இடைத்தேர்தல் ராணி!



இந்தியத் தேர்தலே இப்போது நடந்தாலும் இந்த ‘இடைத்தேர்தல்‘ டிரெண்டில் காணாமல் போய்விடும் போல் உள்ளது. ‘டம்மி டப்பாசு’, ‘ஜோக்கர்’, ‘ஆண்தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இணையவாசிகளை இம்சை செய்வது ரம்யாவின் ஹாபி.

அதில் சமீபத்தில் புடவை கட்டி இடுப்பு மடிப்புத் தெரிய இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணைய இளசுகள் மட்டுமல்லாமல் இலக்கியவாதிகளையும் பெருமூச்சு விட வைத்திருக்கிறது. ‘குஷி’ ஜோதிகா இடுப்பு, சிம்ரன் இடுப்பு என பிஸியாக ஒரு காலத்தில் இருந்த தமிழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இடையியல் டிரெண்டில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. ரம்யாவை வளைத்துப் பேசினோம்.

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?”

“அடிக்கடி நான் போட்டோஷூட் விடுவேன். நார்மலாதான் சமூகம் ரியாக்ட் பண்ணும். இந்த முறை எனக்கே ஷாக் . செம டிரெண்டாகிடுச்சு. கொஞ்சம் ஜிம்லாம் போயி வெயிட்லாம் குறைச்சதுனால எனக்கே ஒரு நம்பிக்கை . அதனாலேயே இந்த போட்டோஷூட் . முதல்ல கூட கொஞ்சம் கண்ணுக்கு மை எல்லாம் போட்டுதான் போட்டோ எடுத்தேன், அடுத்த ஷூட்ல அதுவும் வேண்டாம் இயற்கையாவே நீங்க நல்லாதான் இருக்கீங்கன்னு சுரேந்தர் சொன்னார்.

ஆமா அவர்தான் அந்தப் புகைப்படங்களை எடுத்தவர். நானும் சரின்னு ஏத்துக்கிட்டு எந்த மேக்கப்பும் இல்லாம புடவை கட்டி எடுத்தோம். பார்த்தா எனக்கே ஆச்சர்யமா இருக்கு அவ்ளோ பாராட்டு, அவ்ளோ வர்ணனை, கவிதைகள்னு ரெண்டே நாட்கள்ல ஹேஷ்டேக்லாம் போட்டு டிரெண்டாக்கிட்டாங்க.”

“ஆக்சுவலா யார் இந்த ரம்யா பாண்டியன்?”

“என்னங்க நீங்க? ‘வண்ணத்திரை’யிலேயே என்னைப் பத்தி நாலு வாட்டி பெருசா அறிமுகப்படுத்தி இருக்கீங்க. இருந்தாலும் திரும்பவும் சொல்றேன். நான் திருநெல்வேலிகாரி, அக்மார்க் தமிழ்ப் பொண்ணு. யாராவது இடுப்புலே கிள்ளினா சீவிடுவேன் சீவி. படிச்சது பயோ மெடிக்கல் இன்ஜினியரிங். நடிப்பு மேல செம ஆர்வம்னு இந்தப்பக்கம் வந்துட்டேன். அப்பா பத்து வருடங்களுக்கு முன்னாடியே இறந்துட்டாங்க. அம்மா, சகோதரர்  இருக்காங்க.

மூணு படங்கள் நடிச்சிருக்கேன். போதுமா டீடெயில்? எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறீங்களா என்ன?”

“பெரும்பாலும் நடிகைகள் கொஞ்சம் கவர்ச்சியா புகைப்படம் எடுத்து வெளியிட்டாலே வாய்ப்புக்காகத்தான் என ஒரு கருத்து இருக்கே, உங்க புகைப்படங்கள் எப்படி?”

“எல்லாம் ஒரு விளம்பரம்தான்னு செந்தில் சார், கவுண்டமணி சார் கிட்டே ஒரு படத்தில் சொல்லுவாரே, அதுமாதிரிதான் சொல்லணும். ‘ஜோக்கர்’ என்னை கிராமத்துப் பெண்ணா, அடையாளமே தெரியாம காமிச்சது. அதை கொஞ்சம் மாத்த மாடர்ன் உடைகளில் புகைப்படம் எடுத்தேன். அதுவும் கொஞ்சம் டிரெண்ட் ஆச்சு. இப்போ  திரும்பப் புடவை. அவ்வளவுதான். நான் ஒண்ணும் வாய்ப்பில்லாமே இல்லை. நிறையப் படங்கள் வருது. சில படங்களுக்கு ஓக்கே சொல்லியிருக்கேன். நல்ல கேரக்டர்களுக்காக காத்திருக்கேன்.”

“எந்த மாதிரி கேரக்டருக்காக காத்திருக்கீங்க?”

“ம்... ‘பாகுபலி‘ அனுஷ்கா நடிச்ச தேவசேனா, ‘மேரிகோம்' பிரியங்கா சோப்ரா இந்த ரெண்டுமே எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்கள். அப்படி ஒரு படம் பண்ணணும். அதுக்காக அந்த கேரக்டர்கள்தான் வேணும்ங்கற அளவுக்கு அடம்பிடிக்கிற ஆள் இல்லை. ஹீரோயின்தான், டூயட்தான்னு இதெல்லாம் கிடையாது, நல்ல நடிகைங்கற பெயர் வாங்கணும். அதுக்காகத்தான் காத்திருக்கேன்.”

 “தமிழ் நாட்டு பசங்க தூக்கத்தையே கெடுத்துட்டீங்களே, உங்க தூக்கத்தை யாராவது கெடுத்திருக்காங்களா?”

“அப்படி யாரும் இதுவரை வரலை. இப்போதைக்கு என் வேலையும், நல்ல நடிகை என்கிற பெயர் வாங்கணும்கிறததான் என் தூக்கத்தை கெடுத்துட்டு இருக்கு. ஆனால் யாரைப் பிடிக்கும்னு கேட்டால் விஜய், விஜய் சேதுபதி ரெண்டு பேரையும் சொல்வேன்.”“பெரும்பாலும் பெண்களுடைய ஆடைதான் நடக்குற எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்னு ஒரு கருத்து நிலவுது. அப்படி இருக்கையில் உங்க புகைப்படங்களும் சில சர்ச்சைகளை சந்திக்குமே?”

“சர்ச்சையெல்லாம் ஏற்கனவே போயிட்டுதான் இருக்கு. ஆனால் அதுக்கு என் மேல அன்பு கொண்ட மக்களே பதில் சொல்லிடுறாங்க. யாரோ ஒருத்தர் என் இடுப்பை மட்டும் மறைச்சு போட்டோ போட்டிருந்தார். அதையும் பொஸஸிவ் மோட்னு சொல்லி மாத்தி ஜாலி பண்ணிட்டாங்க. என் தொழிலே கலை சார்ந்ததுதான். நடிப்பு. அந்த நடிப்புக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்யறேன்.

மேலும் ஆடைக்கும் பெண்களுடைய குணத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு பொண்ணு அவ பார்க்குற வேலைக்கு ஏற்ப சில வசதியான உடைகளை போட்டுதான் ஆகணும். அதை புரிஞ்சுக்காம விமர்சனம் செய்தா, தப்பு உடைகள்ல இல்லை, பார்க்கற கண்கள்லதான் இருக்கு.”

“இளைஞர்களின் கனவுகளில் கலகம் செய்வது தவிர்த்து வேறு என்ன உங்களின் பொழுதுபோக்கு?”

“நிறைய சினிமா பார்ப்பேன். எனக்குப் பிடித்த பிரபலங்கள், அகிரா குரோசோவா, சார்லி சாப்ளின் மாதிரியான ஜாம்பவான்களுடைய வாழ்க்கை வரலாறுகளை படிச்சுட்டு இருக்கேன். நிச்சயம் என் வாழ்க்கைக்கும் அது உதவும். சில படங்கள்ல ஒப்பந்தம் ஆகப் போறேன். ஆனால் விவரங்கள் சீக்கிரம் சொல்றேன்.”

“உங்களை நினைத்து, உருகி உருகி கவிதை பாடுகிற மக்களுக்கு என்ன சொல்லப்போறீங்க?”

“எல்லாரும் பகிரங்கமா மன்னிப்புக் கேட்பாங்க. நான் பகிரங்கமா நன்றி சொல்லிக்கிறேன். நினைச்சுக்கூட பார்க்கலை இந்த அளவுக்கு சமூக வலைத்தளங்கள்ல வீடியோ, கவிதை, மீம்கள்போடுவாங்கன்னு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிச்சயம் நல்ல படங்கள் கொடுப்பேன். நல்ல பாத்திரங்கள்ல நடிப்பேன். திரும்பத் திரும்ப சொல்லிக்கிறேன் நன்றி.”

- ஷாலினி நியூட்டன்