தயாரிப்பாளர்களின் கலங்கரை விளக்கம்!



தமிழ்த் திரையுலகில் பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. கே.ஆர்.விஜயா நடித்த ‘மிட்டாய் மம்மி’ படத்திற்கு பைனான்சியராக வந்து, கே.ஆர்.விஜயா நடித்த ‘தலைப்பிரசவம்’ படத்தில் பங்குதாரராக மாறி, கே.ஆர்.விஜயா நடித்த ‘ஜானகி சபதம்’ படம் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தவர் கே.ஆர்.ஜி.

அதன் பிறகு, சிவாஜி நடித்த ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’, ‘திருப்பம்’, ‘நேர்மை’, ரஜினி நடித்த ‘ஜானி’, ‘துடிக்கும் கரங்கள்’, கமல் நடித்த ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘கடல் மீன்கள்’, ‘ஆயிரத்தில் ஒருத்தி’, விஜய் நடித்த ‘மின்சாரக் கண்ணா’, அர்ஜுன் நடித்த ‘சுதந்திரம்’, மாதவன் நடித்த’ குரு என் ஆளு’, பிரபுதேவா நடித்த ‘மனதைத் திருடிவிட்டாய்’, சரத்குமார் நடித்த ‘சிவந்தமலர்’, முத்துராமன் நடித்த ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’, ரகுமான் நடித்த ‘மனைவி வந்த நேரம்’, தர் இயக்கிய ‘ஆலயதீபம்’, ‘உன்னைத் தேடி வருவேன்’, விசு இயக்கிய ‘சகலகலா சாமந்தி’, ‘காவலன் அவன் கோவலன்’,

டி.பி.கஜேந்திரன் இயக்கிய ‘பெண்கள் வீட்டின் கண்கள்’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, டி.ராஜேந்தர் இயக்கிய ‘நெஞ்சில் ஒரு ராகம்’, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை’, வி.சேகர் இயக்கிய ‘பார்வதி என்னை பாரடி’, கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடித்த ‘வம்ச ஜோதி’, மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘சங்கம்’, ‘மிருகயா’, ‘ஒளியம்புகள்’, ‘நீலகிரி’, மோகன்லால் நடித்த ‘அதிபன்’,  ‘லால்சலாம்’, ஹரிஹரன் இயக்கிய ‘மயூகம்’ ஆகிய படங்களைத் தயாரித்த கே.ஆர்.ஜி., மம்மூட்டி நடித்த ‘மித்யா’, நிவாசன் நடித்த ‘வடக்கு நோக்கி எந்திரம்’, ஜெயராம் நடித்த ‘வர்ணம்’ ஆகிய படங்களையும் வாங்கி வெளியிட்டிருக்கிறார்.  

1994 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற கே.ஆர்.ஜி. அந்த சங்கத்தின் தலைவராக மூன்று முறை, அதாவது ஆறு ஆண்டுகள் தலைவராக பதவி வகித்தார். அவருடைய பதவிக் காலத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் அதிக உறுப்பினர்களைச் சேர்த்து, தயாரிப்பாளர் சங்கத்தை வலிமை உள்ள சங்கமாக மாற்றி அமைத்தார்.

தயாரிப்பாளர்களிடத்தில் ஒற்றுமையை உருவாக்கினார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் படத்தின் பெயரைப் பதிவு செய்தால் தணிக்கை அலுவலகத்திற்குச் செல்லலாம் என்கிற நிலையைக் கொண்டு வந்தார்.

விநியோகஸ்தர் சங்கங்களுக்குச் சென்று தயாரிப்பாளர் நிற்பதற்குப் பதிலாக, தயாரிப்பாளர் சங்கம் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். நடிகர், நடிகைகளின் பிரச்சினை குறித்து சுமுகமாகப் பேசி படப்பிடிப்பு நடத்த பல தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநர்களுக்கு உதவியாக இருந்தார்.

கட்டணம் கொடுத்து பாடல் ஒளிபரப்பியதை மாற்றி, பாடல்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு பணம் பெற்றுக் கொடுத்தார். சிறு படத் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைக் குறைக்கும் வகையில், முழுப் பக்க விளம்பரத்திற்குப் பதிலாக கால்பக்க விளம்பரம் கொடுக்க வழிவகுத்தார்.

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளையைத் தொடங்கியவர், தயாரிப்பாளர்களின் பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் காப்பீடு செய்து கொடுக்க வழிவகை செய்தார்.

திருட்டு விசிடி தயாரிப்பவர்களை ஒடுக்க அரசு மூலம் குண்டர் சட்டம் இயற்ற திரையுலகைத் திரட்டி போராடியவர், இரண்டு லட்சம் மானியத் தொகையை ஐந்து லட்சமாக உயர்த்திக் கொடுக்க முயற்சி எடுத்தார். தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்த்தவர்களைப் பாராட்டிப் பெரும் விழா எடுத்து கௌரவித்தவர், படத் தயாரிப்புச் செலவுகளைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடர்ந்து பிலிம் சேம்பர் எனப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்த கே.ஆர்.ஜி. கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி மறைந்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் சிங்கமாக கர்ஜித்தவர், அன்பிற்கு இலக்கணமாக, ஆற்றலின் பிறப்பிடமாக, தயாரிப்பாளர்களின் நாயகனாக, திரையுலகின் சமாதானப்புறாவாக விளங்கிய கே.ஆர்.ஜியின் வீர தீர செயல்களை ‘தலைவர் கே.ஆர்.ஜி.’ என்கிற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார், தயாரிப்பாளர் சங்கத்தில் முன்பு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றிய ‘கவுன்சில்’ பாலன்.

இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “இந்தப் புத்தகத்திற்குள் அன்றைய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வரலாறும் புதைந்து கிடக்கிறது. படிக்கும்போது ஒவ்வொரு பக்கத்திலும் கே.ஆர்.ஜி. என்கிற மகத்தான ஆளுமையின் ஆன்மா நிதர்சனமாகத் தெரிகிறது.

அவரைப் போன்ற மனிதர்களை இனி பார்க்க முடியுமா என்பது சந்தேகம்!''  என்று கூறியிருக்கும் அவர், “தமிழ்த் திரைப்படத்
தயாரிப்பாளர் சங்கம் பற்றித் தெரிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவியாக இருக்கும். தயாரிப்பாளர்கள் இந்த நூலைப் பாதுகாக்க வேண்டும் என்பது என் அவா” என்றும் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ‘தலைவர் கே.ஆர்.ஜி’ புத்தக வெளியீட்டு விழா எளிமையாக நடைபெற்றது. இவ்விழாவில் புத்தகத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, கல்வியாளர் சுடலைமுத்து  பாண்டியன், நட்ராஜ் திரையரங்கு உரிமையாளர் ஆர்.வெங்கடாசலம், தொழிலதிபர் பிரேம்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

- ரா