படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே... வேங்கடவா!



குலசேகராழ்வார் அவதார நன்னாள் - 17 - 2 - 2019

‘‘மகனே  இன்று என் உடல் நலம் இல்லை. அரசவையில் ராமாயண சொற்பொழிவை, நீ நிகழ்த்த வேண்டும் என் செல்வமே’’ என்று அந்த முதிய வேத வித்து மகனுக்கு கட்டளையிட்டார். ‘‘நம் அரசரின் போக்கு விந்தையாக உள்ளது தந்தையே, பொருள் சேர்ந்தால் செருக்கில் ஆடும் பலர் மத்தியில், நம் மன்னர் சோழனையும், பாண்டியனையும் வென்ற பின்பும், பக்தியில் லயிக்கிறார். மன்னர்கள் பலர், இவர் முன் கை கட்டி நிற்க, இவர் ராமச்சந்திரனின் சந்நதியில் கை கட்டி பவ்யமாய் நிற்கும் அழகே அழகு.’’

‘‘சேரர் குலத்திற்கே அணியாக விளங்குகின்றார், நம் மன்னர். அவரது தந்தை மாமன்னர் திடவிரதர், அவருக்கு குலசேகரன் என்று பெயர் வைத்தார் போலும்.’’ ‘‘ஆம் தந்தையே, திடவிரத மன்னர் ராமனை எண்ணி தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை அல்லவா நம் மன்னர்? அதனால்தானே அவரும் ராமனின் நட்சத்திரமான புனர்பூசத்திலே அவதரித்தார்.’’ “மறுக்க முடியாத உண்மைகள் மகனே. சரி. இன்று ராமாயணம் சொல்லுகையில் கவனம் அதிகம் ள் மகனே.’’

முன்பு ஒரு நாள் ராமாயண சொற்பொழிவில் பாதகி சூர்பணகை சொல் கேட்டு, கர தூஷணன் முதலிய பதி்நான்காயிரம் அசுரர்கள், ஒற்றை ராமனை எதிர்க்க வந்த, ஆரண்ய காண்டத்து பகுதியை வர்ணித்துக் கொண்டிருந்தேன். அப்போது நம் மன்னர் என்ன செய்தார் தெரியுமா?” ‘‘என்ன நடந்தது தந்தையே?  சொல்லுங்கள்’’‘‘என்ன அதர்மம்? என் ராமனை பதினான்காயிரம் அசுரர்கள் எதிர்ப்பதா? அதைப்பார்த்து நானும் மரமாய் நிற்பதா? திரட்டுங்கள் நம் படையை கொட்டட்டும் போர் முரசு. அந்த அசுரர்களுக்கு மரணம் என்னும் பரிசு தருவேன்’’ என்று கொக்கரித்து படையைத் திரட்டி ராமனுக்கு உதவ கிளம்பியே விட்டார், நம் மன்னர். பின்பு ஒரு வழியாக ராமனே அவர்களை தனித்து வென்றான் என்பதை நான் அவருக்கு உணர்த்த பட்ட பாடு .... அப்பப்பா அந்த ராமன்தான் அறிவான்.

‘‘வியப்பாக உள்ளது அப்பா, மூவேந்தர்களை வென்ற களிப்பில், ஆடாமல், மெய் ஞானம் பெற தெய்வங்களில், சிறந்த தெய்வம் யார்? என அறிய விழைந்தாரே, யாருக்கு வரும் இந்த மாண்பு.’’ ‘‘நம் மன்னர் அரசரில் மாணிக்கமடா. ஆதிமூலமே என்று ஒரு பாமர யானை ஓலமிட்டது. அதைக் கேட்டு, மற்ற தேவர்கள் அனைவரும் மூலன் நான் இல்லை என்று ஒதுங்கி நின்றனர். அப்போது, அறை குலைய, தலை குலைய, புள்ளூர்ந்து வந்த மாலவன் தான் முதல் மூர்த்தி என்று உணர்த்த நம் மன்னர் செய்ததை அறிவாயா?”

‘‘ம்... அறிவேன். அதன் பின்பு சதா நாராயணாஹரே என்று பக்தியில் திளைக்கிறார். அது மட்டுமா? அறுபதாயிரம் ஆண்டுகள் மாலவனை பூஜிப்பதை விட, ஒரு நாள் அவன் அடியவரை பூஜிப்பதே சிறந்தது என்று உணர்ந்து, சதா அடியவர் சேவையில் திளைக்கிறார். வேதம் கற்ற நம்மிடம் கூட இந்த ஈடுபாடு இல்லை அப்பா. அந்த தெய்வீக பக்தியை மெச்சி மாலவனின் படை தளபதியான விஷ்வக்சேனரே வந்து அவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து, ஸ்ரீவைஷ்ணவ நெறியை உபதேசமும் செய்து அருளி உள்ளாரே?”
‘‘அதனால்தான் சொல்கிறேன், இன்று ராமாயணம் சொல்லும் போது, நன்கு அவர் மனம் குளிரும் வண்ணம் கூறி நல்ல பெயர் எடு மகனே”

“நிச்சயமாக அப்பா” என்று அவர் தனையன் அரசவை செல்கிறான். அரசவையில்..... “வஞ்சகன் ராவணன் ராமனை நேரில் எதிர்க்கத் துணிவின்றி மாறு வேடம் தரித்து சீதா பிராட்டியை கவர்ந்து செல்கிறான் தென் இலங்கைக்கு.” என்று மனமுருக திவ்யமாக ராம கதையை சொல்கிறார் அந்த உபந்யாசகரின் மகன்.“என் தாயை ஒரு அரக்கன் கவர்ந்து செல்ல பார்த்துக் கொண்டு நிற்பேனா? நான். வாருங்கள் கோழிக்கோடு வாழ் பிரஜைகளே! செல்வோம் இலங்கைக்கு, வெல்வோம் ராவணனை, மீட்போம் பிராட்டியை. வஞ்சகன் ராவணனின் நெஞ்சைப் பிளக்கத் துடிக்கிறது கரம்.” என்று ஆர்ப்பரித்து கிளம்பி விட்டார் குலசேகர ஆழ்வார் போர் புரிய.

“ கடலே நடுவில் வந்தாலும், விடேன் இந்த முயற்சியை. ராமனின் அடியவரான நமக்கு நமது கால்களே படகு. ம்... செலுத்துங்கள் படையை கடலில்” என்று கடலுக்குள் நடக்கத் தொடங்கினார் குலசேகர ஆழ்வார். சமுத்ர நீர் அவர் கழுத்தளவு வந்து விட்டது. அனைவரும் செய்வதறியாது சிலை போன்று நின்றனர். ஆயின் சிலையாய் நின்ற கோமகன் ராமன் அழகாய் காட்சி தந்தார் குலசேகர ஆழ்வாருக்கு.‘‘அன்பனே குலசேகரா! நில். நான் சபரியின் வழிகாட்டுதலின் பேரில் சுக்ரீவனின் தோழமை பெற்று, பாலம் கட்டி இலங்கை சென்றேன். ராவணனைக் கொன்றேன். சீதையை மீட்டேன். கவலையை விடு’’ என்றான் ராமன்.

‘‘பிரபோ. தாயாரை மீட்க உதவாத பாவியாகிவிட்டேன். அய்யோ கெட்டேன்’’ என்று மனம் உடைந்தார் ஆழ்வார். ‘‘அன்பனே நீ என்று என்னை பிரிந்தாய்? என்றும் என் நெஞ்சில் திரு மகளோடு போட்டி போட்டுக்கொண்டு சமமாய் இருக்கும், கௌஸ்துப மணியின், அம்சம் அல்லவா நீ? கவலையை விடு. ஆசிகள்.” என்று கூறி மறைந்தான் மாதவன். ஆயின் அவன் திருவுருவை இதயச் சிறையில் பூட்டினார் ஆழ்வார். ராமனின் சரிதத்தை ராமனின் வாயால் கேட்ட மகான்.

‘‘மன்னா! இந்த ராமநவமி விழாவில், ராமனின் ரத்ன பதக்கத்தை திருடும் அளவு துணிவு நீங்கள் ஆராதிக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களை தவிர, வேறு யாருக்கும் இல்லை. அவர்களை விசாரியுங்கள்’’ என்றார், ஒரு அமைச்சர். இந்த அவச் சொல்லைக் கேட்டு, இடி கண்ட சர்ப்பம்போல் துடித்து செவிகளை மூடி, ராம... ராம... என்றார் நம் குலசேகர ஆழ்வார்.
“மூன்று ஆசைகளையும் துறந்தவர்களே மாலவன் அடியார்கள். அவர்கள் மீது இப்பழி சுமத்துவது அபாண்டம். ஆயினும் மன்னன் நடுநிலை தவறல் ஆகாது. சரி, ஒரு குடத்தை அவை மத்தியில் வையுங்கள். அதில் நச்சரவம் ஒன்றை இடுங்கள். இங்கு இருக்கும் வைஷ்ணவர்கள் உத்தமர்கள் என்று அதில் நான் என் கரத்தை விடுகிறேன். என்னை அரவம் தீண்டாமல் இருந்தால் இந்த அடியவர்கள் அதை களவாட வில்லை என்று பொருள். சம்மதம் தானே?” என்றார் பக்தி வேந்தன் குலசேகரன்.

‘‘இவர்களுக்காக தாங்கள் உயிரை பணையம் வைக்க வேண்டுமா?’’ என்று விஷயம் வேறு திசையில் சென்றதை கண்டு பதிங்கினார் அமைச்சர். ‘‘பழி என்று வந்தால் மக்களும் மன்னவனும் சமமே. இங்கு நீங்கள் பழி சுமத்தும் அடியார்களை, நானே இங்கு கொண்டு  வந்தேன். ஆகவே பழி என் மேல் தான் சுமத்தப்படுகிறது. ஆகவே நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் என்னுடையதே.... ஆணையை நிறைவேற்றுங்கள்.” என்று கட்டளை இட்டார், மன்னர் பெருமான்.

அரவம் உள்ள குடம் வந்தது. மேடையில் வைக்கப் பட்டது. திகைப்பின் உச்சியில் மக்களும் அமைச்சர்களும். “ கோழிக் கோடு வாழ் பிரஜைகளே! சிறப்பாக நிகழும் ஸ்ரீராம நவமி விழாவில், திருடி குந்தகம் விளைவித்தது அடியார்களே எனில், மாலவன் சாட்சியாக உரைக்கிறேன், இந்த பாம்பு எம்மை தீண்டட்டும் . வாழ்க ராமனின் புகழ் வெல்க அவன் கழல். ஜெய் ராம்.” என்று கூறி கையை குடத்தில் இட்டார். பரந்தாமன் அடியவரை பாம்பு தீண்டுமா? இவர் கையை உள்ளே விட்டதும் அது மெல்ல வெளியே சென்று விட்டது.

“என்ன? அமைச்சரே பார்த்தீர்களா? மாலவன் அடியவரில் பாவிகளே கிடையாது என்பதை உணர்ந்தீர்களா. “ என்றார் மன்னவர். ஆயின் அமைச்சரைக் காணவில்லை. ஆனால் அவர் குரல் மட்டும் கீழிருந்து கேட்டது. “ மன்னர் மன்னவா எம்மை மன்னித்து விடுங்கள் . அரசாங்க கஜானா, நீங்கள் அடியவர்களுக்கு தானம் அளிப்பதால் வீணாகிறது என்று எண்ணி, இந்த சூழ்ச்சியை புரிந்தேன். தங்கள் பக்தியின் ஆழம் கண்டு திருந்தினேன். மன்னியும் அய்யனே.”

குரல் கேட்டு மன்னவர் குனிந்தார். பாதத்தில் இருந்த அமைச்சரைக் கண்டு, “தங்களுக்கு மக்கள் மீது உள்ள அன்பைக் கண்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள். ஆயினும் நீங்கள் செய்தது குற்றம் என்பதை விட அது ஒரு மகா பாபம். உங்கள் மீது கொண்ட கருணையால் நீங்கள் நரகில் இடர் படா வண்ணம் ஒரு தண்டனை தருகிறேன் சரி தானே.
“உத்தரவிடுங்கள் அய்யனே, தங்கள் சித்தம் என் பாக்கியம்.”

“ம்... அடியார்க்கு தினந்தோறும் அமுது படைத்து பூஜை செய்யுங்கள். விரைவில் பாவம் நீங்கி மோட்சம் கிட்டும். இதுவே என் கட்டளை.” என்று தவறு செய்த அமைச்சரையும் நரகில் இடர் படாவண்ணம் காத்து விட்டார் குலசேகர ஆழ்வார். கோழிக்கோடு வாழ் பிரஜைகளே, என் அன்பிற்கு இனிய மனையாளே, மகனே திடவிரதா, ( தந்தையின் பெயரை மகனுக்கு சூட்டி உள்ளார்) மகளே இளை, நான் சொல்வதை கேளுங்கள். அரியணை சுகமும், அரச கிரீடமும், போகமான இல் வாழ்வையும், வெறுத்து விட்டேன். இனி அரங்கனையும், வேங்கடவனையும் கண்ணாறக் கண்டு, வாயாரப் பாடுவதே, கடைத்தேற வழி என்று உணர்ந்தேன். இல்லறம் துறந்து துறவறம் பூணப்போகிறேன். விடை கொடுத்து அனுப்புங்கள். என் மகன் திடவிரதன் உங்களைக் கண்ணிமை போல பாதுகாப்பான்.” என்று அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தினார், குலசேகர ஆழ்வார்.

‘‘நில்லுங்கள் அப்பா’’ என்று ஒரு குரல். ‘‘பிறந்து மொழி பயின்றது முதல் தங்களோடே இருந்தவள் இந்த இளை. தங்களோடு மாலவனின் புகழைக் கேட்டே வளர்ந்தவள். நானும் தங்களைப் போல் மாலவனே கதி என்று வாழ்கிறேன். ஆகையால் அழைத்து செல்லுங்கள் எம்மையும்” என்றாள் இளை என்ற அவர் பெற்ற பெண். அதை கேட்டு மிகவும் மகிழ்ந்தார் ஆழ்வார். ‘‘என் ஞான தோட்டத்தில் பூத்த பூவே! வா மாலவன் அடி சேர செல்லலாம்’’ என்று மறுப்பு கூறாமல் அழைத்துச் சென்றார். மகளின் பக்தியின் பக்குவத்தை தந்தை அறிய மாட்டாரா?

ரங்கத்திற்கு தரிசனம் செய்ய வந்தனர் குலசேகரரும் அவர் செல்வ மகளும். இருவரும் ரங்கா ரங்கா என்று ஆனந்த வெள்ளத்தில் இருந்தனர். அப்போது உணர்ச்சி மேல் இட சந்நதிக்குள் ஓடினாள் இளை. ரங்கனோடு இரண்டறக் கலந்தாள். ‘‘என் மனம், மகள் இரண்டையும் கரிய மால் கொண்டு போனானே’’ என்று இன்பம் கலந்த துன்பத்தில் வாடினார் ஆழ்வார். அடியவரை வாட விடுவானா மாலவன். பேசினான் அசரீரியாக , ‘‘அன்பனே குலசேகரா.... திருவிலேன் ஒன்றும் பெற்றிலென் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே’’ என்று வருந்தினாய் அல்லவா? ஆதலால் என் தேவிமாரில் ஒருவரான நீளா தேவியை உமக்கு மகளாய் தந்தோம். இன்று முதல் எனக்கு மாமன் ஆக போற்றப்படுவாய். வாழ்க நீ. வளர்க உம் பக்தி தொண்டு’’ என்று மாலவனின் இந்தக் குரலை கேட்ட பின் ஆழ்வார் அடைந்த இன்பத்தை சொல்லவும் வேண்டுமா? பேரானந்தத்தின் எல்லைக்கே சென்று மாலவன் கருணையை எண்ணி எண்ணி உருகினார்.

பல தலங்கள் சென்று மாலவனின் புகழ் பாடினார். கலியுக வரதன் வேங்கடவனைக் காண ஏழுமலைக்கு விஜயம் செய்தார். மாலவன் அழகில் மனத்தைத் தொலைத்தார்.
“வீணாக வாழ்வை தொலைகின்றேனே. ஹே ஸ்ரீநிவாசா உன் சந்நதியின் வாசல் படியாக இருக்க வரம் கொடுப்பாய் . படியாய் இருந்து உன் பவளவாய் கண்டு கண்டு இன்புறுவேன் என்று அழுதார் தொழுதார் . வேண்டியதை தருபவன் வேங்கடவன் இல்லையா? “ குலசேகரா! என் அன்பனே! இந்த திருப்பதியில் மட்டும் இல்லை வேறு எப்பதியிலும் என் சந்நதியின் படியாய்க் கிடந்து என் பவள வாய் காண்பாய். ஆனது பற்றி என் சந்நதியின் வாசல் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படும். ஆசிகள்” என்று அருளினான்.

ஜி.மகேஷ்