கர்மயோக ரகசியம்!



கீதையின் தொடக்கமாக வரும் விஷாத யோகம் முடிந்தாயிற்று. அடுத்து சாங்கிய யோகத்தையும் பிரித்துப் பிரித்து நூலிழை கணக்காக விவரித்தாயிற்று. ஆனாலும், குழப்ப ரேகைகள் அர்ஜுனனின் முகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. கண்ணன் தேரில் நின்றபடி தன் எதிரே வாய்பொத்தி அமர்ந்திருக்கும் அர்ஜுனனை உற்றுப் பார்க்கின்றான். சாங்கிய யோகம் முழுவதும் ஒரு ஜீவனின் லட்சியம் என்னவென்று கூறப்பட்டது. தனிப்பட்ட ஜீவனின் எல்லைகளையும் அகங்காரத்தின் நிலையின்மையும் குறித்து விவரிக்கப்பட்டது. நீ எதுவாக இருக்கிறாயோ அதுவே பிரம்மம்.

அதற்கு நடுவே நீ பார்க்கும் எவையும் கானல் நீர்போலத்தான் எனவே, நீ இப்போது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிடு. வாழ்வு உன் வழியே அதைத்தான் கோருகின்றது என்று கூறிய பின்னும் அர்ஜுனன், ‘‘எதிரே இருப்பவர்கள் என் சகோதரர்கள், என் பெரியப்பா, சித்தப்பா, ஆச்சார்யார்கள். நான் எப்படி அவர்கள் மீது போர் தொடுப்பேன்…’’ என்று கூற கிருஷ்ணர் புன்னகை பூத்தார். அர்ஜுனா உனக்கு மேலிரு தத்துவங்கள் எதுவும் புரியவில்லை. அப்படி புரிந்திருந்தால் நீ இந்நேரம் இப்படிப் பேசமாட்டாய். வா… உனக்கு கர்ம யோகம் என்றொன்று இருக்கின்றது. அதைக் கூறுகின்றேன் என்று கர்மயோகத்தின் ரகசியத்தினை எடுத்துரைத்தார்.

சுவாமி விவேகானந்தர் முதல் காந்தி வரை தங்கள் வாழ்வு முழுவதும் இந்த கர்ம யோகத்தை புரிந்து கொண்டு செயலாற்றினர் எனில் அது மிகையில்லை. உங்களால் பார்க்கப்படும் பிரபஞ்சத்தில் ஏதேனும் ஒருவிதத்தில் செயல்பட்டே ஆக வேண்டும். அதுவும் மிகச் சரியாக… உங்களுள் இருக்கும் ஒருவன் பூரண நிறைவுறுவது வரை நீங்கள் செயல்புரிய வேண்டும். ஒரு சிற்பி பாறையின் கடைசி செதுக்கல் வரை இழைப்பதுபோல செயல்பட வேண்டும். புல்லாங்குழல் இசைப்பவன் தன்னை மறந்து ராகத்தில் கரைவதுபோல கர்ம யோகத்தைச் செய்ய வேண்டும். ஒரு சிற்பி பாறை வழியே தன் இதயத்தை கண்டு கொள்வான்.  புல்லாங்குழலின் வழியே தன் அகம் திறந்து கொள்வதை அவன் வாசிக்கும் கணம் தோறும் அறிந்தபடி இருப்பான். 

அதனாலேயே கீதாச்சார்யான் அர்ஜுனா உன் அம்பராத் துணியில் ஒரு அம்பையும் மீதம் வைக்காதே என்கிறான். நாமறிந்த நம் மனம் மிகமிக ஆழம் குறைவானது. ஆனால், மனம் தாண்டிய பிரபஞ்சம் பிரமாண்டத்தோடு இணைந்தது. அது உங்களை கருவியாக்கி ஏதேனும் செய்யும். அதனாலேயே சிறு குச்சியை எடுத்து அப்பால் போடுவது முதல் பெரிய காரியங்கள் வரை செயல்பட வேண்டும். செயலின் தீவிரம் அதிகமாகும் கணந்தோறும் நீங்கள் யாருடனும் ஒப்பிட முடியாதவர் என்று புரியும். அவரவர்க்கு ஒரு தனித்தன்மை உண்டென்றும் அதன் வழியே அவரவர்க்குரிய செயல்கள் வெளிப்பாடு கொள்கின்றன என்பதும் தெரியவரும்.

செயலின் ரகசியம் புரியப் புரிய, ‘‘எனக்கு இதனால என்ன கிடைக்கும்’’ என்று அவன் கேட்பதில்லை. காலம் கைகட்டி அவனிடம் ஏவல் தொழில் செய்யும். அவனுக்கு வேண்டியதை அவனுள் இருக்கும் ஒரு சத்திய வஸ்து தள்ளிக் கொண்டேயிருக்கும். அதனால்தான் ராமகிருஷ்ணர் உள்ளே உழையுங்கள். கவலைப்படாதீர்கள். தேவி தள்ளிக் கொண்டேயிருப்பாள் என்று அடிக்கடி கூறுவார். கர்மயோகம் என்பது தன் எதிரே பிரபஞ்ச சக்தி எதை, யாரை நிறுத்துகின்றதோ அதற்குரியவாறு செயல்படுதல். செயலே கர்மம் என்கிற பந்தத்திலிருந்து உங்களை விடுவிக்கும் ரகசியச் சாவி. அதனாலேயே செயல்படு… செயல்படு… என்று கீதையில் கண்ணன் ஓயாது கூறிக் கொண்டேயிருக்கின்றான். நான் இந்த உலகத்தில் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவும் செயல்பட்டால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

-கிருஷ்ணா(பொறுப்பாசிரியர்)