தமிழ்நாட்டில் மயன்; மெக்சிகோவில் மாயன்!



இந்த உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாகரிகங்கள் சிறப்புடன் நிகழ்ந்தன. சுமேரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், கிரேக்க நாகரிகம், ரோமன் நாகரிகம், யுட்டுருஸ்கான் நாகரிகம் ஆகியவை அவற்றுள் சில. அவை யாவும் இன்று இல்லை.

அவற்றின் சுவடுகள்தான் இன்று காட்சி தருகின்றன. கிப்பன் எழுதிய ரோமப் பேரரசின் வீழ்ச்சியும் நலிவும் (Fall and Decline of Roman Empire) என்ற நூலும், பால் கென்னடி எழுதிய பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் (Rise and Fall of Great Empires) என்ற நூலும் இதைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன.

இது போன்று அமெரிக்க நாட்டிலுள்ள மாயன் நாகரிகம் மற்றும் இன்கா நாகரிகம் பற்றி விரிவான நூல் வெளிவர வேண்டும். இந்த இரு நாகரிகங்கள் நமது நாட்டு நாகரிகத்தோடு தொடர்புடையவை. டி.கோ. டி லாண்டா (Die Go De Landa) என்ற பாதிரியார் 1870ல் மாயன் நாகரிக ஆய்வுக்கு அடித்தளம் இட்டார். டேவிட் ஹோடெல் (David Hodell), எரிக் தாம்சன் (Eric Thompson), ஹோவார்டு லாபே (Howard Lafay), ஆல்பிரட் வாஸ்க் (Alfered Wasg) ஆகியோர் மாயன் நாகரிகம் பற்றிய வரலாற்றை அகழ்வாய்வு மூலம் ஆய்வு செய்ய முற்பட்டனர்.

அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகம், பென்சில்வேனிபா பல்கலைக்கழகம், கார்னிஜி நிறுவனம், மெக்சிகோவிலுள்ள யுகாட்டன் நிறுவனம் முதலியனவும் இப்புனித ஆய்வில் ஈடுபட்டன. ஆனால், தமிழ் நாகரிகத்தோடு மாயன் நாகரிகம் நெருங்கிய தொடர்புடையது என்ற உண்மை சரிவர வெளிவரவில்லை. இந்த உண்மை வெளிவர வேண்டும்.

மாயன் இனத்தவர் தமிழர்கள். அதுவும் சேர நாட்டுத் தமிழர்கள், மெக்சிகோ நாட்டிற்கு முதன்முதலில் சென்றவர்கள் மங்கோலியர்கள் என்று கூறுவது தவறாகும். மாயன் இனத்தவர் நடுத்தர உருவமும், அகலமான நெற்றியும் எடுப்பான மூக்கும் கொண்டவர்கள். மங்கோலியர் போன்று தட்டையான மூக்கும், குள்ளமான உருவமும் உடையவர்கள் அல்லர். மாயன் இனத்தவர் தமிழ்நாட்டிலிருந்து மெக்சிகோ சென்றவர்கள்தான் என்று அவர்களது உருவமைப்பே நமக்குக் கூறுகின்றது. நமது நாட்டைப் போலவே மெக்சிகோ மக்களிடம் பல பிரிவுகள் இருந்தன.

அங்கும் மன்னர்கள் ஆட்சியே இருந்தது. சேர, சோழ, பாண்டியர் போலவே அவர்களும் ஒற்றுமையாக இல்லை. தொடர்ந்து தங்களுக்குள் போரிட்டுக்கொண்டனர். சோழர்கள் சூரிய குலத்தில் உதித்தவர்கள் என்று கூறுவது போலவே மாயன் நாட்டு மன்னர்களும் சூரிய குலத்தில் உதித்தவர்கள் என்று கூறி வந்தனர். வாழ்க்கை முறையிலும், வழிபாட்டு முறையிலும் மாயன் மக்கள் தமிழ் மக்களைப் போலவே வாழ்ந்தனர்; இன்றும் வாழ்கின்றனர். ஆனால், காட்டினுள் வாழ்கின்றனர்.

கி.பி. 16ம் நூற்றாண்டில் மெக்சிகோவில் ஸ்பெயின் நாட்டவர் படையெடுத்து வெற்றி பெற்று மாயன் இனத்தவரை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். மாயன் மக்களை படுகொலை செய்தனர். நெருப்பில் எறிந்து கொன்று குவித்தனர். வீடுகளை அழித்தனர். வாள் முனையில் மதம் மாற்றினர்.

இத்தனை தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு ஏறத்தாழ 20 லட்சம் மாயன் இனத்து மக்கள் அங்கே காடுகளில் வாழ்கின்றனர் என்று அறியமுடிகிறது. கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் மாயன் மரபுப்படியே காட்டினுள் வாழ்கின்றனர். மாயன் மரபு மக்கள் சிவனையும், சூரியனையும், பாம்பையும், பஞ்சபூதங்களையும் வழிபட்டனர். அவர்களது முக்கிய உணவு அரிசி.

வேரடி கிழங்கையும் உண்டனர். வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம் ஆகியவை அங்கே விளைகின்றன. பருத்தியைப் பயிரிட்டு நூலாக்கி நெய்து ஆடை அணிகின்றனர். சூரியனை கினிச்சான் (Kinichan) என்றும், பாம்பை இத்சமா (Itzamma) என்றும் அழைத்தனர். உயிரெடுக்கும் யமனை அன்புச் (Anbuch) என்று வழிபட்டனர். தெய்வத்திற்கு நரபலி இடும் வழக்கம் அங்கும் இருந்தது. தமிழ்நாட்டைப் போலவே நடுகல் வழிபாடும் மெக்சிகோவிலும் இருந்தது. மாயன் இன மக்கள் வானியியலிலும், கட்டிடக் கலையிலும் தமிழர்களைப் போலவே தேர்ச்சி பெற்று விளங்கினர்.

மண்ணகத்தில் முதன் முதலில் மக்கள் இனம் தோன்றிய பகுதி கடல் கொண்ட குமரிக்கண்டம் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. சர் ஜான் ஈவான்ஸ், சர் வால்டர் ராலே, மாக்லீன் போன்ற அறிஞர் பெருமக்கள் பலர் இந்து மாக் கடலடியிலே தான் மனித இனம் தோன்றியது என்று கூறியுள்ளனர். பாரத நாட்டில் மட்டுமல்ல இந்த உலகிலேயே பழமையான நாகரிகம் திராவிட நாகரிகம் தான். அதாவது, தமிழர் நாகரிகம். உலக மொழிகளில் எல்லாம் தமிழ்ச்சொல் உள்ளது என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. அது மட்டுமல்ல, இந்த உலகம் முழுவதும் ஒரு காலத்தில் திராவிடத் தமிழர் நாகரிகம் பரவி இருந்தது என்று கூறுகிறார் மொழியியல் அறிஞர் டாக்டர். எ. சந்திரசேகர்.

பாரத நாட்டின் வரலாறு மண்ணுக்கடியில் மட்டுமல்ல; கடலுக்கடியிலும் மூழ்கிக் கிடக்கின்றது. தென்பாண்டி நாடு மற்றும் குமரி மாவட்டத்தில் அகழ்வாய்வும், இந்து மாக்கடலில் ஆழ்கடல் ஆய்வும் நடத்தினால்தான் உலக வரலாறு குறிப்பாகத் தமிழனின் உண்மையான, தொன்மையான வரலாறு வெளியே வரும். 2012ல் கோவையில் நடைபெற்ற அனைத்துலக செம்மொழி தமிழ் மாநாட்டில் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் ஆழ்கடல் ஆய்விற்கு திட்டம் ஒன்றை அறிவித்தார். இன்று அத்திட்டம் தூங்குகிறது.

பண்டையத் தமிழ் இலக்கியங்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் நோக்கும்போது உலக மகா சிற்பி மாமுனி மயன், கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவன் என அறிய முடிகிறது. அந்த மயன் பரம்பரையில் வந்தவர்கள்தான் தமிழகத்திலுள்ள இன்றைய சிற்பிகள். அவர்களை ‘‘மயன் விதித்துக் கொடுத்த மரபினர்” என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மயன் மரபு உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது. குறிப்பாக, மெக்சிகோவில் மயன் மரபின் தாக்கம் பரவலாகக் காணப்படுகிறது. மயன் நாகரிகம்தான் மெக்சிகோவிலுள்ள மாயன் நாகரிகம்.

இன்று கேரளமாக உள்ள பண்டைய சேர நாட்டில் மயன் மரபுத் தாக்கம் அதிகம் இருந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் மரவேலை செய்யும் சிற்பிகளை அதாவது, தச்சர்களை இன்றும் மயாச்சாரிகள் என்றுதான் அழைப்பர். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஸ்தபதி என்று அழைக்கப்படும் தலைமைச் சிற்பியைக் கேரளத்தில் பெருந்தச்சன் என்றுதான் இனிய தமிழில் அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பண்டைக்கால கல்வெட்டுகளில் பெரும் தச்சன் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பிய தலைமைச் சிற்பியை ராஜராஜ பெருந்தச்சன் என்று அக்கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ‘‘கானுறை மயன்” என்றார் கம்பர். காடுகள் நிறைந்த பகுதி கேரளம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்றைய கேரளம் அன்றைய சேர நாட்டின் ஒரு பகுதி. அதுவே மலைநாடு. இதைத் தமிழ் அறிஞர்கள் மறந்து விட்டனர். சேர நாட்டை அதாவது, இன்றைய கேரளத்தை ஒதுக்கி வைத்து தமிழ்நாடு வரலாறு எழுதினால் அது நிறைவு பெறாது.

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் இலக்கியம், இலக்கணம், அறிவியல், வானியல், ஜோதிடம், மருத்துவம், தத்துவம், நுண்கலைகள், கைவினைக் கலைகள் ஆகிய பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்று விளங்கினர் என்று அறிய முடிகிறது.

பண்டைக்காலத்தில் ஒரே துண்டமாக இருந்த இந்த நிலப்பரப்பு, ஜெர்மன் நாட்டு அறிஞரான ஆல்பர்ட் வெஜினரின் ‘கண்ட நிலப்பிளவுக் கோட்பாட்டி’ன்படி பல கண்டங் களாகப் பிரிந்தது என்றும், அந்த அடிப்படையிலே தான் அமெரிக்க நாட்டு மாயன், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாட்டு பழங்குடி மக்கள், பாரத நாட்டில் வாழும் தமிழ் மக்கள் ஆகியோரின் மொழி மற்றும் கலாசார தொடர்பினை அவர்களது நாகரிகத்தில் நாம் காண முடிகிறது என்றும் பல ஆய்வாளர்கள் கூறுவர்.

இந்த உண்மை அறிவியல் ரீதியாக நிரூபணம் ஆகி உள்ளது. மெக்சி கோவில் உள்ள அருங்காட்சியகத்தில் மங்கோலியர்கள் மெக்சிகோவிற்கு முதன்முதலில் வருகை தந்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால், அதற்குச் சான்றுகள் இல்லை என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

இந்த உலகின் முதல் சிற்பியான மயன், கடல் கொண்ட குமரிக்கண்டத் தில் வாழ்ந்தான் என்று துணிந்து கூறலாம். அந்த மயனின் வரலாற்று எச்சங்களை குமரி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் இன்றும் நாம் காண முடிகிறது. அதாவது, பண்டைய சேர நாடான மலைநாட்டில் மயன் பற்றிய பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. குமரி மாவட்டத்தில் மயன் வாழ்ந்த மயன்பறம்பு உள்ளது. கேரளத்தில் மயன் ஆண்டு வந்த மயநாடு (மய்யநாடு) உள்ளது.

மலை நாட்டிலுள்ள மயன் நாகரிகம்தான் மெக்சிகோவில் மாயன் நாகரிகமாகத் திகழ்ந்தது. மயன் வடித்துத் தந்த தாமரை பீடம்தான் இன்று மெக்சிகோவில் மாயன் பிரமிடாகக் காட்சி தருகிறது. மயன் கண்ட பஞ்சபூத வழிபாடுதான் மெக்சிகோவில் 5 வாயில்களைக் கொண்ட கல்மண்டபம்! மெக்சிகோவில் சிவ வழிபாடும், நாக வழிபாடும் சிறப்புற்று விளங்கின. இன்று சிவலிங்க உருவமும், நாகர் உருவமும் மெக்சிகோ நாட்டுக் காடுகளிலும், அருங்காட்சியகங் களிலும் காணப்படுகின்றன.

மெக்சிகோவில் காணப்படும் மாயன் பிரமிடுகள் கேரள மாநிலத்தில் கண்ணனூர், கோழிக்கோடு வட்டாரத்திலும், தமிழகத்தில் குமரி மாவட்டத்திலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் காணப்படுகின்றன. ‘‘அடித்தளம் விரிந்ததாகி, அவை மேலே குறுகிச் செல்லத் தளம் போல் விளங்கும் படித்தளமாகி நின்று, முடித்தளம் வளியால் ஆக்கி முயல்வதே சிற்பம்” என்று பிரமிடின் இலக்கணத்தை பன்னிருசாரம் என்ற நூலில் கூறுகிறான் மயன். இந்த பிரமிடுகளை கேரள மக்கள் ‘‘ஆராட்டுத்தற” என்றும், ‘‘பூத்தற” என்றும், குமரி மாவட்ட மக்கள் ‘‘காலசாமி” என்றும் அழைத்து வழிபடுகின்றனர். மாயன் பிரமிடுகளை மெக்சிகோவில் சூரியனாக வணங்குகின்றனர்.

 குமரியில் வணங்கப்படும் காலசாமி என்ற பீடமும் சூரியனாகவே வணங்கப்படுகிறது. காலத்தை நிர்ணயிக்கும் தெய்வம் சூரியன். அவனைத்தான் காலசாமி என்று குமரி மாவட்ட மக்கள் அழைக்கின்ற னர். மயன் நாகரிகமும் மெக்சி கோவிலுள்ள மாயன் நாகரிகமும் மிகவும் தொடர்புடையவை என்று இந்த பிரமிடுகள் மூலம் தெரிய வருகிறது.

மயன், தானவர் இனத்தைச் சார்ந்தவன். சகலகலா வல்லவன், அவன் அசுரர்களுக்கும் சிற்பி. தேவர்களுக்கும் சிற்பி. அவன் ஒரு சிறந்த கட்டிடக் கலைஞன். வாஸ்து விஞ்ஞானத்தை உருவாக்கியவன் அவன்தான். அவன் எழுதியது தான் சிற்பக்கலை நூலான மயமதம். மயமதத்தை அவன் தமிழிலும், வடமொழியிலும் எழுதினான். வடமொழி நூல் வெளிவந்துள்ளது. தமிழ் நூல் மறைந்து விட்டது. மயன் ஒரு கவிஞன். வானசாஸ்திரத்தில் அவன் வல்லவன். அவன் எழுதியது தான் சூரிய சித்தாந்தம்.

ஐந்திரம் என்ற இலக்கிய, இலக்கண நூலை எழுதியதும் அவனே. அந்த ஐந்திரம் தான் தொல்காப்பியத்தின் மூலநூல். மயனை விஸ்வகர்மாவின் மைந்தன் என்றும் கூறுவர். மயன் ராவணனின் மாமனார், மண்டோதரியின் தந்தையார். தனது மருமகன் ராவணனுக்காக மயன் பல அஸ்திரங்கள் செய்து கொடுத்ததாகக் கூறுவர். அதைத்தான் கம்பர் ‘‘மயன் படைக்கலம்” என்று ராமாயணத்தில் கூறுகிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் மயன்பறம்பு என்ற ஒரு இடம் உள்ளது.

அங்குதான் மயன் படைக்கலங்களை அதாவது, ஏவுகணைகளை உருவாக்கினான் என்றும், அதை ஆஸ்திரேலியாவில் பரிசோதனை செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது. அஸ்திரம் + ஆலயா = ஆஸ்திரேலியா ஆயிற்று. புராண காலத்தில் ஆஸ்திரேலியா ராவணன் ஆட்சியின் கீழ் இருந்தது. அண்டார்டிக்காவில் கும்பகர்ணன் இருந்தான். இலங்கை, ஆஸ்திரேலியா, அண்டார்டிக்கா யாவும் அன்று இணைந்து ஒரே நாடாக இருந்தது. இன்று மயன்பறம்பு அருகே ஏவுகணைகளை உருவாக்கி ஸ்ரீஹரிக்கோட்டாவில் பரிசோதனை செய்கிறார்கள்.

விஸ்வகர்மாவினால் உருவாக்கப்பட்ட பாதாள லோகம் சென்ற மயன் அதனை தமிழ்நாட்டுக் கட்டிடக்கலை அமைப்பில் மாற்றினான். அதன் பலன்தான் இன்று மெக்சிகோவில் காணப்படும் நினைவுச் சின்னங்கள். தமிழகத்திலுள்ள கோயில் கட்டிடக்கலை அமைப்பை மெக்சிகோவில் நாம் காணலாம். அவை இன்று வரலாற்றுச் சுவடுகளாக மெக்சிகோவில் ஆங்காங்கே காட்சி தருகின்றன. கோயில் சுவர்களில் விநாயகரும் அனுமனும் காட்சி தருகின்றனர்.

மயன் பாதாளம் சென்ற தகவலை நமது நாட்டில் மட்டுமல்ல மெக்சிகோவிலும் நம்மால் கண்டறிய முடிகிறது. நமது புராணங்களில் மகாபலி பற்றிக் கூறும் தகவல்கள் மெக்சிகோ நாட்டிலும் வழங்கப்படுகின்றன. வெகுதொலைவிலுள்ள ஒரு நாட்டின் மன்னர், ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டு, அந்நாட்டிலிருந்து துரத்தப்பட்டு பனாமா கடற்கரை வந்து சேர்ந்தார். அவர் உயரமாகவும், அழகானவராகவும், தாடி உடையவராகவும் இருந்தார் என்று கூறப்படுகிறது.

இதனை பிராங் ஜோசப் (Frank Joseph) எழுதிய இலெமூரியா நாகரிகத்தின் மறைந்த வரலாறு (The Lost Civilization of Lemuria) என்ற நூலில் காணலாம். அது மட்டுமல்ல, மகாபலி வாமனனுக்குத் தானம் வழங்கிய காட்சியும் மெக்சிகோவில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது என்பதை சமன்லால் (ChamanLal) எழுதிய கலாசாரத் தொட்டில் இந்தியா (India, the Cradle of Cultures) என்ற நூல் கூறுவதோடு, அந்த ஓவியத்தையும் வெளியிட்டுள்ளது. இன்றும் அந்த ஓவியத்தை மெக்சிகோவில் நாம் காணலாம்.

இவ்வாறு மகாபலி சென்ற பாதாள லோகத்திற்கு மயன் சென்று தனது கலை மரபுப்படி கோயில்கள், பிரமிடுகள் மற்றும் பல கலைச் சின்னங்களை படைத்தான். இதனை வாமன புராணம் கூறுகின்றது. அதுதான் இன்று மெக்சிகோவில் மாயன் நாகரிகமாக பறைசாற்றி நிற்கின்றது. மெக்சிகோ நாடு ஸ்பெயின் நாட்டவர் ஆதிக்கத்திற்கு வந்த பின்னர் மயன் உருவாக்கிய கலை சின்னங்கள் இன்று பல்வேறு இடங்களில் காட்சிப் பொருட்களாகத் திகழ்கின்றன. பல்வேறு கோயில்கள் கிறிஸ்துவ ஆலயங்களாக மாற்றப்பட்டுள்ளன.

கோயில் கட்டிடக்கலையே தமிழ் இனத்திற்கு உரியதுதான் என்பதை வரலாறு கூறுகின்றது. யாகம்தான் ஆரியர்களின் வழிபாட்டு மரபு. ரிக் வேதத்திலே கோயில் பற்றிய தகவல் இல்லை. ஆனால், தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கோயில் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆக மெக்சிகோ நாட்டிலுள்ள தொல்லியல் சின்னமான பிரமிடுகள், திராவிட நாகரிகத்தின் சின்னங்கள்தான்.

தமிழ் மட்டுமல்ல மெக்சிகோ நாட்டில் உள்ள மலைகளும், பள்ளத்தாக்குகளும், அங்கு விளையும் பொருட்களும், அங்கு வாழும் மக்களின் உடலமைப்பும், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களும், இன்றைய கேரளமான அன்றையது சேர நாட்டையும், அந்நாட்டு மக்களையும் நினைவூட்டி நிற்கின்றன. மகாபலி மற்றும் மயன் வாழ்ந்த இடம் பண்டைய சேர நாடுதான் என்றும், சேர நாட்டிலிருந்து அவர்கள் மெக்சிகோ சென்றதால்தான் இரண்டு நாடுகளுக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளன என்றும் நான் மெக்சிகோவில் செய்த கள ஆய்வின் மூலம் அறிந்தேன்.

குமரி மாவட்டத்தில் வணங்கப்படும் ‘‘காலசாமி”யையும் மெக்சிகோவில் காணப்படும் நான்கு பக்கங்களும் படிகளைக் கொண்ட பிரமிடையும் ஒப்பிட்டு நான் எழுதிய கட்டுரையைப் படித்த திருவனந்தபுரத்திலுள்ள அனைத்துலக திராவிட மொழியியல் பள்ளி நிறுவனர் டாக்டர். வ.அய்.சுப்பிரமணியனார் என்னை 2008ம் ஆண்டு மெக்சிகோவிற்கு கள ஆய்வு செய்ய அனுப்பினார்.
மெக்சிகோ நாட்டிலுள்ள சில பிரமிடுகளை அடுத்துள்ள மண்டபம் ஐந்து வாயில்களைக் கொண்டுள்ளது. இது பஞ்சபூதங்களின் வடிவமைப்புதான். இதே போன்ற 5 வாயில்களைக் கொண்டுள்ள மண்டபத்தை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நட்டாத்தியில் நாம் காணலாம். அது மட்டுமல்ல மெக்சிகோ நாட்டினர் நாம் பயன்படுத்தும் அம்மி-குழவியைப் பயன்படுத்து கின்றனர்.

பாதாள லோகம், அங்கே நாக லோகம் என்று அழைக்கப்பட்டது. மெக்சிகோவில் வாழ்ந்த பண்டைய மக்கள் நாகப் பாம்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமல்ல, நாகத்தை தெய்வமாக வணங்கினர் என்பதை அருங்காட்சியகப் பொருட்கள் மூலம் நாம் அறியலாம். அதே போன்று காது வடித்தல், கொண்டை கட்டுதல், தலை பின்னி பூச்சூடுதல் ஆகிய பழக்கங்கள் மெக்சிகோ நாட்டு பெண்களிடம் உள்ளன. காது வடிக்கும் மரபு அங்கே பெண்களிடையே மட்டுமல்ல ஆண்களிடமும் இருந்தது.

மாயன் உருவாக்கிய வட்ட வடிவ காலண்டரின் நடுவே ஓம் என்ற தமிழ் மந்திரம் அப்படியே இடம் பெற்றுள்ளது. மயன் எழுதிய பிரணவ வேதத்திற்கு ஓம் மறை என்ற ஒரு பெயரும் உண்டு. இதற்கு மெக்சிகோ மாயன் காலண்டரின் அட்டை சான்றாக அமைகிறது. பத்மாசனம் மட்டுமல்ல மிகவும் நுணுக்கமான கண்டபேரண்ட ஆசனத்தை மெக்சிகோ அருங்காட்சியகத்தில் நான் கண்டேன். ஆக மெக்சிகோ நாட்டின் மாயன் நாகரிகம் தமிழ்நாட்டின் மயன் நாகரிகத்தின் மறுவடிவம்தான் என்பதை கள ஆய்வின் மூலம் என்னால் கண்டறிய முடிந்தது.

டாக்டர் எஸ்.பத்மனாபன், கன்னியாகுமரியிலுள்ள சரித்திர மற்றும் கலாசார ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றுகிறார். தமிழ் மற்றும் தமிழகத்தின் வேர்கள் உலகின் எந்தெந்த பகுதிகளிலெல்லாம் பரவியிருந்தது என்ற இவரது ஆராய்ச்சி முடிவுகள் பிரமிக்க வைக்கின்றன.இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தேவ சிற்பியாகப் போற்றப்படும் மயனின் தொழில் நுணுக்கங்களும், கட்டிட அமைப்புகளும் மெக்சிகோ நாட்டில் ‘மாயன்’ கலாசாரமாகப் பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருப்பதை, அந்நாட்டில் கிடைத்த பல சான்றுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக பல நாடுகளுக்குச் சென்றிருக்கும் பத்மனாபன், அந்த சந்தர்ப்பங்களைத் தன் ஆராய்ச்சிக்கு ஆத்மார்த்தமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். 2008ம் ஆண்டு மெக்சிகோ சென்று அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் ஆச்சரியமூட்டும் முடிவுகளை விளக்கும் கட்டுரை இது.