அட, அப்படியா!



*ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்”டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் இதே பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

*பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது! இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் இந்த வெண்ணெய் உருகுவதில்லை.

*தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

*ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழுதலங்களில் அருள்புரிகிறார்: 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம்,7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

*காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்” என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

*மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

*கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

- கலைவாணி