ஆனைமுகன் அடியாரகள்



ஔவையார்

‘‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்பார்கள். தெய்வமே குழந்தையாக பிள்ளையாராக இருப்பதுதான் ஆச்சரியம். அதிலும் வேடிக்கையான குழந்தையெனில் பிள்ளையார்தான். இதற்கு இணையாக வேடிக்கையான ஒருவரைச் சொல்ல வேண்டுமெனில் அது ஔவையாரைத்தான் சொல்ல முடியும். ஏனெனில், குழந்தையெனில் ஓடியாட வேண்டும். பாட்டி எனில் ஓரிடத்தில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், இங்கேயோ குழந்தை ஓரிடத்தில் அமர்ந்திருக்க இந்த ஔவைப் பாட்டியோ ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறாள். ஏனெனில், அப்படி ஓடிக் கொண்டிருப்பதற்கே இந்த தெய்வக் குழந்தையான பிள்ளையார்தான் காரணம்.

இந்த குழந்தையின் பூரண அனுக்கிரகத்தினால்தான் நிறைய காரியங்கள் செய்தாள். ஔவையாரை விட தமிழகத்திற்கு உபகாரம் செய்தவர் எவருமில்லை என்றே சொல்லி விடலாம். குழந்தைகளாக இருக்கிறபோதே நல்ல ஒழுக்கத்தையும் பக்தியையும் உண்டாக்கி விட்டால்தான் பிறகு அவை நிலைத்து நிற்கும். எத்தனையோ மகாகவிகள் பெரியவர்களுக்கு மட்டும் பாடியிருப்பார்கள். ஆனால், குழந்தைகளுக்கு பாடியதில் முக்கிய பங்கு வகிப்பவர் ஔவையார்தான். மாபெரும் ஞானியாகவும் யோக சாஸ்திரங்களில் கரை கண்டவராகவும் விளங்கினாள். பேரக் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டுமே என்று இந்தப் பாட்டி நிறைய நல்லதைச் சொல்லி வைத்தாள். பள்ளியில் முதல் படிப்பே ஆத்திசூடியைத்தான் சொல்லித் தருகிறார்கள். முதல் பூஜை பிள்ளையாருக்கும், முதல் படிப்பு ஔவையார் பாடலுமாகத்தான் இன்று வரை இருக்கிறது.

 ஔவையார் பிள்ளையாரின் அருளால் திடீரென்று பாட்டியாகிவிட்டாள். பிறகு கிராமம் கிராமமாகச் சென்று எளிமையாக உபதேசித்தாள். விநாயகர் அகவல் என்கிற அழகான யோக ரகசியங்கள் நிரம்பிய துதியை இயற்றினாள். பிள்ளையாரை கல்லுப் பிள்ளையார் என்று சொன்னாலும், தான் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமலே இருந்தாலும் பக்தர்களை ஒரே தூக்காகத் தூக்கி உச்சத்தில் வைத்து விடுவார். இப்படித்தான் தும்பிக்கையால் ஒரே தூக்காகத் தூக்கி ஔவையை கயிலாயத்தில் அமர வைத்தார். விநாயகர் அகவலை வாசிக்கும்போது பிள்ளையாரையும் ஔவைப் பாட்டியையும் சேர்த்து நினைத்தது போலாகும். அதுமட்டுமல்ல இரட்டிப்பு அனுக்கிரகம் என்று காஞ்சி பெரியவர் அடிக்கடி கூறுவார். 

நம்பியாண்டார் நம்பி

இறைவன் மீது நம்பிக்கை உண்டு? அல்லது இல்லை? என்பதுதான் ஆஸ்திகம், நாஸ்திகம் என்று பிரிந்து கிடக்கிறது. ஆனால், இந்த புதியதாக உண்டுபண்ணப் படாமல் அல்லது வாழ்க்கையின் அனுபவங்களால் கடவுள் இருக்கிறார் என்கிற பக்குவத்தை அடையாமல் மிகச் சிறு வயதிலேயே இறைவனிடம் பேசிய ஞானியரும் இப்பூவுலகில் இருந்தனர். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர்தான் நம்பியாண்டார் நம்பி.

இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரத்திலுள்ள அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இத்தலத்திலுள்ள பொள்ளாப்பிள்ளையார் கோயில் மிகவும் பிரபலமானது. ‘பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர். இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத்தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால் மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா’’ என்றார்.

நம்பியாண்டார் நம்பி நிவேதனங்களோடு விநாயகர் கோயிலுக்குச் சென்றான். நிவேதனம் செய்து விட்டு, ‘‘விநாயகா உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் சாப்பிடு. சீக்கிரம் சாப்பிட்டு விடு. நான் குருகுலத்திற்குச் செல்ல வேண்டும் என்று கைகூப்பி பிள்ளையாரிடம் பேசினான். அந்தச் சிலை அசையவில்லை. ஆனால், நம்பியாண்டாரின் கண்ணுக்கு மட்டும் அது சிலையாக இருக்கவில்லை.

அதனால் அது அவரைப் பொறுத்த வரையில் சிலையும் அல்ல. ஏன் உண்ண மறுக்கிறார். என்ன கோபம்? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா என்றெல்லாம் யோசித்தான். ‘நீ இப்போது இவற்றை சாப்பிடவில்லையெனில் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்’ என்று முட்டிக் கொண்டான்.  சட்டென்று சிலையாயிருந்த விநாயகர் குழந்தையின் கைகளை பிடித்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் பட்ட காயத்தை துடைத்தார். அனைத்து நிவேதனங்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார். விநாயக தரிசனம் என்பது வெறும் தோற்றத்தோடு முடிந்து விடாமல் ஞானத்தையும் போதித்துவிட்டு மறைந்தது.

பெற்றோர்கள் வந்ததும் நிவேதனம் செய்ததையும் விநாயகன் உண்டதையும் சொன்னான். ஏதோ குழந்தை சொல்லிற்று என்று விட்டுவிடாமல் மீண்டும் நிவேதனம் செய்ததை பிள்ளையார் உண்ண எல்லோரும் திகைத்துப் போனார்கள். அந்த ஞானக் குழந்தை வளர்ந்ததும் வேறொரு ஞானப் பொக்கிஷத்தை கண்டுபிடித்தும் தந்தது. அதாவது, ராஜராஜ சோழன் காலத்தில் தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் திருமுறைகள் அனைத்தையும் வெளிக் கொணர்ந்தவரும் இவரே ஆகும். இன்று நமக்குக் கிடைத்திருக்கும் திருமுறைகள் அனைத்துமே பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் மூலம் கிட்டிற்று என்றால் மூலத் திருவருளின் மகிமையை சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?

அகத்தியர்

ஆனைமுகனும் அகத்தியரும் உருவத்தில் தொப்பை வயிற்றுக்காரர்கள் என்பது பிரசித்தம். அதுமட்டுமல்லாது வாமன ரூப என்கிற உருவத்தில் சிறியவராவார்கள். ஒரு ஸ்லோகத்தில் வக்ர துண்ட மகாகாய என்று வரும். இதில் மகா காய என்பதற்கு பெரிய சரீரமுடையவர் என்றும், வாமன ரூபம் என்றும் சொல்வது எப்படி பொருந்தும்? அதாவது, சிறிய அணுவும் அவர்தான், பெரிய அகிலாண்டமும் அவர்தான். இல்லையெனில் சமுத்திர நீரை எப்படி உள்ளங்கையால் எடுத்து வற்றச் செய்ய முடியும்.

 இதையே ஔவையார், அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் என்று சொல்கிறார். அகத்தியர் தமது கமண்டலத்துக்குள் அடைத்து வைத்திருந்த காவிரியைக் காக்கையின் உருவில் வந்து கவிழ்த்து விட்டு நதியாக ஓடச் செய்தவரும் விக்னேஸ்வரர்தான். ஒருமுறை அகத்தியர் வெகுதொலைவே வருவதை வாதாபி, வில்வலன் என்கிற இரு அரக்கர்கள் கவனித்தனர். அடடா... இன்று அகத்தியரையே நாம் கொல்லப் போகிறோமா என்று மகிழ்ச்சியில் துள்ளினர்.‘‘அடேய் வாதாபி. இதோ நீ இந்த மாம்பழத்திற்குள் சென்று ஒளிந்து கொண்டு விடு. நான் சிவன டியாரின் வேடத்தில் சென்று பழத்தை கொடுக்கிறேன். உண்டபிறகு நான் கூப்பிடும்போது வயிற்றை கிழித்துக் கொண்டு வா’’ என்றான், வில்வலன்.

அகத்தியரின் எதிரே சிவனடியார்போல வில்வலன் மாறினான். அகத்தீசனுக்கு எது உண்மையான அடியார் என்று தெரியாதா? எனவே, வில்வலன் ஆசையாக கொடுப்பதுபோல கொடுத்த அரக்கனாகிய மாம்பழத்தை கொடுத்தான். உள்ளங்கையால் கடலை உறிஞ்சிய அகத்தியருக்கு அரக்கன் எம்மாத்திரம். மாம்பழத்தை வாங்கினார். சாப்பிட்டார். வில்வலன் அகத்தியரின் வயிற்றைப் பார்த்து, ‘‘வாதாபி வெளியே வா... வாதாபி வெளியே வா’’ என்று கத்தினான்.  அகத்தியர் சிரித்தார். ‘‘அவன் ஜீரணமாகி விட்டானப்பா... எனக்குள் இருக்கும் சிவாக்னி அவனை எரித்து விட்டது’’ என்றார்.

வில்வலனுக்கு கோபம் பொங்கியது. அடியாரின் வேடம் கலைந்தான். தனது சுயமான அரக்க உருவை எடுத்துக் கொண்டான். கொல்வதற்காக இடுப்பிலிருந்து வாளை உருவினான். அதற்குள் அகத்தியர் தர்ப்பையில் மந்திரத்தை ஏற்றி அவன் மீது ஏவினார். இந்த அரக்கர்களின் கபட நாடகத்தை வெளிக் கொண்டு வந்ததே விநாயகர்தான். அதாவது, இவர்களின் கபடத்தை அகத்தியருக்கு உணர்த்தியதே பிள்ளையார்தான். வாதாபி கணபதி என்றே பிள்ளையாருக்கு பெயரும் உண்டு.

காவ்ய கண்ட கணபதி முனிவர்பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியால் ‘நாயனா’ என்றழைக்கப்பட்டவரே காவ்ய கண்ட கணபதி முனிவர். இவர் பகவான் ரமணரின் பிரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா கிராமத்தின் பக்கத்தில் கலுவராயி என்கிற ஊரில் 1878ல் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் மிகப் பெரிய மேதையாக விளங்கினார். அருணாசல மோன ரிஷியை உலகுக்கு பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் என்று பறைசாற்றி ஆன்மதாகங் கொண்டவர்கள் பலரை அவரருள் பெற வழிகோலியவர்.

இவரது தந்தையான நரசிம்ம சாஸ்திரி அவர்கள் தன் இஷ்ட தெய்வமான டுண்டி கணபதியின் அருளை வேண்டி காசியைச் சென்றடைந்தார். விஸ்வநாதர் ஆலயத்திற்கு எதிராக உள்ள டுண்டி கணபதி ஆலயத்தில் மகாகணபதி மந்திரத்தை ஜபித்து வரலானார். 1878ம் வருடம், நவம்பர் மாதம் பதினேழாம் நாள் அவர் உள்ளார்ந்த ஜபத்திலிருந்த போது கணபதி சிலையிலிருந்து ஒரு குழந்தை தோன்றி மெல்லத் தவழ்ந்து வந்து அவர் மடியிலேறி அமர்ந்தது. இந்த அனுபவம் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.

அவர் காசியில் இந்த நிகழ்ச்சிகளை கண்டிருக்கையில் அவரது மனைவி நரசமாம்பாள் தனது பெற்றோர் இல்லத்தில் ஒரு ஆண்மகவை ஈன்றாள். குழந்தைக்கு சூரிய கணபதி என்று பெயரிட்டார். அவர் வாசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்தவராதலால் வாசிஷ்ட கணபதி என்ற பெயரைத் தரித்தார். பின்னர் இவரது தவ வலிமையைக்  கண்டவர்கள் கணபதி முனிவர் என்றே அழைத்தனர்.

பத்து வயதுக்குள் சமஸ்கிருத காவியங்களையும், கணக்கியலையும், வானவியலையும் கற்றுத் தேர்ந்தார். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து அளவிட முடியாத மொழித் தொண்டும், ஆன்மிகத் தொண்டும் ஆற்றினார். தன் ஆன்ம குருவைத் தேடியலைந்த கணபதி முனி, 18.11.1907 அன்று திருவண்ணாமலையை வந்து சேர்ந்து, விரூபாக்ஷ குகையில் ரமணரைக் கண்ட நொடியில் அவர் பாதங்களில் விழுந்து உண்மையான தவம் என்னவென்று போதிக்கக் கேட்டுக்கொண்டார்.

அப்போது பிராம்மண ஸ்வாமி என்றறியப்பட்ட ரமணர், சற்று நேரம் அமைதியுடன் இருந்தார். பின் கணபதி முனியைப் பார்த்து மெல்லப் பேசினார். “நான் நான் என்பது எங்கேயிருந்து புறப்படு கிறதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே ஸீனமாகும். அதுவே தபஸ். ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினால் அந்த மந்திரத்வனி எங்கேயிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஸீனமாகும். அதுவே தபஸ்” பிராம்மண ஸ்வாமியின் பூர்வாசிரமப் பெயர் ‘வேங்கடராமன்’ என்றறிந்த கணபதி முனி, அதைச் சுருக்கி, ரமணர் என்ற பெயர் அமையுமாறு ‘‘பகவான் ரமண மஹரிஷி” என்று அழைப்பதென முடிவெடுத்து, மற்றவர்களிடமும் கூறினார். உடனே தன் குருவினைப் புகழ்ந்து, ஐந்து சமஸ்கிருத ஸ்லோகங்களை எழுதி ரமணரிடம் கொடுக்க, ரமணரும் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார்.

அதேபோல ரமணரும், கணபதி முனியை “நாயனா” என்றழைக்க ஆரம்பித்தார். அதுவே கணபதி முனியின் பெயராக நிலைத்து விட்டது.ஸ்ரீ அரவிந்தரின் “ஜனனி”க்கு நாயனா எழுதிய முன்னுரையைப் பற்றி ‘அது மூலத்தை மிஞ்சி விட்டது’ என்று குறிப்பிடுகிறார் அரவிந்தர். நாயனாவின் உமாசஹஸ்ரத்தைப் படித்த ஸ்ரீ அரவிந்தர் அதை மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அரிய செயல் எனப் புகழ்ந்து, நாயனாவைச் சந்திக்கும் தன் ஆவலை வெளியிட்டார்.

விபீஷணன்

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேகம் நிறைவுற்றது. விபீஷணன் உள்ளமும், கண்களும் குளிரக்குளிர ஸ்ரீராமரையும் சீதாப் பிராட்டியாரையும் தரிசித்தான். புறப்பட வேண்டுமே என்று கொஞ்சம் வருத்தமுற்றான். ஸ்ரீராமரும் பிரிய மனமிலாது விடையளித்தார். ஏதேனும் கொடுக்க வேண்டுமே என்று நினைத்தார். தன்னுடைய நினைவுப் பரிசாக தன் குலப்பதியான ஸ்ரீரங்கநாதரை அளித்தார். விபீஷணன் அகமகிழ்ந்து ஏற்றான். அயோத்தியிலிருந்து புறப்பட்டு திரிசிரபுரம் எனும் இன்றைய திருச்சிக்கு வந்தான்.

அகண்ட காவிரியையும் சுற்றிலும் இருந்த எழில் வனப்பையும் கண்டு மகிழ்ந்தான். அங்கேயே ஓய்வெடுக்கவும் தீர்மானித்தான். காவிரிக்கு அருகேயே அங்கு சிறுவனாக வந்திருந்த விநாயகரிடம் ரங்கநாதரின் சிலையை கொடுத்து விட்டு சென்றான். இத்தலத்தில்தான் இந்த ரங்கநாதர் பிரதிஷ்டையாக வேண்டுமென்று யார் தீர்மானித்தார்களோ இல்லையோ, ஞானமுதல்வன் தீர்மானித்து விட்டான்.

ஏனெனில் இப்போது விபீஷணன் வந்திருக்கும் காவிரியை கொண்டு வந்ததே பிள்ளையார்தானே. காக்கை உருவில் சென்று அகத்தியரை ஏமாற்றி அவர் கமண்டலத்திலிருந்து நீரை தட்டி விட்டவரே இவர்தானே. அதுபோல இங்கும் ஓர் விகட லீலையை நிகழ்த்தினார். விபீஷணன் கைகளில் கொடுத்த ரங்கநாதரை அங்கேயே வைத்தார். மறைந்தார். அருகேயுள்ள மலையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார்.

விபீஷணன் திரும்ப வந்தான். சிறுவனை காணவில்லையே என்று அதிர்ந்தான். அருகேயே ரங்கநாதர் பிரதிஷ்டை ஆகியிருப்பது பார்த்து திகைத்தான். சரி, இந்த ரங்கநாதரை எடுத்துச் செல்லலாம் என்று எடுக்க முயன்றபோது அதை எடுக்க முடியவில்லை. இது அந்த ஆதிநாயகனின் லீலைதான் போலும் என்றுணர்ந்து ஸ்ரீரங்கத்திலேயே பிரதிஷ்டை செய்தார். சிலையை கொடுத்து விட்டுச்சென்ற சிறுவன் மலையின் மீதுள்ளதை அறிந்த விபீஷணன் அங்கு சென்று பார்த்தான். ஏன் அப்படி கீழே வைத்தாய் என்று பொய் கோபம் காட்டி குட்டு வைத்ததாகவும் கூறுவர். உச்சிப் பிள்ளையாரின் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு உள்ளதாக சொல்வார்கள்.

உச்சி என்பது எல்லாவற்றையும் கடந்து மேலேயுள்ள மகாசக்தி என்றும் பொருளுண்டு. திருச்சியின் அடையாளமாகவே இந்த உச்சிப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள மலைக்கோட்டை அமைந்துள்ளது. காவிரியும் ஸ்ரீரங்கமும் இன்று உலகம் முழுக்க தரிசிக்கும்படியாகச் செய்தவரே விநாயகப் பெருமான்தான்.

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த குணாபரன் என்கிற மகேந்திர பல்லவர் ஆட்சியில் ஆலயமாக கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த ஆலயத்தின் கீழேயே தேவாரப் பாடல் பெற்ற தாயுமானவர் கோயிலும், மிகவும் சக்தி வாய்ந்த மாணிக்க விநாயகர் சந்நதியும் உள்ளது. உச்சிப் பிள்ளையாரை நினைக்க மெச்சும் வாழ்வு அமையும் என்பது அறிஞர்கள் வாக்கு.

தொகுப்பு: கிருஷ்ணா