செந்தூர் முருகா செந்திலாண்டவா



திருச்செந்தூர் முருகன் கோயில்

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் ஆலயத்தில் பணியாற்றியவர் வென்றிமாலை. இவருக்கு கோயில் நிர்வாகம், ஏதோ காரணத்துக்காக தண்டனை வழங்கியது. அவமானத்தால் மனம் வருந்திய வென்றிமாலை கடலில் குதித்து உயிர் போக்கிக்கொள்ள முயற்சித்தார். ஆனால் முருகனருளால் முயற்சி தோற்று, அவர் உயிர்பிழைத்தார். அந்த அற்புதத்தின் தொடர்ச்சியாக, கல்வியறிவே இல்லாத வென்றிமாலையை முருகப்பெருமான் பெருங்கவிஞராக உருமாற்றினார்.

வென்றிமாலை திருச்செந்தூர் ஸ்தல புராணம் இயற்றிப் பெரும் புகழ் ஈட்டினார். முத்தாலங்குறிச்சி கிராமத்தில் வாழ்ந்த கந்தசாமி புலவர் பார்வையற்றவர்;  ஆனாலும் முருகன்மீது முழுமையான மனப்பார்வையைச் செலுத்தியவர். இவர், இங்கே முத்தாலங்குறிச்சியில் முருகனைப் போற்றி பாடினால், அங்கே திருச்செந்தூரிலுள்ள முருகன் பரிவட்டத்தில் எச்சில்கறை காணப்படுமாம்! இந்தப் புலவருக்குப் பார்வையளித்தும் திருவருள் புரிந்திருக்கிறான் செந்தில்வேலன்.  இவரைப்போலவே நெட்டூர் அப்பராணந்த சுவாமிகள், குலசேகரப்பட்டினம் ஞானியார் சுவாமிகள், கோயிலில் சமாதி கொண்டிருக்கும் காசி சுவாமிகள்,

மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுக சுவாமிகள் என பல அன்பர்களுக்குத் தன் திருவருள் பேரின்பத்தை அருளியிருக்கிறான் இந்த கருணை பாலன். திருச்செந்தூரைப் பொறுத்தவரை விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உதய மார்த்தாண்டம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம், ஏகாந்த கால பூஜைகளும் அதே சிறப்போடு நடைபெறுகின்றன. மூலவருக்கு போத்திமார்கள் கேரள முறைப்படியும், வைதீக தாந்திரீக முறைப்படியும், ஷண்முகருக்கு குமாரதந்திர விதிப்படியும் பூஜை  செய்கிறார்கள்.

இலை விபூதி பிரசாதம்

திருச்செந்தூர் கோயிலின் பிரதான பிரசாதமாக இலை விபூதி கருதப்படுகிறது. இது வெறும் பிரசாதமல்ல, நோய் தீர்க்கும் அருமருந்து! இந்த பிரசாதம் எப்படித் தயாரிக்கப்படுகிறது? பன்னீர் மரத்திலிருந்து இலைகளைத் தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்துக் கொடுப்பார்கள். இந்த இலை ஒவ்வொன்றும் பன்னிரண்டு நரம்புகள் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது - ஆறுமுகன் தன் பன்னிரு கரங்களால் பேரருள் புரிவதை விளக்கும் வகையில்! இதை ஏற்கெனவே தயார் செய்து கட்டுக் கட்டாக ஸ்டாக் வைத்திருப்பார்கள். ஆதிசங்கரரின் காசநோயை குணப்படுத்திய அருமருந்தல்லவா, இந்த விபூதி! அதேபோல பக்தர்கள் அனைவரது எல்லாவகை நோய்களையும் தீர்க்கவல்லது என்பது ஆழமான நம்பிக்கை.

சஷ்டி விழா

ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்த ஆறாம் நாள், முருகன் சூரனை வென்ற திருநாள். இந்நாள் இன்றளவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதே நாளில் அன்று முருகப்பெருமான் ஆற்றிய அருஞ்செயல்கள் பக்தர்களால் நடித்துக் காட்டப்படுகின்றன. கடற்கரையில் நடைபெறும் சூரபத்மன் வதம் ஆயிரக்கணக்கான பக்தர்களால் கண்டு களிக்கப்படுகிறது. இவர்களில் வெளி மாவட்ட, மாநில, நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்து, கண்டு, முருகனருள் பெறுகிறார்கள்.

காவடி

விசேஷ காலங்களில் பால்காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, சர்க்கரைக் காவடி, சாம்பிராணிக் காவடி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி ஆகியவற்றைத் தாங்கி வரும் பக்தர்கள் மிக அதிகம். தம்மைப் பெரிதும் வருத்திக்கொண்டு இக்கோயிலை நாடி வரும் பக்தர்களின் பக்தி நம்மைத் திகைக்க வைக்கிறது. ராஜபாளையம், பாபநாசம் போன்ற பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும், விரதம் இருந்தும்,

காலணி ஏதுமின்றி, வெயில், தரைச்சூடு என்று பார்க்காமல், அதேசமயம் உடல் வேதனையை முகத்தில் காட்டாமலும், வாய் மட்டும், ‘முருகா, முருகா’ என்று ஓயாமல் அரற்றிக்கொண்டும் வரும் பக்தர்கள் பார்ப்பவர்களை கண்களில் நீர்த் துளிர்க்க வைப்பார்கள். இவர்களைப் போலவே கோயிலைச் சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்யும் பக்தர்களும் எண்ணிலடங்காதவர்கள்.

தினசரி வழிபாட்டு நேரங்கள்

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒன்பது கால பூஜைகள் நடைபெறுகின்றன. (மார்கழியில் மட்டும் 10 கால பூஜைகள்.)

காலை 5.10 மணி - சுப்ரபாதம்-திருப்பள்ளி எழுச்சி,
5.30 மணி - விசுவரூப தரிசனம்,
5.45 மணி - த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) நமஸ்காரம்
6.15 மணி - உதயமார்த்தாண்ட அபிஷேகம்
7.00 மணி  உதயமார்த்தாண்ட தீபாராதனை  
8.00 முதல் 8.30வரை கால சந்தி பூஜை  
10.00 மணி - கலச பூஜை
10.30 மணி  உச்சிகால அபிஷேகம்
12.00 மணி  உச்சிகால தீபாராதனை
மாலை 5 மணி - சாயரட்சை பூஜை
இரவு 7.15 மணி - அர்த்தசாம அபிஷேகம்
8.15 மணி - அர்த்தசாம பூஜை
8.30 மணி  ஏகாந்த சேவை
8.45 மணி  ரகசிய தீபாராதனை, பள்ளியறை பூஜை
9.00 மணி  நடை திருக்காப்பிடல்

(உரிய கட்டணம் செலுத்தி இந்த ஆராதனைகளில் பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள் தினமும் அதிகாலை 5.00 முதல் இரவு 9.00 மணிவரை தொடர்ந்து திருக்கோயில் திறந்திருக்கும். கந்தசஷ்டி, ஜனவரி 1, தைப்பொங்கல், வைகாசி விசாகம், ஆவணி மற்றும் மாசி ஒன்று மற்றும் ஏழாம் திருவிழா நாட்களில் நள்ளிரவு ஒரு மணிக்கே நடை திறந்துவிடுவார்கள். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். அந்த நாட்களில் பூஜை காலங்கள் மாறும்.

மாதச் சிறப்பு வழிபாடுகள்

விசாக நட்சத்திர நாளன்று ஷண்முகப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். சஷ்டி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும். கார்த்திகையன்று ஜெயந்திநாதருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் மாலை திருவிளக்குப் பூஜை வழிபாட்டுடன் இரவு தங்கரதப் புறப்பாடும் உண்டு. தமிழ் மாதந்தோறும் முதல்நாள், சிறப்பு வழிபாடு நடைபெறும். மாதாந்திர வெள்ளி என்னும் தமிழ் மாதக்கடைசி வெள்ளியன்று சிறப்பு வழிபாடும்,

கிரிப்பிராகார சுவாமி புறப்பாடும் உண்டு. சித்திரை முதல்நாள், விஷு புண்ணியகாலத்தில் அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஐப்பசி மாத முதல்நாள் அன்னாபிஷேகமும் சிறப்பு வழிபாடும் மேற்கொள்ளப்படுகின்றன. பங்குனி உத்திரம் அன்று வள்ளி திருக்கல்யாணம் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
 
ஆண்டுத் திருவிழாக்கள்

ஆண்டுதோறும் ஆவணி, மாசி மாதங்களில் இரு பெருந்திருவிழாக்கள் 12 நாட்களுக்கு நடைபெறும். இந்தத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று மாலை குமரவிடங்கப் பெருமான், வள்ளி-தெய்வானையோடு சிவன் கோவிலில் எழுந்தருள்வார். அதேநேரத்தில் சிவன் கோவிலின் நேர் எதிராக கீழரதவீதியில் ஜெயந்திநாதரும் எழுந்தருள்வார். இருவருக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும். இதனை குடவருவாயில் தீபாராதனை என அழைப்பார்கள்.

சிவப்புச் சாத்தி ; ஏழாம் திருநாள் காலையில் ஷண்முகரே மக்களுக்குக் காட்சிதர வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருள்வார். பின்னர் மாலையில் சிவப்புப் பட்டாடைகளாலும், சிவப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதிவலம் வருவார். அப்போது முன்புறம் முருகப்பெருமானாகவும், பின்புறம் நடராஜர் கோலத்திலும் அவர் காட்சி அளிப்பது வித்தியாசமானது, பிரமிப்பூட்டுவது! முன்னும், பின்னும், தந்தையையும், தனயனையும் தரிசிக்க உள்ளம் பூரிக்கும்.

வெள்ளை சாத்தி: எட்டாம் திருநாள் அதிகாலையில் வெள்ளை சாத்தி, ஷண்முகர் எழுந்தருளுகிறார். வெண்ணிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழில்பொங்கக் காட்சியளிக்கிறார் திருச்செந்தூரான்.

பச்சை சாத்தி: இது, அதே எட்டாம் திருநாள் மாலையில் வேலவன் பூண்டிருக்கும் திருக்கோலம். பச்சைப் பட்டுகளாலும், பச்சை மரிக்கொழுந்து மாலைகளாலும், அலங்காரம் செய்யப்பட்டு, பச்சைக் கடைசல் சப்பரத்தில் பக்தர்களுக்கு பேரருள்பாலிக்கிறார். பின்னர் இரவில் ஆனந்த விலாசத்தைச் சென்றடைந்து அங்கிருந்து திருக்கோயிலில் தன் இருப்பிடத்திற்குச் செல்கிறார். 10ம் நாளன்று தேரோட்டம்; 11ம் நாளன்று தெப்பத்திருவிழா.

ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா

கந்த சஷ்டி விழா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு அடுத்த நாள், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யாகசாலையில் தொடங்குகிறது. ஐந்தாம் நாள் திருவிழாவரை காலை, இரவு இரு நேரங்களிலும் யாகசாலை பூஜை நடைபெறும். சுப்பிரமணிய சுவாமி, ஜெயந்திநாதர் திருக்கோலத்துடன் யாகசாலைக்கு எழுந்தருள்வார். மாலை நேரத்தில் தங்க ரதத்தில் கிரி வீதி உலா வருகிறார். ஆறாம் நாள், அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நள்ளிரவு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.

பின்னர் 6.30 மணியளவில் யாகசாலை பூஜை நடைபெறும். தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருள்வார். மேள வாத்தியங்கள் கோயிலே அதிர முழங்கும். ஆறு விளக்கு தீபாராதனை முடிந்தபின்பு ஜெயந்திநாதர் கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்வார். மதியம் 1.30 மணியளவில் சூரபத்மன், திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் பந்தல் மண்டபத்தின் அருகிலிருக்கும் சிவக் கொழுந்தீஸ்வரர் கோயிலிலிருந்து புறப்படுவான். தனது படைகளோடு சேர்ந்து உள்மாடவீதி மற்றும் நான்கு ரதவீதிகள் சுற்றிவந்து சந்நதித் தெருவுக்கு வருவான்.

பின்னர் கிரி பிராகாரம் வழியாக 2.30 மணிக்குக் கடற்கரைக்கு வருவான். கந்த சஷ்டி மண்டபத்தில் தங்கியிருக்கும் ஜெயந்திநாதர் 4 மணியளவில் சூரனை வதம் செய்வதற்காக கடற்கரைக்குப் புறப்படுவார். அப்போது மேள, தாளங்கள் ஒலிக்கும். பஞ்ச வாத்தியங்கள் முழங்கும். திரிசுதந்திரங்கள் வேத பாதமந்திரம் பாடுவார்கள். பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகா, வீரவேல் முருகா’ என கோஷமிடுவார்கள். சூரபத்மன் ஜெயந்திநாதரை மூன்றுமுறை வலப்புறமாகவும், இடப்புறமாகவும் சுற்றி வருவான்.

பிறகு, யானையாகவும், சிங்கமாகவும், வேறு பல வடிவமாகவும் உருமாறி அவருடன் போரிடுவான். அந்த எல்லா வடிவங்களையும் ஜெயந்தி நாதர் அடுத்தடுத்து சம்ஹாரம் செய்வார். முடிவில் சூரபத்மன் தனது உண்மையான வடிவத்துடன் வந்து போரிட, தனது கூரிய வேலால் அவனை ஜெயந்திநாதர் வதம் செய்வார். அவனை இரு கூறுகளாகப் பிளந்து, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி ஆட்கொள்வார். சூரசம்ஹாரம் முடிந்தபின் ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து ஜெயந்திநாதரை பக்தர்கள் வழிபடுவார்கள்.

ஒருநாள் விழாக்கள்

வைகாசி மாதம் முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திர நாள், கார்த்திகை மாதம் திருக்கார்த்திகைத் திருநாள், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள், தை மாத பூச நட்சத்திர நாள் என்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன அதேபோல முருகப்பெருமான் வள்ளியைத் திருமணம் செய்த பங்குனி உத்திர நாளிலும், தெய்வானையை திருமணம் செய்த கந்த சஷ்டிக்கு அடுத்த நாளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

வெள்ளை யானை வீதி உலா

ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமானுக்கு கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதனை நினைவுகூறும் வகையில், ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று (21.07.2018) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடந்தன. மாலையில் கோயில் யானையான தெய்வானையின் உடல் முழுவதும் திருநீறு பூசி, வெள்ளை நிறத்தில் காட்சி அளித்தது.

இந்தயானையும், 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும் கோயிலில் இருந்து புறப்பட்டு, சந்நதி தெரு வழியாக உள்மாட வீதி மற்றும் ரத வீதிகளில் உலா வந்து மீண்டும் கோயிலை சென்றடைந்தனர். பின்னர் கோயில் உள்பிராகாரத்தில் 108 மகாதேவர் சந்நதியிலிருந்து வெள்ளைநிற யானை முன் செல்ல, சேரமான் பெருமானும், மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி, யானையின் பின்னால் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். கந்த சஷ்டி விரதத்தை எப்படி மேற்கொள்வது? ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி முதல் நாளிலிருந்தே விரதத்தை ஆரம்பிக்கலாம்.

ஆறாம் நாள், சூரசம்ஹார தினத்தன்று விரதத்தை முடித்துவிடலாம். ஆறுமுகனுக்காக ஆறுநாள் விரதம்! அந்த ஆறு நாட்களும் ஆறுமுகனைத் துதித்து உபவாசம் மேற்கொள்வது வழக்கம். முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பால், பழம் மட்டும் உட்கொண்டு, ஆறாம் நாள் முழு உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள்  சூரசம்ஹாரம் அன்றாவது முழு உபவாசம் இருப்பார்கள். ஆனால், கந்த சஷ்டி ஆரம்பிக்கும் நாளிலிருந்து அதாவது, வளர்பிறை பிரதமை திதியிலிருந்து தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தலைக்குக் குளித்துவிட்டு முருகன் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருப்பது நல்லது.

இந்த ஆறு நாட்களும் தினமும் பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலுக்குப் போய் வரலாம். தினமும் வீட்டு பூஜையறையில் முடிந்த உணவுப் பொருட்களை முருகனுக்கு நைவேத்யமாகப் படைக்கலாம். அதேபோல் பக்கத்து முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முருகன் அருளைப் பெறலாம்...’வீட்டிலிருந்தபடியே இந்த ஆறு நாட்களும் தினமும் அதிகாலையில் குளித்து முடித்தபிறகு பூஜையறையில் அறு கோண கோலம் வரைந்து, ஒவ்வொரு முனையிலேயும் ‘ச-ர-வ-ண-ப-வ’ என சடாட்சர மந்திர எழுத்துகளை எழுதி பிரார்த்தனை செய்யலாம்.

முக்கியமாக, குழந்தை வரம் வேண்டும் பெண்கள் சஷ்டி விரதத்தை மேற்கொண்டு அந்த பாக்கியத்தைப் பெறுகிறார்கள். ‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற சொலவடை இந்த விரதத்திலிருந்து ஏற்பட்டதுதான். ஆமாம், சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் கரு வளரும் என்று பொருள். எல்லாவற்றையும் விட முக்கியமாக, மழலைப் பேறு கிட்டியதும், மீண்டும் அடுத்த சஷ்டி காலத்தில் உபவாசம் இருந்து முருகனுக்கு நன்றி தெரிவிக்க மறக்கக்கூடாது!  தம்பதி சமேதராக இந்த விரதத்தைக் கடைபிடிப்பதும் வாழ்வில் வளம் கூட்டும்.

சுனாமியும் திருச்செந்தூர் முருகனும்

2004ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று சுனாமி எனும் ஆழிப்பேரலை உருவாகியது. தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் கடலான வங்காள விரிகுடா பொங்கியெழுந்து வீரபாண்டியன் பட்டணம், அமலிநகர், மணப்பாடு, பெரிய தாழை, கூடுதாழை, கூட்டப்பனை, இடிந்தகரை, உவரி, பெருமணல் மற்றும் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

ஆனால் கடலை ஒட்டி இருக்கின்ற திருச்செந்தூர் முருகன் கோயிலை சுனாமி வெள்ளம் நெருங்கவில்லை. பிற பகுதிகளில் கடல் அலை கடற்கரை நிலங்களை ஆக்கிரமித்தபோது, திருச்செந்தூரில் மட்டும் கடல் அலை 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிச் சென்றது! இது திருச்செந்தூரானின் பேரருளன்றி வேறென்ன? பொங்கிவந்த சுனாமியும் அடங்கித் திரும்பியது என்றால் இந்தத் தலத்தின் தெய்வம்சம்தான் எத்தகையது! இந்த அற்புதத்துக்கு திருச்செந்தூர் திருப்புகழில் விளக்கம் இருக்கிறது:  

“மலை மாவு சிந்த அலை வேலை யஞ்ச
வடிவேலெ றிந்த அதி தீரா
அறிவாலறிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல்களைவோனே
அழகான செம்பொன் மயில் மேல மர்ந்து
அலைவாயு கந்தபெருமானே.

‘சூரபத்மன் மலை போன்ற மாமரமாகக் கடலுக்கடியில் மறைகிறான். அப்போது முருகப்பெருமான், கடல் நீர் பயந்து பதுங்கி ஓடும்படியாக வடிவேலை எறிந்து, மாமரமாக இருக்கும் சூரனை இரு கூறுகளாக்கி, சேவலாகவும் மயிலாகவும் மாற்றினார்,’ என்பது இதன் பொருளாகும்.

ஆனந்தம் அருளும் திருச்செந்தூர் கோபுர தரிசனம்

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வருபவர்கள் வீரபாண்டிய பட்டணத்தின் அருகிலிருந்து இந்தக் கோபுரத்தை தரிசிக்கலாம். திருநெல்வேலியிலிருந்து வருபவர்களுக்கு குமாரபுரம் அருகிலேயே தரிசனம் கிட்டும். உவரியிலிருந்து கடற்கரைச் சாலையோரமாக வருபவர்கள் ஆலந்தலை என்ற ஊரைக் கடந்து வரும்போதே காணலாம். வள்ளியூரிலிருந்து சாத்தான்குளம் வழியாக வருபவர்கள் நாலுமூலைக்கிணறு என்னும் ஊரைக் கடந்ததுமே கண்டு களிப்பெய்தலாம். 137 அடி உயரத்தில் எழில் கொஞ்சும் அழகிய வேலைப்பாடுகளுடனும் நிமிர்ந்து நிற்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

கீழ் மட்டத்தில் தெற்கு வடக்காக 90 அடி நீளமும், கிழக்கு மேற்காக 60 அடி அகலமும் உள்ளது. மேல் பகுதியில் கோபுரத்தின் நீளம் 49 அடி, அகலம் 20 அடி. பொதுவாகவே ஒரு கோயிலில் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் அமைத்தால், நுழைவாயில் கிழக்குப் பகுதியாக அமைவதே மரபு. ஆனால் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் அவர் கிழக்கு நோக்கி நின்றிருந்தாலும் (கிழக்குப் பிராகாரத்தில் ஒரு பெரிய துவாரம் வழியாக முருகனை தரிசிக்கலாம்), மேற்குப் பகுதியில்தான் மேலே குறிப்பிட்ட கோபுரம் அமைந்துள்ளது.  

ஆனால், இந்தக் கோபுர நுழைவாயிலும் அடைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் என்ன? பொதுவாக கோபுர நுழைவாயிலின் வழியாக உள்ளே செல்லும்போது நேர் எதிரே கருவறை தெரியவேண்டும். ஆனால் முருகப்பெருமான் கிழக்கு நோக்கியிருப்பதால் கர்ப்பக்கிரகத்தின் பின்புறமே தெரிகிறது. அதோடு நேராக விநாயகர் சந்நதி அமைந்துள்ளது. பால்குடம், காவடி போன்ற காணிக்கைகளைச் செலுத்த வரும் பக்தர்கள் இந்த வழியாகச் சென்றால் 27 படிகள் இறங்கவேண்டும். இதனால்தான் இந்தக் கோபுர நுழைவாயில் அடைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

தங்கும் விடுதிகள் விவரம்

திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகள்:

1. செந்திலாண்டவன் விடுதி - 80 அறைகள்
2. வேலவன் விடுதி - 73 அறைகள்
3. ஜெயந்திநாதர் விடுதி - 114 அறைகள்
4. ஆறுமுக விலாஸ் விடுதி - 6 அறைகள்
5. பாதி நன்கொடைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடில்கள் - 63 அறைகள்
6. சண்முக விலாசம் அறைகள் - 24 அறைகள்
7. தேவர் குடில் (குளிர்சாதன வசதிகளுடன்) - 2 அறைகள்
8. வேலய்யா குடில் 2 அறைகள்
9. கந்தசஷ்டி விரத மண்டபம் பெட்டக (லாக்கர்) வசதிகளுடன் (உணவருந்த இலவச அனுமதி - விசேட நாட்கள் தவிர) - 73 லாக்கர்கள்
10. திருமண மண்டபம் - 1
11. தெய்வானை இல்லம் (பெண்கள் உடை மாற்றும் கூடம், அனுமதி இலவசம்)
12. சிறப்புக் குடில் - 10 குடில்கள்
13. ராம்கோ 7ஏ, 8பி - 2 குடில்கள்

இந்த விடுதிகளில் தங்க விரும்புபவர்கள் முன்னதாகவே பதிவு செய்து கொள்வது சிறந்தது. திருவிழாக் காலங்களுக்கு இந்தக் கட்டண விகிதங்கள் பொருந்தாது; மாறுதலுக்கு உட்பட்டது.

தொடர்பு முகவரி

திருக்கோயிலுடன் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள்:
1. அலுவலகம் 04369-242221 இணை ஆணையர், செயல் அலுவலர்  அலுவலகம்
2. தகவல் நிலையம் 04369-242271 குடில்கள், அறைகள், விடுதிகள், பதிவு செய்யுமிடம்
3. திருக்கோயில் 04369-242270 பூஜைகள், கட்டளைகள், அர்ச்சனைகள், தங்கரதம்

இணையதள முகவரி: www.tiruchendurmurugantemple.tnhrce.in திருக்கோயில் மூலம் (பதிவு அர்ச்சனை) மாதந்தோறும் பக்தர்கள் விரும்பும் நட்சத்திரங்களில் அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்து பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பதற்கு ஆண்டுக்கு ரூ. 200 செலுத்த வேண்டும். திருக்கோயிலுக்கு நன்கொடைகள், காணிக்கை மற்றும் இதர கட்டண வகைகளுக்கு காசோலை மற்றும் வரைவோலை அனுப்ப விரும்புவோர், இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்-62821 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

- முத்தாலங்குறிச்சி காமராசு பரமகுமார், சுடலை மணி செல்வன்