வேங்கையின் உருவமாகி நின்ற வேற்படை வீரன்!



அருணகிரி உலா - (59)

அருணகிரியாரின் அழகிய கந்தர் அந்தாதிச் செய்யுளைப் பாராயணம் செய்தவாறு சீகாழி நகரை விட்டுப் புறப்படுகிறோம்:

‘‘செல் வந்தி கழுமலம் நெஞ்சமே அவன் தெய்வ மின் ஊர்
செல் வந்து இகழும் நமது இன்மை தீர்க்கும், வெம் கூற்றுவர்க்குச்
செல் வந்தி கழும் திருக்கையில் வேல், தினைகாத்த செல்வி,
செல்வம் திகழும் மணவாளன் நல்கும்
திருவடியே.’’

மனமே, குமாரக் கடவுள் முன்பு சம்பந்தராக அவதரித்தருளிய சீகாழிப்பதிக்குச் சென்று அவரை வணங்குவாயாக; அவரது தெய்வழனையின் வாகனமாகிய மேகம் நமது வறுமையைப் போக்கும்; அவனது வேலாயுதம் நமக்கு வரும் யம தண்டனையை நீக்கிவிடும்; தினைப்புனம் காவல் காத்த வள்ளி நாயகியின் மணாளனாகப் பிரகாசிக்கும் கந்தசுவாமியானவர், தம் திருவடித் தாமரையை நமக்குத் தந்தருள்வார் (எனவே நீ சீகாழி செல்வாயாக!) சீகாழிக்கு மேற்கே ஆறு கி.மீ. தொலைவிலுள்ள கொண்டல் எனும் தலத்தில் அருணகிரியார் திருப்புகழ் பாடியது பற்றிக் கேள்விப்பட்டு அங்கே செல்கிறோம்.

மிகச்சிறிய, அழகான, தனி முருகன் கோயில் நம்மை ‘வா’ என்றழைக்கிறது. கரியவனகர் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. பிரம்மனைக் குட்டிச் சிறையிலிட்ட முருகப்பெருமானிடம், அவரை விடுவிக்குமாறு திருமாலும் சிவனும் கேட்டுக் கொண்ட தலம் இது என்று கூறுவர். கரியவன் = திருமால்; கொண்டல் = மேக நிறவானாகிய திருமால். இவ்விரண்டும் ஊர்ப் பெயருக்குக் காரணங்களாம். கொண்டல் முருகன் கோயில் கீழ்ப்பழநி என்றும் கூறப்படுகிறது. வள்ளி, தெய்வானையுடன் ஒருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு நின்ற கோலத்தில் முருகன் காட்சி அளிக்கிறான். உற்சவரும் அதேபோன்றே உள்ளார்.

கருவறை வாயிலின் இருபுறங்களிலும் சிறு விநாயகர் வடிவங்கள் உள்ளன. இறைவன் தாரக பரமேஸ்வரர். இறைவி சந்நதி இல்லை. பிராகார வலம் வரும்போது மூன்று இளம் சிறுவர்கள் கோயிலில் உழவாரப் பணி செய்துகொண்டிருந்தது கண்டு மனம் மிகவும் பெருமிதமுற்றது. அப்பரும் சுந்தரரும் இத்தலத்தை வைப்புத் தலமாகக் கொண்டு பாடியுள்ளனர். சண்டிகேஸ்வரர், திருமால், இடும்பன், விநாயகர் ஆகியோரைத் தரிசித்து வலம் வந்து முருகனுக்குத் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்:

‘‘நெளிபடு களமுற்றாறு போற் சுழல்
குருதியில் முழுகிக் பேய்கள் கூப்பிட
நிணமது பருகிப் பாறு காக்கைகள் கழுகாட
நிரைநிரையணியிட்டோரி யார்த்திட
அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய
நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு பொரும் வீரா
களிமயில் தனில் புக்கேறு தாட்டிக!
அழகிய கனகத்தாம மார்த் தொளிர்
கனகிரி புய முத்தாரமேற்றருள் திருமார்பா!
கரியவனகரில் தேவ! பார்ப்பதி
அருள் சுத! குறநற்பாவை தாட்பணி
கருணைய! தமிழிற் பாடல் கேட்டருள்
பெருமாளே!’’

சுழற்சியுறும் போர்க்களத்தில் சேர்ந்து, அங்கே ஆறுபோலச் சுழன்றோடும் ரத்தத்தில் முழுகிப் பேய்கள் கூச்சலிட மாமிசத்தை உண்டு பருந்துகளும், காக்கைகளும், கழுகுகளும் விளையாட, கூட்டம் கூட்டமாக, வரிசையாக நின்ற நரிகள் (ஓரி) ஆரவாரம் செய்ய இவ்வாறு அதிர்ச்சியுறும் போரில் சேனைகளைக் கூட்டி வந்த அசுரர்கள் இறக்கும்படிச் சங்காரம் செயும் வேல் கொண்டு போர் செய்த வீரனே!

‘‘நரி நாய் பேய் பாறொடு கழுக்கள் கூகைதாமிவை
  புசிப்பதான பாழுடல் எடுத்து வீணில்
உழல்வேனோ’’;
  ‘‘நரிகள் கங்கு காகம் இவை தின்ப
தொழியாதே’ - திருப்புகழ்

கர்வமுடைய மயில்மேல் புகுந்து ஏறும் பலசாலியே! (தாட்டிக) அழகிய பொன்மலை நிறைந்து விளங்கும் பொன்மலையாம் மேரு போன்ற புயங்களை உடையவனே! முத்துமாலை அணிந்துள்ள அழகிய மார்பனே!

‘‘தண்தரள மணிமார்ப!’’ - திருப்புகழ்

கரியவனகர் எனும் தலத்தில் வீற்றிருக்கும் தேவனே, பார்வதி பாலனே! நல்ல குறப்பெண்ணாம் வள்ளியின் தாளைப் பணிகின்ற கருணாமூர்த்தியே! (‘‘பணி யா என வள்ளி பதம் பணியும் தணியா அதி மோக தயாபரனே!’’ - கந்தர் அநுபூதி) தமிழ்ப்பாடல் கேட்டருளும் பெருமையனே! கொண்டல் முருகனின் அழகைக் கண்டு வியந்த வண்ணம், வாகை நகரை நோக்கிச் செல்லுகிறோம். இத்தலம், தேவாரத்தில் வாழ்கொளிப்புத்தூர் என்றும், தலபுராணத்தில் வாளொளிப்புற்றூர் என்றும், மக்கள் வழக்கில் திருவாளப்புத்தூர் என்றும் குறி்ப்பிடப்படுகிறது. தலபுராணம் எழுதியுள்ள திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாகை மாநகர் என்றும் கூறுகிறார்.

வைத்தீசுவரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையிலுள்ளது இத்திருத்தலம். இறைவன் மாணிக்கவண்ணர் என்றும் ரத்னபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வண்டார் குழலி (பிரமர குந்தளாம்பிகை) நீர் வேட்கை மிகுந்த ஒரு நேரத்தில் இங்கு வந்த அர்ஜுனனிடம் இறைவன் முதியவர் உருவில் வந்து ஒரு கதையைத் தந்து, வாகை மரம் ஒன்றினடியில் அதை ஊன்றி அங்கிருந்து வெளிப்படும் நீரைப் பருகும்படிச் சொன்னார். அர்ஜுனன் தன் கையிலிருந்த வாளை இறைவனிடம் கொடுத்துவிட்டு, தான் நீர் பருகி விட்டு வரும்வரை அதைப் பாதுகாக்குமாறு கூறிச் சென்றான். இறைவன் அவ்வாளை ஒரு புற்றில் ஒளித்து வைத்துவிட்டு மறைந்து விட்டார். இதனால் இத்தலம் வாளொளி புற்றூர் என்றாயிற்று.

 ‘‘வாசுகி எனும் மகாநாகம் இத்தலத்தை அடைந்து சிவபெருமானை வழிபட்டு அவருக்கு ஆபரணமாகும் பேறு பெற்றது. அப்பாம்பு ஒரு புற்றில் உறைந்தமையால் புற்றூர் என்று முதலில் ஒரு பெயர் உண்டாயிற்று’’ என்பது உ.வே.சா. அவர்களின் கருத்து. கிழக்குப் பார்த்த திருக்கோயில், முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் தல விருட்சமான வாகை மரத்தைக் காணலாம். உட்பிராகாரத்தில் விநாயகர், சுப்ரமண்யர், கஜலட்சுமி, சரஸ்வதி, பைரவர், சந்திரன், நால்வர், நடராஜர் ஆகியோரைத் தரிசிக்கலாம். கருவறையில் சற்று உயர்ந்த பாணத்துடன் மூலவரின் லிங்கத் திருமேனியைக் காணலாம். பிராகார வலம் வரும்போது முருகப் பெருமானைத் தரிசித்து தலத்திருப்புகழை அர்ப்பணிக்கிறோம்

‘‘வேலையாக வளைக்கை வேடர் பாவை தனக்கு மீறு காதலளிக்கு முகமாய
மேவு வேடையளித்து நீடு கோலமளித்து
மீள வாய்மை தெளித்தும் இதன்மீது
மாலையோதி முடித்து மாது தாள்கள் பிடித்து
வாயிலூறல் குடித்து மயில் தீர
வாகுதோளிலணைத்து மாகமார் பொழிலுற்ற
வாகை மாநகர் பற்று பெருமானே’’

(நீடு கோலம் அளித்து - வேட்டுவக் கோலம் வளைச் செட்டிக் கோலம், வேங்கைமரக் கோலம், தவக்கிழவர் கோலம் முதலானவை. ‘‘செட்டி வடிவைக் கொடு தினைப்புனமதிற் சிறு குறப்பெண் அமளிக்கு மகிழ் செட்டி’’ - திருப்புகழ்; ‘‘வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்’’ - கந்த புராணம்; ‘‘குறமகள் பாதம் வருடிய மணவாளா’’ - திருப்புகழ்) வள்ளியிடம் வாய்மை தெளித்தது: ‘‘நீ முற்பிறப்பில் திருமாலின் மகள், எம்மை அடைய வேண்டி தவஞ்செய்தாய்; அதனால் இன்று உனை அடைந்தேன்’’ என முருகவேள் வள்ளிக்கு விளக்கினார்.

(ரூ.500/-க்கு மேல் உபயம் அளித்தவர் பட்டியல் எழுதப்பட்டிருப்பது கண்டு மனம் வருந்தியது. இறைவன் நமக்குத் தந்ததை அவனுக்கே திருப்பித் தருவதில் கூடவா விளம்பரம்!) (திருவண்ணாமலையில் வல்லாள கோபுரத்தின்கீழே ‘டியூப் லைட் உபயம் - இன்னார்’ என்று எழுதப்பட்டு, வெளிச்சம் வெகுவாக மறைக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. பக்தர்கள், குறிப்பாக உபயதாரர்கள் இதுபற்றிச் சற்று சிந்திக்க வேண்டும்.) மரத்தடியில் விநாயகரையும் அஷ்ட நாகங்களையும் தரிசிக்கிறோம். பிராகாரத்தில் நிறைய குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

மாலை 4.30 மணி. குருக்கள் இருக்கவில்லை. தரையில் நெல் உலர்த்தப்பட்டிருந்தது; ஏராளமான அரிசி மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. (இவையனைத்தும் கோயிலுக்குரியதுதானா என்று தெரியவில்லை) அடுத்ததாக மகேந்திரப்பள்ளி திருத்தலத்தை வந்தடைகிறோம். சிதம்பரம்-சீகாழி வழித்தடத்தில் கொள்ளிடத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். இயற்கை வளம் பூரித்து நிற்கும். அழகிய கிராமம். தேவருக்கு பிரஹஸ்பதி தவமியற்றி இறைவனை வழிபட்ட தலம். குருவோடு தேவேந்திரனும் தேவர்களும் இத்தலத்தை வந்தடைந்து ஈசனை வழிபட்டனர். மகேந்திரன் எனப்படும் இந்திரன் வழிபட்டதால் மகேந்திரப்பள்ளி எனப்பட்டது.

இறைவன் திருமேனியழகர், சந்திரன் வழிபட்டதால் சோமசுந்தரர். இறைவி வடிவாம்பாள். மற்ற இடங்களில்லாத புதுமையாக தாழை இங்கு தலவிருட்சமாக உள்ளது. கோயில் எதிரே இந்திரன் தோற்றுவித்த மகேந்திர புஷ்கரணி மிக அழகாகக் காட்சியளிக்கிறது. மிகப்பழமையான கோயில். கிழக்கு நோக்கிய வாயில். மூன்று நிலைகளுடைய சிறிய ராஜகோபுரம். விநாயகர், காசி விஸ்வநாதர், திருமால், பைரவர், சூரியன், சந்திரர் இரண்டு சண்டிகேஸ்வரர்கள் ஆகியோரை வெளிப்பிராகாரத்தில் கண்டு வணங்குகிறோம்.

வலப்புறம் தெற்கு நோக்கிய அம்பிகை சந்நதி உள்ளது. சந்நதிக்கு எதிரே சிவலிங்கம் இருக்கிறது. நடராஜர் சபையில் சிவகாமியும், மாணிக்கவாசகரும் உள்ளனர். கருவறையில் சோமசுந்தரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். பாணம் வழவழவென்று இருப்பதால் ஒளி விடுகின்றது. துவார கணபதியையும் மூலவரையும் தரிசித்து கருவறைக்குப் பின்புறம் தேவியருடன் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வணங்குகிறோம். அருணகிரியார் இங்கும் ஒரு திருப்புகழ் பாடியுள்ளார்:

‘‘அன்பருடன் தவசேந்து மாதவர்
புண்டரிகன் திருபரங்கர் கோவென
அஞ்சலெனும்படி போந்து வீரமொடசுராரை
அங்கமொடுங்கிட மாண்டொட ஆழி
கள் எண்கிரியும் பொடி சாம்பர் நூறிட
அந்தகனும் கயிறாங்கை வீசிட விடும் வேலா
செண்டணியுஞ்சடை, பாந்தள, நீர், மதி,
என்பணியன், கன சாம்பல் பூசிய
செஞ்சடலன் சுத, சேந்த, வேலவ, முருகோனே!
திங்கள் முகந்தன சாந்து மார்பினள்
என்றனுளம் புகு பாங்கி மானொடு
சிந்தை மகிழ்ந்து மயேந்த்ர மேவிய
பெருமாளே!’’

‘‘தேவர்கள், மகாதவசிகள், பிரம்மன், திருமால் (திரு-பாங்கர்) இவர்களெல்லாம் ஓலமிட, அவர்களை ‘அஞ்சாதீர்கள்’ எனும்படி வீரத்துடனே சென்று அரக்கர்கள் உடல்கள் இறந்தொழியவும், கடல்களும், எட்டு மலைகளும் பொடி தூளெழவும், யமனும் தன் பாசக்கயிற்றை வியப்புடன் வீசவும் வேலாயுதத்தைச் செலுத்தியவனே! பூச்செண்டணிந்துள்ள சடையில், பாம்பு, கங்கை நீர், பிறை, எலும்பு இவற்றை அணிந்தவன் மற்றும் உயர்ந்த திருநீற்றைப் பூசிய தேகத்தினனும் ஆகிய சிவபிரானது குமாரனே! செவ்வேளே! வேலனே! முருகோனே!

சந்திரன் போன்ற திருமுகத்தையும், ஸ்தனங்களில் சந்தனம் பூசப்பட்டும், எனதுள்ளத்தில் புகுந்துள்ள தோழி வள்ளியுடன் (பாங்கி மான்) உள்ளம் மகிழ்ந்து மயேந்திரம் எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!’’சிறிய ஸ்படிக லிங்கம், ருத்ராக்ஷ லிங்கம், சுந்தரேஸ்வரர்-காந்திமதி திருவடிவங்கள், சண்டிகேஸ்வரர், சனிபகவான் ஆகியோரை தரிசித்து வெளியே வருகிறோம். அடுத்ததாக நாம் மாதானை எனும் திருத்தலத்திற்குச் செல்லவிருக்கிறோம். சீகாழி-தென்திருமுல்லை வாயில் தடத்தில் 5 கி.மீ. தொலைவிலுள்ளது, மாதானை. பசுபதீஸ்வரர் கோயில் இருக்குமிடத்தைத் தேடிக்கண்டுபிடித்தபோது, அது முற்றிலும் புதிய ஒரு கோயிலாக விளங்கியது.

அருணகிரி நாதர் பாடிய இந்தத் தலம் குறைந்தபட்சம் 600 ஆண்டுகள் புராதனமாக இருக்க வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது. குருக்களிடம் விசாரித்தபோது 1935ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் புராதன மாதானை கோயில் முற்றிலுமாகச் சேதமடைந்துவிட்டதாகக் கூறினார். துபாயில் வசிக்கும் சீகாழி அன்பர் ஒருவரின் முழு உழைப்பின் காரணமாக இப்போதுள்ள புதிய கோயில் கட்டப்பட்டதாம். பசுபதீஸ்வரர், அம்பிகை பெரியநாயகி, எதிரிலுள்ள நந்தி மற்றும் பலிபீடம் இவை மட்டுமே பழைய கோயிலைச் சேர்ந்தவை என்றும் மற்ற அனைத்தும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டவை என்றறிந்து வியக்கிறோம்.

பிரதான வாயில் வழியாக உள்ளே நுழையும்போது வலப்புறம் சூரியன், பைரவர், அகோர வீரபத்ரர் ஆகியோரையும், இடப்புறம் சந்திரனையும் வணங்கலாம். வெளியே லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரை வணங்குகிறோம். முருகன் வள்ளிதெய்வயானையுடன் காட்சி அளிக்கிறார்.

‘‘கோடான மேருமலைத் தனமானார்
  கோமளமான வலைகிகுழலாதே
நாடேறு மேன்மை படைத்திடவேதான்
  நாயேனையாள நினைத்திடொணாதோ
ஈடேற ஞானமுறைத் தருள்வோனே
  ஈராறு தோள்கள் படைத்திடுவோனே
மாடேறும் ஈசர்தமக் கினியோனே
  மாதானை ஆறுமுகப் பெருமாளே’’

- என்பது மாதானைத் திருப்புகழ் ஆகும். மாதானையிலிருந்து புறப்படும் நாம், சம்பந்தர் பெருமான் சிவஜோதியில் கலந்திட்ட திருத்தலமான ஆச்சாள்புரத்தை நோக்கிச் செல்கிறோம்.

(உலா தொடரும்)

- சித்ரா மூர்த்தி