடி தேரில் மன்மதராஜன்’ (கரும்பு வில்), ‘மெல்ல மெல்ல என்னைத் தொட்டு’ (வாழ்க்கை) உள்ளிட்ட சுமார் நாற்பது சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் எம்.ஜி.வல்லபன்.

‘தைப்பொங்கல்’ படத்தின் இயக்குநரும் இவர்தான். ‘பிலிமாலயா’ வல்லபன் என்கிற பெயரில் சினிமாத்துறையில் புகழ்பெற்ற பத்திரிகையாளராகவும் அறியப்பட்டவர். ‘பேசும் படம்’, ‘பிலிமாலயா’ உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

அவர் குறித்த தொகுப்புநூலான ‘சகலகலா வல்லபன்’, பத்திரிகையாளர் அருள்செல்வனால் தொகுத்து சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. சினிமா பிரபலங்களும், பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டு வல்லபனின் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். நூலை நடிகர் சிவகுமார் வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

சிவகுமார் விழாவில் பேசியபோது, “கேரளாவில் ஐந்தாம் வகுப்புவரை படித்துவிட்டு ஆறாம் வகுப்பிலிருந்து இங்கு படித்து எஸ்.எஸ்.எல்.சி யில் மாநிலத்தில் முதலிடம் பெற்றவர் எம்.ஜி.வல்லபன். கல்லூரியில் படித்தபோது டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால்  விருது வாங்கியிருக்கிறார்.

‘நல்லதைச் சொல்லும் போது நன்றி கூற நேரமில்லாதவர்கள், அல்லதைச் சொல்லும் போது எரிந்து விழ உரிமையில்லாதவர்கள்’ என்று அடிக்கடி சொல்லுவார்.  இளையராஜா என்கிற மாணிக்கத்தைக் கண்டறிந்ததுமே, தன் பத்திரிகை மூலம் உலகத்துக்கு முதலில் சொன்னது வல்லபன்தான்” என்றார்.

‘‘ஒருவர் பற்றி யார் சொல்கிறார்கள் என்பதை வைத்து அவரது கேரக்டர் தெரியும். எம்.ஜி.வல்லபனின் நண்பர்களைப் பார்த்தே அவரை யார் என்று கூற முடியும். வல்லபன், மலையாளியாகப் பிறந்து தமிழில் இவ்வளவு சிறப்பான முறையில் எழுதியிருப்பது சிறப்பு. வல்லபனின் எழுத்தாற்றல் வியக்கவைக்கிறது.அவர் நான் நடத்திய ‘பாக்யா’ பத்திரிகையிலும் எடிட்டராக வேலை பார்த்துள்ளார்.

பொறுப்புகளை அவரிடம் விட்டுவிட்டு நான் படப்பிடிப்புக்கு கவலையில்லாமல் போய் விடுவேன்” என்று நெகிழ்ச்சியாக தன்னுடைய நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் பாக்யராஜ்.‘குங்குமம்’ வார இதழின் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன், வல்லபனின் மாணவர்.

“வல்லபன் ஒரு நல்ல தோட்டக்காரர். தான் செல்லும் வழிநெடுக விதைகளைத் தூவிக்கொண்டே இருந்தார். அவற்றுக்கு நீர் ஊற்றிக்கொண்டே இருந்தார். அந்தச் செடி வளர்ந்து மரமாகி காய்த்து கனிந்து தனக்கு உதவுமா என்றெல்லாம் நினைக்கமாட்டார். அவர் விதைத்த விதைகளில் நானும் ஒருவன்” என்று சிவராமன் குறிப்பிட்டார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,‘‘எம்.ஜி.வல்லபன் அவர்களை நான் பார்த்தது இல்லை. பழகியதில்லை. இருந்தாலும், இந்த ‘சகலகலா வல்லபன்’ நூலைப்  படித்ததும் அவருடன் பழகியதைப் போல உணர்ந்தேன். படிக்கப்படிக்க நெருங்கிப் பழகிய உணர்வு இருந்தது.

இன்று ஊரை ஏமாற்றுகிறவர்கள்தான் நன்றாக இருக்கிறார்கள். வல்லபன் பணத்தைச் சம்பாதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் மக்களைச் சம்பாதித்திருக்கிறார். இந்தத் தலைமுறை பத்திரிகையாளர்கள் இந்த ‘சகலகலா வல்லபன்’ நூலைப் படித்தால் அவர்களுக்கு புது வேகம் வரும்.’’ என்றார்.“தன்னுடைய பெயரை முதன்முதலாக சினிமா டைட்டிலில் போட்டது வல்லபன்தான்” என்று அவரை நினைவுகூர்ந்தார் கவிஞர் அறிவுமதி.

நடிகர் ராஜேஷ், இயக்குநர் பேரரசு, கவிஞர் யுகபாரதி உள்ளிட்ட பலர் எம்.ஜி.வல்லபனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நூலின் தொகுப்பாசிரியர் அருள்செல்வன் அனைவரையும் வரவேற்றார். வல்லபனின் மகள் அர்ச்சனா பிரகாஷ் நன்றி கூறினார். வல்லபனின் மகன் அபிலாஷ் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார்.

- எஸ்